பெண்ணே உனக்குத் தோல்வி இல்லை! | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

வெற்றி என்பது அறிவாளிகளின் சொத்தல்ல, அது முன்னேறத் துடிக்கும் உழைப்பாளிகளின் தன்னம்பிக்கை.

“இனி உன்னால் வெற்றி பெறவே முடியாது” என்று எதிராளிகள் ஒவ்வொரு முறையும் சொல்லச் சொல்ல அவர்களின் வார்த்தைகளையும் விமர்சனங்களையும் அச்சமின்றி எதிர்கொண்டு, வெற்றியின் பாதையில் இன்னமும் கால் பதித்துக்கொண்டிருப்பவர் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் என்பவர். மணிப்பூர், மாநிலத்தில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, கிரிக்கெட் அல்லாத ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுத்து எட்ட முடியாத அளப்பரிய சாதனைகளைப் புரிந்துகொண்டிருக்கிறார்.

அப்பாவுக்குத் தெரியாமல் பயிற்சி மேற்கொண்டபோது, திருமணம் செய்துகொண்டபோது, வயது ஏற ஏற தமது திறமையைப் பலரும் எள்ளி நகைத்தபோது என... தன் வாழ்நாளின் ஒவ்வொரு தருணத்திலும் அவர்மீது அவநம்பிக்கை மட்டும்தான் நிழல்போல துரத்தியது. 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற கோடை கால ஒலிம்பிக் போட்டியில், குத்துச் சண்டையில் அரை இறுதிப் போட்டியில் கிரேட் பிரிட்டனின் நிக்கோல் ஆடம்ஸிடம் தோற்றுப்போய், வெண்கலப் பதக்கம் வென்றபிறகு, பலரும் இவரிடம் கேட்ட கேள்வி, “எப்போது ஓய்வை அறிவிக்கப் போகிறீர்கள்?” என்றுதான். இவ்வாறு இவர் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியிலும் இந்தக் கேள்வி இடம் பெறாமல் போனதில்லை. ஒவ்வொரு முறையும் சிரித்துக்கொண்டே, “இப்போது இல்லை” என்று சொல்லி விடுவார்.

மூன்று குழந்தைகளுக்குத் தாயான இவர், உலக மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் தொடர்ச்சியாக ஐந்து முறை தங்கப்பதக்கம் வென்ற முதலாவது இந்திய வீரப் பெண்மணி. 34 வயதான மேரி கோமிடம், "வயசு ஆகிடுச்சு ஆன்ட்டி, நீங்க ஒய்வெடுங்க" என்று கேலி செய்தவர்கள் பலர். விடா முயற்சியும் பயிற்சியும் மேரி கோமுக்குப் புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. கேலி செய்தவர்களுக்குப் பதிலடிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் மேரி கோமுவுக்கு இருந்தது. 2017ஆம் ஆண்டு நடந்த ஆசிய மகளிர் குத்துச் சண்டைப் போட்டியில் அணித் தேர்வுக்காகப் பங்கெடுத்தபோது பலரும் வியக்கும் வண்ணம் இவரது வேகமும் துடிப்பும் இருந்தது. ஆசிய குத்துச் சண்டை போட்டியின் இறுதிப் போட்டியில் வடகொரியாவின் க்யாங் மி கிம்மை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்துத் தங்கம் வென்றார்.

சவால்களைக் கண்டு ஒதுங்கி விடாமல் வாழ்க்கையில் சவால்களோடு ஒவ்வொரு நாளும் போராடும் ஒவ்வொரு பெண்மணிக்கும் மேரி கோம் ஒரு முன்னுதாரணம்.


எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.

Tamil Survey Popup Image