பயணிகளுக்கு ஆட்டோ சேவை இலவசம் | அருட்பணி. ஜெ. ஞானசேகரன் | Veritas Tamil

பயணிகளுக்கு ஆட்டோ சேவை இலவசம்

உழைப்பு வறுமையை மட்டும் விரட்டுவதில்லை; தீமைகளையும் அது விரட்டுகிறது.

குஜராத் மாநிலம், அகமதாபாத் மாவட்டத்தில் சபர்மதி ஆசிரமம் உள்ளது. காந்தி ஆசிரமம் என்று அழைக்கப்படும் இவ்விடத்தில் 1918 முதல் 1933 வரை மகாத்மா காந்தி அவர்கள் வாழ்ந்திருந்தார். ஏராளமான குழந்தைகளும், வெளிநாட்டினரும் வந்துபோகின்ற இடமாக இது இன்றும் உள்ளது. இங்கு வந்தால், உதய்பாய் ஆட்டோவில் பயணம் செய்ய ஆசைப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

அப்படி இந்த ஆட்டோவில் என்ன இருக்கிறது என்று அனைவருக்கும் கேட்கத் தோன்றும். சொகுசு வாகனத்தில் பயணம் செய்தால்கூட இந்த மகிழ்ச்சியைப் பெறுவது கடினம்தான். ஆட்டோவின் ஒரு புறம் தினசரி செய்தித்தாளும், ஏனைய சில வார இதழ்களும், சில நூல்களும் வைக்கப்பட்டிருக்கும். இன்னொரு புறம் உண்பதற்குத் தின்பண்டங்களும் தண்ணீர்ப். பாட்டிலும் வைக்கப்பட்டிருக்கும். குப்பைகளைத் தெருவில் வீசிவிடக் கூடாது என்பதற்காக ஒரு குப்பை போடும் பெட்டியும் வைக்கப்பட்டிருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஆட்டோவின் மீட்டர் எப்போதும் பூஜியம் என்றுதான் காட்டும். அப்படி என்றால் பயணம் செய்பவர்களின் ஆட்டோ வாடகை எவ்வளவு இருக்கும்?

ஆட்டோவில் பயணம் செய்பவர்களின் இடம் வந்ததும் அழகிய கவர் ஒன்றை உதய்பாய் பயணம் செய்தவரிடம் கொடுத்து விடுவார். அதில் “உங்களுக்கான பயணத் தொகையை உங்களுக்கு முன் பயணம் செய்தவர் கொடுத்துவிட்டார். ஆகவே, உங்களுக்கான வாடகை நீங்கள் தர வேண்டாம். ஆனால், உங்களுக்குப் பிறகு பயணம் செய்பவருக்கான வாடகையைத் தாருங்கள்" என்று எழுதப்பட்டிருக்கும்.

“இலவசமாகவும் ஆட்டோவில் பயணிகள் சிலரை ஏற்றியுள்ளேன். சில நேரங்களில் கசப்பான அனுபவங்களும் உண்டு. ஆனால், பயணிகளின் முகத்தில் காணப்படும் மகிழ்ச்சிக்கு முன்னால் கசப்பான அனுபவங்கள் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை” என்று உணர்ச்சி பொங்கக் கூறுகிறார் உதய் பாய்.

பணம் நமது பணியாளனாக இருக்க வேண்டுமே தவிர, நமது எஜமானனாக மாறிவிடக் கூடாது.

அருட்பணி. ஜெ. ஞானசேகரன்

Tamil Survey Popup Image