பிலிப்பீன்ஸின் கலிபோ மறைமாவட்டம் பொன்விழா: ஒன்றிணைந்த பயணம், நற்செய்தி அறிவிப்பு, மறைப்பணிக்கு புதிய அர்ப்பணிப்பு | Veritas Tamil
மத்திய பிலிப்பீன்ஸின் மேற்கு விசயாஸ் (Western Visayas) பகுதியில் உள்ள அக்லான் (Aklan) மாகாணத்தின் கலிபோ மறைமாவட்டம், ஜூலை 15 அன்று தனது பொன்விழாவை திருப்பலியுடன் சிறப்பாகக் கொண்டாடியது. நாடு முழுவதிலுமிருந்து திருஅவைத் தலைவர்கள் இதில் பங்கேற்று, இறைமக்கள் ஒன்றிணைந்த பயணம், நற்செய்தி அறிவிப்பு மற்றும் மறைப்பணிக்கான தங்கள் அர்ப்பணிப்பை புதுப்பித்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர்.
கலிபோவிலுள்ள திருமுழுக்கு யோவான் பேராலயப் பங்கில் நடைபெற்ற பொன்விழா திருப்பலிக்கு, பிலிப்பீன்ஸிற்கான திருத்தந்தையின் அரசுத் தூதர் பேராயர் சார்ல்ஸ் பிரவுன் தலைமை தாங்கினார். மணிலா பேராயர் கர்தினால் ஜோசே அட்வின்குலா உட்பட சுமார் 26 ஆயர்கள் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர்.
தமது மறையுரையில், கலிபோ மறைமாவட்டம் 1976ஆம் ஆண்டு புனித ஆறாம் பவுல் திருத்தந்தையால் நிறுவப்பட்டாலும், அக்லான் பகுதியில் கத்தோலிக்க விசுவாசம் 1581ஆம் ஆண்டு ஆகுஸ்தீனிய மறைப்பணியாளர்களின் வருகையிலிருந்து வேரூன்றியுள்ளதாக பேராயர் பிரவுன் நினைவுகூர்ந்தார்.
திருஅவை, அருளடையாளங்கள் வழியாக உலகிற்கு கிறிஸ்துவாகிய "வாழ்வளிக்கும் நீரை" வழங்குவதற்காகவே உள்ளது என்றும், அந்த அருட்கொடையை வருங்காலத் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுமாறு உள்ளூர் திருஅவையை அவர் ஊக்குவித்தார்.
பொன்விழாவை முன்னிட்டு உரையாற்றிய கர்தினால் ஜோசே அட்வின்குலா, இந்த ஆண்டு விழாவை கடந்த காலத்தை நினைவுகூரும் நிகழ்வாக மட்டுமன்றி, ஒன்றிணைந்த திருஅவையை (Synodal Church) கட்டியெழுப்புவதற்கான புதிய அர்ப்பணிப்பாகக் கருத வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"ஒன்றிணைந்த திருஅவை என்பது, ஒவ்வொரு உறுப்பினரும் தமக்குத் திருஅவையில் ஓர் இடமும், குரலும், பணியும் இருப்பதை உணரும் திருஅவையாகும்" என்று அவர் கூறினார்.
"நாமே திருஅவை; நாம் ஒன்றாக இருக்கிறோம்" (Kita Simbahan, Kita Kaibahan) என்ற பொன்விழா கருப்பொருளைக் குறிப்பிட்ட அவர், போராடுபவர்கள், ஏழைகள், விசுவாசத்திலிருந்து விலகிச் சென்றவர்கள் மற்றும் நம்பிக்கையையும் வாழ்க்கையின் அர்த்தத்தையும் தேடுபவர்கள் ஆகியோருடன் இணைந்து நடப்பதே ஒன்றிணைந்த பயணம் என்று விளக்கினார்.
மேலும், கலிபோ மறைமாவட்டத்தின் திருக்குழந்தை இயேசு (Santo Niño) மீதான பக்தியை, தாழ்ச்சி, நம்பிக்கை மற்றும் மறைப்பணியின் மகிழ்ச்சிக்கான சிறந்த எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட அவர், குழந்தை மனப்பான்மையுள்ள விசுவாசத்தைத் தங்களின் திருப்பணிக்கும் மேய்ப்புப் பணிக்கும் அடித்தளமாகக் கொள்ளுமாறு இறைமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
திருஅவை தன் சொந்த சமூகத்திற்குள் மட்டுமே தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல், குடும்பங்களுடன் பயணிக்கவும், படைப்பைப் பாதுகாக்கவும், மனித மாண்பைக் காக்கவும், ஏழைகளுக்குப் பணியாற்றவும், சமூகத்தின் ஓரங்களில் வாழ்பவர்களுக்கு நம்பிக்கையைக் கொண்டு செல்லவும் வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
"ஒன்றிணைந்த திருஅவை தன்னையே மையமாகக் கொண்டு இருக்க முடியாது. ஒன்றாகப் பயணிப்பது எப்போதும் நம்மை நற்செய்தியை அறிவிப்பதற்காக வெளியே அழைத்துச் செல்கிறது" என்றும் அவர் கூறினார்.
தனது தனி வாழ்த்துச் செய்தியில், கலிபோ மறைமாவட்ட ஆயர் சிரில் வில்லரியல் அவர்கள், இந்த மறைமாவட்டம் அக்லான் மக்களுக்குக் கிடைத்த "விலைமதிப்பற்ற கொடை" என்று குறிப்பிட்டார். மேலும், பொன்விழா ஒரு நிறைவாக அல்ல, புதிய தொடக்கமாக அமைய வேண்டும் என்றார்.
"ஐம்பது ஆண்டுகள் என்பது ஓய்வைக் குறிக்கவில்லை; மாறாக, புதிய தொடக்கத்தையும் புதுப்பிப்பையும் குறிக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
வயது முதிர்ந்த அருள்பணியாளர்கள், பழமையான திருஅவை கட்டடங்கள் மற்றும் அதிகரித்து வரும் மேய்ப்புப் பணித் தேவைகள் போன்ற சவால்கள் இருப்பதை ஆயர் வில்லரியல் ஏற்றுக்கொண்டார். இருப்பினும், இந்தப் பொன்விழா உள்ளூர் திருஅவையின் மறைப்பணித் துடிப்பைப் புதுப்பிக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
கப்பிஸ் பேராயர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு 1976ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கலிபோ மறைமாவட்டம், ஆயர் சிரில் வில்லரியல் அவர்கள் அதன் ஐந்தாவது ஆயராக பொறுப்பேற்ற மூன்று மாதங்களுக்குப் பிறகு தனது பொன்விழாவைக் கொண்டாடியது.
