பெயருக்கு முகவரி உண்டு | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

அமெரிக்காவில் சிகாகோ நகரில் பேராயராகவும், கர்தினாலாகவும் இருந்தவர் ஜோசப் லூயிஸ் பெர்னார்டின். ஒருமுறை ஸ்டீவன்ஸ் குக் என்ற எய்ட்ஸ் நோயாளி, தன்னைக் கர்தினாலாகிய பெர்னார்டின் பாலியல் பலாத்காரம் செய்ததாக பொய்க்குற்றச்சாட்டை முன்வைத்தார். உடனே முன்னணிப் பத்திரிகைகள் அனைத்தும் இதைத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. அவரின் பேரும் புகழும் முற்றிலும் சேதமடைந்தன.

சிலநாட்கள் கழித்து அந்த எய்ட்ஸ் நோயாளி "என்னுடைய குற்றச்சாட்டு தவறானது" என்று மீண்டும் ஓர் அறிக்கை விட்டார்.

இந்தச் செய்தியை யாரும் அவ்வளவு முதன்மைச் செய்தியாக மக்களிடத்தில் கொண்டுபோய்ச் சேர்க்க ஆர்வம் காட்டவில்லை. கர்தினாலின் பெயர் கெடுக்கப்பட்டதுதான் மிச்சம்.


கர்தினால் ஜோசப் லூயிஸ் பெர்னார்டின் தமது நகரமாகிய சிகாகோவிலிருந்து அந்த எய்ட்ஸ் நோயாளி வாழ்ந்த பிலடெல்பியாவுக்குச் சென்று அவரை மன்னிப்பதாகச் சொல்லி, அவரோடு சேர்ந்து திருப்பலி நிறைவேற்றினார்.

இன்று கொலை செய்வது என்பது ஒருவரின் உயிரைப் பறிப்பது மட்டுமல்ல. ஒருவரின் பெயரைக் கெடுப்பதும் ஒருவரைக் கொலை செய்வதற்கு ஒப்பாகிறது.

பெயர் என்பது ஒருவரை அழைப்பதற்காக வைக்கப்பட்ட ஒன்று மட்டும் அல்ல. மாறாக, ஒருவரின் முழு முகவரியாகவும் அடையாளமாகவும் இருக்கிறது.

எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.