இதயம் காக்கும் மனிதர் | ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
தம்மை ஆழமாகச் சிந்திக்க வைப்பதற்காக நம்மைப் பாதிக்கும் நிகழ்வுகளுக்கு நன்றி கூறுவோம்.
2007ஆம் ஆண்டு சென்னையில் பணிபுரியும் ராஜ்குமார் என்பவர் தனது சொந்த ஊரான குடியாத்தத்திலிருந்து சென்னைக்குப் பேருந்திலே பயணம் செய்துகொண்டிருந்தார். அதே பேருந்தில் ஏழு வயதான சிறுமி மணிமேகலையும் அவரது தாயும் பயணம் செய்துகொண்டிருந்தனர். திடீரென்று மயங்கி விழுந்த சிறுமியைப் பார்த்து அதிர்ந்து போனார் ராஜ்குமார்.
ஏழு வயதான சிறுமி மணிமேகலை ஓர் இதய நோயாளி என்றும், அவர்கள் இருவரும் சென்னையில் சிகிச்சை பெறுவதற்காக கிராமத்திலிருந்து வருகிறார்கள் என்றும், கையிலே போதிய பணம் இல்லாததையும் அறிந்துகொண்டார் ராஜ்குமார். அவசரமாக அலுவலகத்துக்குப் போக வேண்டிய சூழ்நிலையில் அலுவலகத்துக்குச் செல்லாமல், அவ்விருவரையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குப் புறப்பட்டார்.
கொஞ்சம் பணத்தைத் திரட்டி மருத்துவச் செலவுகளுக்காக வழங்கினார். இன்னும் கொஞ்சம் பணம் இருந்தால் சிறுமியை முழுமையாகக் குணப்படுத்தி விடலாம் என்று மருத்துவர்கள் கூறினர். இவர் பலரிடமும் நிதி திரட்டுவதை, இவர் வேலை பார்க்கின்ற டாடா நிறுவனம் அறிய, தமது அறக்கட்டளையிலிருந்து பணத்தை வழங்க முன்வந்தது டாடா நிறுவனம். இதனால் சிறுமியும் உயிர் பிழைத்துக்கொண்டார்.
2007ஆம் ஆண்டு ஒரு மணிமேகலையிடமிருந்து தொடங்கிய இவரது சேவைப்பணி தற்போது 347 மணிமேகலைகளை நலமாக்கியுள்ளது. தன் வேலை நேரத்தைத் தவிர மற்ற நேரங்களை நோயாளிகளின் நலனுக்காக செலவிடும் இவர், இதயத்தில் ஓட்டை, இதய வால்வு பாதிப்பு, இதய வால்வு மாற்றம் என்று இதயம் தொடர்பாக எந்த நோயாக இருந்தாலும் தன்னால் முடிந்தளவுக்கு உதவி செய்து வருகிறார். தன் மனைவி பத்மா பெயரில் 'பத்மா' அறக்கட்டளையைத் தொடங்கி இதய நோயாளிகளுக்காகத் தமது சேவையை விரிவுபடுத்தியுள்ளார்.
கனிந்த உள்ளத்துடன் நோயுற்றோரைப் பேணுகிறவர்கள் பேறுபெற்றவர்கள்.
எழுத்து
ஜெ.ஞானசேகரன்