இந்தோனேசியாவில் 131ஆம் ஆண்டு விழாவில் இறையழைத்தலையும் மறைப்பணியையும் பகிர்ந்த MSF குருக்கள் | Veritas Tamil
இந்தோனேசியாவில் தூய குடும்ப மறைப்பணியாளர்கள் (Missionaries of the Holy Family – MSF) சபையின் 131ஆம் ஆண்டு விழா, செப்டம்பர் 28ஆம் தேதி தெற்கு ஜகார்த்தாவில் உள்ள ஜெபமாலை அன்னை பங்கில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
திருப்பலி கொண்டாட்டத்திற்குப் பின்னர், வழக்கமான மறையுரைக்குப் பதிலாக, MSF குருக்கள் தங்களது மறைப்பணி அனுபவங்களையும், இறையழைத்தல், துன்பங்கள் மற்றும் சகோதரத்துவ வாழ்வில் தாங்கள் கண்ட மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.
18 ஆண்டுகளாக குருத்துவப் பணியாற்றி வரும் அருட்தந்தை பிமோ ஹந்தோகோ MSF, தன்னுடைய ஒவ்வொரு பணிநியமனத்தையும் இறைவன் அளிக்கும் அழைப்பாக கருதி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். தமக்கு வழங்கப்படும் பணிகளைப் பற்றி ஒருபோதும் பேரம் பேசியதில்லை என்றும் அவர் கூறினார்.
பல்வேறு பகுதிகளில் மறைப்பணியாற்றிய அருட்தந்தை ருஸ்வான் MSF, மக்களின் ஆன்மிகத் தேவைகள் எங்கு இருக்கின்றனவோ அங்கு செல்லத் தயாராக இருப்பதே மறைப்பணியின் ஒரு முக்கிய அம்சம் என்று குறிப்பிட்டார்.
MSF சபையின் சகோதரத்துவ வாழ்வு தமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக அருட்தந்தை அன்டோனியுஸ் ஃபெரி MSF கூறினார். ஒருவருக்கொருவர் தங்களது மகிழ்ச்சிகளையும், சிரமங்களையும் பகிர்ந்து கொள்வதும், இளைய குருக்களுக்கு மூத்தவர்கள் வழங்கும் வழிகாட்டுதலும் சபை வாழ்வின் முக்கிய பலமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இளைய குருக்களில் ஒருவரான அருட்தந்தை ஜியோவானி மகேந்திரா கிறிஸ்தி MSF, MSF சபையில் தாம் கண்ட சகோதரத்துவ உணர்வே தமது இறையழைத்தலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று பகிர்ந்து கொண்டார். சிறுவயதில் MSF குருக்கள் பணியாற்றிய பங்கில் பெற்ற அனுபவம், பின்னர் சபையில் சேருவதற்கான ஆர்வத்தை உருவாக்கியதாக அவர் கூறினார்.
அருட்தந்தை புத்தியோனோ MSF, குருத்துவப் பயிற்சிக் காலத்திலேயே MSF குருக்கள் கடினமான பகுதிகளில் ஆற்றிய மறைப்பணியைப் பற்றிய செய்திகளால் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்தார். குறிப்பாக கலிமந்தான் போன்ற தொலைதூரப் பகுதிகளில் அவர்கள் மேற்கொண்ட பணிகள், மறைப்பணி வாழ்வைத் தேர்ந்தெடுக்க அவரைத் தூண்டியதாக அவர் கூறினார்.
41 ஆண்டுகளாக குருவாகவும், 48 ஆண்டுகளாக துறவற வாழ்விலும் இருக்கும் அருட்தந்தை சுலிஸ்தியோ த்வி நுக்ரஹோ MSF, கலிமந்தானில் தாம் மேற்கொண்ட கடினமான மறைப்பணியை நினைவுகூர்ந்தார். மோசமான சாலைகள் மற்றும் காடுகள் நிறைந்த பகுதிகளில் பயணம் செய்ய வேண்டியிருந்ததால், சில நேரங்களில் பயணத்தை ஒரே நாளில் முடிக்க முடியாமல் வழியிலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
அந்த கடினமான அனுபவங்கள் உடல்நலத்தையும் பாதித்தபோதிலும், தாம் கனவு கண்ட மறைப்பணி அழைப்பை வாழ முடிந்ததற்காக இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்.
குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மத்தியில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த உதவுவதிலேயே தமது மிகப்பெரிய மகிழ்ச்சியை காண்பதாக அருட்தந்தை ரூபினுஸ் ஹெர்லம்பாங் MSF தெரிவித்தார். மேலும், இறையழைத்தல்கள் குடும்பங்களிலிருந்தே உருவாகின்றன என்பதை நினைவூட்டிய அவர், நாசரேத்து திருக்குடும்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு அன்பும் பாதுகாப்பும் நிறைந்த குடும்பங்களை உருவாக்குமாறு விசுவாசிகளை ஊக்குவித்தார்.
MSF சபையின் முன்னாள் உறுப்பினரான ஹரி பத்மாவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். குருக்களின் அனுபவப் பகிர்வுகள் தமது துறவற வாழ்வு அனுபவங்களை நினைவுபடுத்தியதாக அவர் தெரிவித்தார். தற்போது சபையின் உறுப்பினராக இல்லாவிட்டாலும், MSF உடன் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் தன்னை தொடர்ந்து அந்த சமூகத்துடன் இணைந்திருக்கச் செய்வதாக அவர் கூறினார்.
MSF சபையின் 131ஆம் ஆண்டு விழா, இந்தோனேசியாவில் மறைப்பணியாற்றும் குருக்களின் இறையழைத்தல், தொலைதூரப் பகுதிகளில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், சகோதரத்துவ வாழ்வு மற்றும் குடும்பங்களை வழிநடத்தும் பணியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.
