ஆறாவது உலக தாத்தா பாட்டி மற்றும் முதியோர் தினம் கருப்பொருளை அறிவித்த வத்திக்கான்.| Veritas Tamil
ஆறாவது உலக தாத்தா பாட்டி மற்றும் முதியோர் தினத்திற்கான கருப்பொருளை வத்திக்கான் அறிவித்துள்ளது
ஆறாவது உலக தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோர் தினத்திற்கான கருப்பொருளாக, "நான் உன்னை ஒருபோதும் மறக்கமாட்டேன்" (ஏசாயா 49:15) என்ற வசனத்தை திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளதாக, பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வுக்கான வத்திக்கான் பேராயம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் 2021-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த உலக நாள், ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. முதியோர்கள் மீது திருச்சபை கொண்டுள்ள நெருக்கத்தை வெளிப்படுத்தவும், குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும் இது ஒரு வாய்ப்பாக அமைகிறது. இந்த ஆண்டு, இவ்விழா ஜூலை 26, ஞாயிற்றுக்கிழமை அன்று புனித சுவக்கின் மற்றும் புனித அன்னாள் திருநாளை ஒட்டி வருகிறது. ஒவ்வொரு மறைமாவட்டத்தின் தலைமைக் கோவில்களிலும் (Cathedral) திருப்பலி நிறைவேற்றி இந்நாளைக் கொண்டாடுமாறு திருத்தந்தை அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இறைவாக்கினர் ஏசாயா புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த வசனம், குறிப்பாகத் தனிமையில் வாடும் அல்லது மறக்கப்பட்டதாக உணரும் தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோர்களுக்கு ஆறுதல் மற்றும் நம்பிக்கையின் செய்தியாக அமைகிறது. மேலும், இது குடும்பங்களுக்கும் திருஅவைச் சமூகங்களுக்கும் முதியோர்களைப் புறக்கணிக்காமல் இருக்கவும் அவர்களின் விலைமதிப்பற்ற இருப்பை அங்கீகரிக்கவும் அவர்கள் நமக்கு அளிக்கும் ஆசீர்வாதத்தைப் போற்றவும் ஒரு நினைவூட்டலாகச் செயல்படுகிறது.
முதுமையின் பலவீனங்களுக்கு மத்தியிலும், ஒவ்வொரு நபர் மீதும் கடவுள் கொண்டுள்ள அன்பு நிலைத்திருக்கிறது என்பதைத் திருத்தந்தையின் இந்தத் தெரிவு வலியுறுத்துகிறது.
இறுதியாக உலகெங்கிலும் அந்தந்த உள்ளூர் சூழலுக்கு ஏற்ப இந்நாளைக் கொண்டாடவும் மேம்படுத்தவும் தகுந்த வழிகளைக் கண்டறியுமாறு பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வுக்கான வத்திக்கான் பேராயம் ஊக்குவித்துள்ளது. இதற்கான குறிப்பிட்ட மேய்ப்புப்பணி வளங்கள் (Pastoral resources) பின்னொரு தேதியில் வழங்கப்படும் என்றும் அது கூறியுள்ளது.