தங்கம் வென்ற தங்க மகன் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
தாழ்நிலையில் இருக்கின்றபோது ஒருவரைக் கண்டுகொள்ளாத உலகம், அவரே உயர்நிலையை அடைகின்றபோது அவரை எட்டிப் பார்க்கின்றது.
வறுமையை, உடல் உறுப்புக் குறைபாட்டைக் காட்டிக் கையேந்தும் மனிதர்களைப் பார்க்கின்றோம். அதே உடல்குறைபாட்டைக் கொண்டு விண்ணைத்தொடும் மாமனிதர்களையும் நாம் பார்க்கின்றோம்.
தமிழ்நாட்டிலுள்ள சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு நான்கு சகோதரர்களும், ஒரு சகோதரியும் உள்ளனர். இவரது தாயார் சரோஜா செங்கல் சுமக்கும் தொழிலாளியாகவும், தினசரி காய்கறி விற்கும் சாதாரண ஏழைப் பெண்மணியாகவும் திகழ்ந்தார்.
மாரியப்பன் தனது ஐந்தாவது வயதில் பள்ளி செல்கையில் ஏற்பட்ட விபத்தில் ஒரு பேருந்து இவரது வலது காலில் ஏற, முழங்காலுக்குக் கீழுள்ளப் பகுதியை இழந்தார். விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் உயரம் தாண்டுதலில் பயிற்சி மேற்கொண்டார்.
2016ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் நாள் ரியோ டி ஜெனெரோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில், உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 வயதான மாரியப்பன் தங்கவேலை நாம் மறந்திருக்க முடியாது. தமிழகம் மட்டுமன்றி, இந்தியாவே இந்த இளம் வீரரைப் பாராட்டிப் பரிசுகளை அள்ளிக் கொடுத்தது. இந்திய அரசு இவருக்குப் பத்மஸ்ரீ விருதையும் கொடுத்துப் பாராட்டியுள்ளது.
தனக்குக் கிடைத்தப் பரிசுத் தொகையிலிருந்து முப்பது இலட்சம் ரூபாயைத் தான் பயின்ற பள்ளிக்கே நன்கொடையாக கொடுக்க வாரி வழங்கும் கொடையாளியாக விளங்குவதை என்னவென்று முன்வந்துள்ளார். கடனாளியாக இருந்த மாரியப்பன் இன்று பிறருக்கு சொல்வது?
உடல் ஊனத்தையும் வறுமையையும் காரணம் காட்டி நான்கு சுவருக்குள் முடங்கிக் கிடக்காமல் வறுமைக்கு "குட் பை” சொல்லியிருக்கிறார் மாரியப்பன். 5 வயதில் விபத்திற்கான மருத்துவச் செலவிற்குத் தன் தாய் வாங்கிய மூன்று இலட்சத்தை அடைக்கவேண்டும் என்னும் வெறி மாரியப்பனுக்குள் தீயாகப் பற்றி எரிந்துகொண்டிருந்தது. அந்தத் தீதான் அவரை முன்னுக்குத் தள்ளியது. அன்றாடம் 100 ரூபாய்க்குக் காய்கறி விற்கும் ஒரு சாதாரணப் பெண்மணியின் மகன் இன்று கோடீஸ்வரராக மாறியிருப்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சிதானே!
ஏமாற்றங்களும் இழப்புகளும் எல்லாருக்கும் உரியதுதான். அதை அனுகூலமாக மாற்றுகிறவர்கள் சாதனையாளர்களே!
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.
