கனவில் கண்ட புதையல் | அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil

விவசாயி ஒருவன், இரவில் உறங்கும்போது தன் நிலத்தில் புதையல் இருப்பதாகக் கனவு கண்டான். அதிகாலையில் எழுந்து தன்னுடைய நிலத்துக்குச் சென்றான். அது சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்டத் தோட்டம். புதையல் இருக்கிறது என்ற மகிழ்ச்சியில் தோட்டத்தைச் சுற்றி வந்தான். ஆனால் புதையல் இருக்குமிடம் தெரியவில்லை.

இன்று இரவில் தூங்கும்போது கனவில் புதையல் இருக்கும் இடம் தெரியவரும் என்ற எண்ணத்தோடு வீடு திரும்பினான். நாள் முழுவதும் புதையலைப் பற்றிய சிந்தனையோடு, இரவில் உறங்கச் சென்றான். உறக்கம் வரவில்லை. கனவும் தோன்றவில்லை. இருப்பினும் தன் முயற்சியை கைவிடவில்லை. தனக்குத் தெரிந்த மந்திரவாதியிடம் சென்று, தன்னுடைய நிலத்தில் புதையல் இருப்பதை கனவில் கண்டேன். ஆனால் புதையல் இருக்கிற இடம் தெரியவில்லை. இருக்கிற இடத்தை கண்டுபிடித்துக் கூறும்படியாகக் கேட்டுக் கொண்டான்.

மந்திரவாதி எந்த தயக்கமுமின்றி இன்னும் ஒரு வாரத்தில் புதையல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுவேன் என்று உறுதி கூறினான். அவன் ஒரு போலியான மந்திரவாதி. பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. எனவே விவசாயியிடம், "ஏழு நாட்கள்,நிலம் இருக்குமிடத்தில் பூஜை நடத்த வேண்டும். அதற்கு பணம் செலவாகும்" என்றான். "செலவைப் பற்றி கவலை வேண்டாம். பூஜையை உடனே ஆரம்பியுங்கள் " என்றான் விவசாயி.

மந்திரவாதி தினமும் விவசாயியின் நிலத்தில் பூஜை செய்வதைப் பார்த்த மக்கள் புதையலைப் பற்றி பேசக் கொடங்கினர். ஊர் வாயை அடக்க முடியாது என்று கூறுவர். புதையலைப் பற்றிய செய்தி காட்டுத் தீ போல எங்கும் பரவியது. மக்கள் புதையலைக் காண விவசாயியின் நிலத்தில் கூடிவிட்டனர். புதையலைப் பற்றிய செய்தி அரசாங்கத்துக்குக் கிடைத்தவுடன் விவசாயியின் நிலத்தை அரசாங்கம் கைப்பற்றியது. நிபுணர்களைக் கொண்டு புதையலைப் பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கியது.

நிபுணர்கள் மக்கள் மத்தியில் இரண்டு கேள்விகளை எழுப்பினார்கள். "புதையலை முதலில் பார்த்தது யார் ? எப்போது பார்க்கப்பட்ட" நிலத்துக்கு உரிமையாளரான விவசாயி முன்வந்து, ''நான் உறங்கும்போது என் கனவில் புதையலைப் பார்த்தேன் " என்று கூறினான். இந்த பதிலைக் கேட்ட அதிகாரிகள் "கனவில்தான் புதையல். உண்மையில் புதையல் இல்லை" என்று கூறிவிட்டு சிரித்துக்கொண்டே சென்றார்கள்.

புதையலை நம்பி ஏமாறாதே

போலி மந்திரவாதிகள் நம்மிடையே இருக்கிறார்கள் என்பதையும் மறந்துவிடாதே!

இயேசு கூறிய புதையல்

ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்துவிட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக் கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்." மத் 13:44

யூத மக்கள், வெளிநாட்டு அரசர்களால் பலமுறை தாக்கப்பட்டு, சிறைபிடிக்கப்பட்டு, நாடுகடத்தப்பட்டார்கள். அப்படிப்பட்ட நேரங்களில் தங்களிடம் உள்ள விலையுயர்ந்த ஆபரணங்கள், தங்கம், தங்க நாணயங்களை எதிரிகள் எடுத்துச் செல்லாதிருக்க தங்கள் நிலங்களில் புதைத்து வைத்தார்கள்.

இயேசுவின் காலத்தில் முன்னோர்களால் மண்ணில் வைத்திருந்த புதையல் அதிகமாக கண்டுபிடிக்கப் பட்டன. எனவே இயேசு புதைத்து மக்கள் மத்தியில் காணப்பட்ட புதையலை உவமையாகக் கையாண்டு, இறை உண்மைகள், விண்ணரசு இறையாட்சிப்பற்றி கூறுகிறார். புதையல் மறைந்திருக்கிறது. அதை ஒருவன் தனதாக்கிக் கொள்ள தியாகம் செய்வதைப் போல இறையாட்சியை அறிந்து அதை அடைவதற்காக நாம் தியாகம் செய்ய வேண்டும். ஆவலோடு அதை தேடி உரிமையாக்கிக் கொள்ள வேண்டும். அதைக் கண்டடைந்தவர் மகிழ்ச்சியடைவர் என்ற உண்மையை, புதையல் உவமை வழியாக ஆண்டவர் வெளிப்படுத்துகிறார்.

எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.

Tamil Survey Popup Image