பாதையோர மருத்துவர் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

மேற்கு வங்காள மக்களால் 'ஏழைகளின் மருத்துவர்' என அழைக்கப்படும் மருத்துவர் ஜாக் பிரெகர் என்பவர்.

2017ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் நாள் 86 வயதான ஜாக் பிரெகர் என்பவர் லண்டனில் 2017ஆம் ஆண்டின் சிறந்த மனிதநேய ஆசிய விருதைப் பெற்றுள்ளார். ஆசியர் அல்லாத ஒருவர் தனது வாழ்நாளின்போதே இவ்விருதைப் பெறுவது இதுவே முதன்முறையாகும்.

இங்கிலாந்தில் பிறந்த ஜாக் பிரகர் என்பவர் தமது மருத்துவப் படிப்பை முடித்துப் பல்வேறு நாடுகளில் பணியாற்றியவர். மிகப்பெரிய மருத்துவமனைகளில் பணி செய்வதில் நிறைவு காணாத இவர், எவருமே கண்டுகொள்ளாத தெருவோரங்களிலும், சாலையோரங்களிலும் மருத்துவ வசதியின்றி நோயுற்றிருக்கும் சக மனிதர்களுக்காகப் பணி செய்ய முன்வந்தார்.

1972ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்துக்கு வந்த ஜாக் பிரெகர் அவர்கள், அந்த மாநிலத்தில் சாலையோரம் வாழ்ந்து வந்த மக்களுக்கு இலவசமாக மருத்துவச் சேவையைத் தொடங்கினார். தற்போது "கொல்கத்தாவைப் பாதுகாப்போம்' என்னும் தன்னார்வ அமைப்பை நிறுவி, அந்தப் பகுதியைச் சார்ந்த ஏழை மக்களுக்கு இலவசக் கல்விப் பணியோடு மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறார்.

இவருடைய மருத்துவச் சேவையால் ஏறக்குறைய ஐந்து இலட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். இந்தச் சேவையைப் பாராட்டும் விதமாகத்தான் இந்த ஆண்டின் சிறந்த மனிதநேயத்துக்கான ஆசிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

முப்பத்தெட்டு ஆண்டுகளாக இந்தப் பிறரன்புச் சேவையை ஆற்றிவரும் ஜாக் பிரெகர் உண்மையில் உயிர்காக்கும் ஒரு பாதையோர மருத்துவர்தான்.

இரக்கத்தின் மேன்மையை உணர்ந்தவர்கள், உலகமே தம்மிடம் உள்ளதைக் காண்கிறார்கள்.


எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.

Tamil Survey Popup Image