பூமியின் ஆதரவாளர் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

மும்பை வெர்சோவா கடற்கரை கால் வைக்க முடியாத அளவுக்குக் குப்பைகளும் சாக்கடைகளும் நிறைந்த பகுதியாகக் காணப்பட்டது.

மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிகின்ற 36 வயதான அஃப்ரோஸ் ஷா அவர்கள் 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு நாள் தமது வீட்டு மேற்கூரையிலிருந்து வெர்சோவா கடற்கரையைப் பார்த்துக்கொண்டிருந்தபோது பிளாஸ்டிக்குகளும், செருப்புகளும், துணிகளும், பாட்டில்களும் என ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடந்தன. மாநகராட்சியிடம் புகார் செய்தால் வேலை நடக்கக் காலதாமதமாகும் என்பதை உணர்ந்த இவர், தமது பக்கத்து வீட்டுக்காரரான 84 வயது நிறைந்த ஹார்பனா மாத்தூர் என்பவரையும் அழைத்துக்கொண்டு கடற்கரையைச் சுத்தம் செய்யும் பணியைத் தொடங்கினார்.

 இவர்கள் இருவரோடு பல தன்னார்வத் தொண்டர்களும் இணைந்தனர். சில வெளிநாட்டவரும் சுத்தம் செய்யும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டார்கள். வாட்ஸ் அப் மூலம் விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. இருவராகத் தொடங்கிய இவர்களது பணியில் பலரும் இணைந்து கடற்கரையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு வாரமும் இவர்களது குப்பைகளைச் சேகரிக்கும் பணி நீண்டுகொண்டு சென்றது. இவர்கள் சேகரித்த குப்பைகள் மாநகராட்சிக் குப்பை லாரிகளில் ஏற்றி குப்பைக்" குப்பைக் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இக்குழுவினரின் விடா முயற்சியால் இரண்டரை கிலோமீட்டர் தூரம் வெர்சோவா கடற்கரையில் குப்பைகள் அகற்றப்பட்டன. 85 வாரங்களில் 5.5 மில்லியன் கிலோகிராம் குப்பைகள் நீக்கப்பட்டன.

2016ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் நாள் அஃப்ரோஸ் ஷா அவர்களுக்குப் "பூமியின் ஆதரவாளர்கள்" என்ற ஐ. நா. சுற்றுச்சூழல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாம் வீசி எறிகின்ற பிளாஸ்டிக்கைப் பல நிலவாழ், கடல்வாழ் உயிரினங்கள் உட்கொண்டு மடிந்து விடுகின்றன. நம் வாழ்நாளில் எத்தனை இப்படியாக நாம் உயிரினங்களைக் கொன்று குவித்திருப்போம்?

எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.