உடல் ஊனம் தடையில்லை | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
உடல் ஊனமாக இருப்பவரின் உள்ளமும் மனமும் எப்போதும் ஊனமாக இருப்பதில்லை.
கைகளும் கால்களும் நன்றாக செயல்படக்கூடியவர்கள் ஒதுங்கி வாழ்கின்றபோது, உடல் ஊனத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல் தன்னலமின்றிச் சேவை செய்வதைப் பார்க்கும்போது நாம் குறுகிப்போகின்றோம்.
1979ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் நாள் பிறந்த பிரீத்தி சீனிவாசன் சென்னையில் சோல் ப்ரீ (Soul free) என்ற பிரறன்பு அமைப்பின் நிறுவனராகச் செயல்படுகிறார். எட்டு வயதிலேயே தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணியில் விளையாடியவர். மூன்று வயதில் நீச்சல் கற்றுக்கொண்டு தேசிய அளவில் நீச்சல் போட்டியில் பங்கெடுத்தவர். இவர் கால் பதிக்கும் எல்லாத் துறைகளிலும் வெற்றிகண்டவர்.
இவர் பதினெட்டு வயதில் கல்லூரி படிக்கின்றபோது, 1998ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் நாள் பாண்டிச்சேரிக்குச் சுற்றுலா சென்றார். அங்கு நடந்த விபத்தில் இவரது முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயத்தால் கழுத்துக்குக்கீழே உடல் முழுவதும் செயலிழந்தது. தந்தையை இழந்த பிரீத்தியை அவரது தாய்தான் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தார்.
ஒரு நாள் பிரீத்தியின் தாய் தன் மகளைப் பார்த்து, “உன்னைப் பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம். கவனிக்க ஆள் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?" என்ற கேள்விதான் பிரீத்தியை ஒரு நிமிடம் யோசிக்க வைத்தது. இந்த வாரத்தைகள்தான் "சோல் ப்ரீ" என்னும் தொண்டு நிறுவனத்தை ஆரம்பிக்கத் தூண்டியது.
தற்போது மனஇறுக்கத்துடன் இருப்பவர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் வகுப்பு நடத்துகிறார். பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று தன்னம்பிக்கை வகுப்பு நடத்துகிறார். பல கருத்துரைகளும் விழிப்புணர்வுப் பயிற்சிகளும் வழங்குகிறார். உடல் உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கள் வேலைகளைத் தாங்களாகவே செய்யவும், அவர்களுக்கு உதவும் வகையில் சக்கர நாற்காலிகள், மருத்துவ வசதிகளைச் சோல் ப்ரீ நிறுவனம் தற்போது செய்து வருகிறது.
ஊனம் தடைசெய்தாலும் முழு நம்பிக்கையுடன் எழுந்து நடந்து பிறர் சேவை புரிவோர் எத்துணை வீரத் தியாகிகள்!
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.
