இடனறிந்து கடமையாற்றிடுக! |அருள்பணி. முனைவர் செ. ரெ. வெனி இளங்குமரன் | Veritas Tamil

இடனறிந்து கடமையாற்றிடுக!

வலிமைமிக்க சக்கரங்களைக் கொண்ட பெரிய தேர் கடலிலே ஓடாது; கடலிலே ஓடும் கப்பலும் நிலத்திலே ஓடாது. இடங்களுக்கும் சூழல்களுக்கும் ஏற்ப வலிமையும் திறனும் மாறுபடும். இந்த உண்மையை அறிந்து வாழாததால் பலரும் பல்வேறு சிக்கல்களிலே உழன்று கொண்டிருக்கின்றனர். இந்நிலை மாறுவதற்கு ஒவ்வொருவரும் தத்தமது திறனறிந்து சூழலறிந்து செயல்பட வேண்டும்.

எலியார் ஏதோ ஒரு வேலையாக வேகமாக ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் பூனையின் சத்தம் கேட்டு அப்படியே நின்றது. 'எலியாரே வாங்க, என்னைக் காப்பாத்துங்க' என்றார் பூனையார்.

'என்ன மரியாதை அதிகமாக இருக்கு' என்று இடது பக்கமாகப் பார்த்தது. அங்கே ஒரு பூனை ஒரு வலையில் மாட்டிக் கொண்டு துடித்துக் கொண்டிருந்தது.

'இந்த வலையைக் கொஞ்சம் கடித்து எனக்கு விடுதலை தாங்க 'எலியாரே' என்றது பூனை.
 நான் உன்னை விடுவித்தால் நீ என்னைக் கடித்துத் தின்றுவிடுவாயே' - எலி.

'ஐயய்யோ... அப்படியெல்லாம் நான் செய்வேனா? 'நன்றி மறப்பது நன்றன்று' என்னும் குறள் எனக்குத் தெரியாத... பூனை.

'சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்'

என்ற குறளும் தெரியும் தானே - எலி.

'எலியாரே... திருக்குறள் பேசிக் கொண்டிருப்பதற்கு உரிய நேரமல்ல இது. எனக்கு வலைவிரித்த வேடன் வருகிற நேரமாயிற்று. அருள்கூர்ந்து வலையைக் கடியுங்கள் எலியாரே!' பூனை.

எலி ஏதோ சொல்ல நினைத்தது. அதற்குள் தனக்கு ஒரு பேரிடர் (ஆபத்து) காத்திருப்பதைக் கவனித்துக் கொண்டது.

உடனே பூனையிடம் ஓர் உடன்படிக்கை செய்தது: 'பூனையாரே உங்களை நம்பி வலையைக் கடித்து உங்களை விடுவிக்கணும்னா, நான் கொஞ்ச நேரம் உங்களோடு வலைக்குள் இருக்கணும்.

'சரி வாங்க! ஆனா, எதுவானாலும் அன்னை மரியா எலிசபெத்துக்கு உதவி செய்ய விரைந்து சென்றது போல நீங்களும் விரைந்து செயல்படுங்க' என்றது பூனை.

உடனே எலி இரண்டு கண்ணிகளைக் கடித்து வழியமைத்து புகுந்தது. ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும். என்னும் எசாயாவின் கனவு நனவானது போன்றிருந்தது. இரண்டு நிமையங் (நிமிடம்) களுக்குப் பிறகு பெருமூச்சு விட்டது எலி.

அப்பொழுது தான் மேலே பார்த்தது பூனை; வட்டமடித்த பருந்து ஒன்று பறந்து தொலைவில் சென்று விட்டது. பூனை இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே எலி வலையை விட்டு வெளியே வந்து விட்டது.
 நேரம் ஆகிக்கொண்டே இருந்ததனால் பூனைக்குக் கலக்கம் ஏற்பட்டது; மீண்டும் எலியிடம் கெஞ்சியது. எலிக்கு ஒருபுறம் பூனை எதிரி தான் என்றாலும், பிறருக்கு ஒரு துன்பம் வரும் பொழுது பகைமையை மறந்து உதவி செய்ய வேண்டும் என்ற குறள்மொழியும் இறைநெறியும் தெரிந்திருந்தன. இன்னொரு புறம், உதவி செய்யப் போகிறேன் என்று சொல்லி வீணான துன்பத்தை எதிரியிடமிருந்து பெற்றுக் கொள்ளக்கூடாது என்ற சிந்தனையும் ஓடியது. பூனையின் கெஞ்சுதல் 'ஐயோ பாவம்' என்று இருந்தது.

ஒரு முடிவு எடுத்தது. இன்னும் ஓரிரு கண்ணிகளை மட்டும் கடித்து வைப்போம். வேடன் அருகில் வரும் பொழுது இன்னும் சில கண்ணிகளைக் கடித்து பூனையை விடுவிப்போம். அப்பொழுது பூனை தன் உயிரைக் காத்துக் கொள்வதற்காக ஓடிவிடும்; நானும் பாதுகாப்பாய் இருப்பேன் என்று எண்ணியது.

பூனைக்குக் கோவமும் அச்சமும் கவலையும் மாறிமாறி உள்ளத்தில் அலைமோதிக் கொண்டிருந்தன. ஆனால் இந்த எலியை விட்டால், இப்பொழுது வேறு வழி இல்லை. எனவே, எலிக்கு இரக்கம் வரும் வகையில் கெஞ்சலாகத்தான் பேசிக்கொண்டிருந்தது.

அப்பொழுது தூரத்தில் வேடன் வந்து கொண்டிருப்பதைப் பூனை பார்த்து விட்டது. 'எலியாரே, ப்ளீஸ்... தயவு செய்து... அருள்கூர்ந்து... என்னைக் காப்பாத்துங்க' என்றது.

பூனையின் வேகமும் கலக்கமும் கண்டு 'கவலைப்படாதீங்க பூனையாரே... இதோ ஒரு நொடியில்' என்று கூறி செயல்படத் தொடங்கியது. ஒவ்வொரு கண்ணியாகக் கடித்து பூனைக்குப் பாதை அமைத்தது.

வேடன் அருகில் வரவும் பூனை தப்பித்தோம் பிழைத்தோம் என்று எண்ணி, ‘நன்றி! இந்த உதவியை நான் மறக்க மாட்டேன்' என்று சொல்லிக் கொண்டே ஓடியது. எலியும் அருகிலிருந்த ஒரு வளைக்குள் ஓடி ஒளிந்து கொண்டது.
 வேடனுக்கு கோவமும் ஏமாற்றமும் வலையும் கிழிக்கப்பட்டு விட்டது. என்ன நடந்தது...? எப்படி நடந்தது? என்று வேடனுக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் தெரிந்து கொண்டான். ஆபத்தில் இருக்கும் எந்த உயிரையும் காப்பதற்குரிய மாந்த நேயம் இன்னும் செத்து விடவில்லை.

இயேசு விதைத்த, 'தேவையிலிருப்போர்க்கு உதவி செய்த பொழுது எனக்கே உதவி செய்தீர்கள்...உங்கள் பகைவர்களையும் அன்பு செய்யுங்கள்' என்ற இந் நெறிகள் மறைந்துவிடவில்லை.

இவ்வாறாக எண்ணிக் கொண்டே பழைய வலையை அங்கேயே விட்டுவிட்டு, புதிய வழியை நெஞ்சில் சுமந்து கொண்டே சென்றான். பணிவையும் மாந்த நேயத்தையும் உள்ளத்தில் இருத்திக் கொண்டோம்தானே. அவரவர் இருக்க வேண்டிய இடத்தில் பாதுகாப்பாக இருப்போம். ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய பொதுக்கடமை உணர்வை நினைவில் கொண்டு எழுவோம்.

 

Tamil Survey Popup Image