தீமையை விலக்கி நன்மை செய்க!| அருள்பணி. முனைவர் செ. ரெ. வெனி இளங்குமரன் | Veritas Tamil

வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று. (678)

ஒரு செயலைச் செய்யும் போதே இன்னொரு நற்செயலையும் செய்து முடிப்பது செயல்திறன் ஆகும். அது மதத்தால் நனைந்த கன்னத்தையுடைய யானையால் இன்னும் ஒரு யானையைப் பிடித்துக் கட்டியதற்கு ஒப்பாகும்.

அந்த ஊர் தொடக்கப் பள்ளியிலிருந்து மாணவர்கள் நன்னெறிக் கல்வி ஆசிரியரோடு சுற்றுலா செல்ல ஏற்பாடு நடந்தது. மூடுந்தில் (வேன்) பயணம். மாணவச் செல்வங்களுக்கு ஒரே துள்ளல். ஆசிரியரும் குழந்தைகளோடு குழந்தையானார். மூடுந்து (வேன்) மலைப்பகுதியான சாலையில் வளைந்து நெளிந்து சென்றது. குழந்தைகளுக்குக் கொண்டாட்டம் . "ஓ"வென்று ஆர்ப்பாட்டம்.

மரங்களில் குரங்குகளும் பறவைகளும், தரையில் ஆங்காங்கே முயல்களும் நரிகளும் ஓடித் திரிந்தன. இடையிடையே யானைகளின் பிளிறும் ஒலி குழந்தைகளை அச்சுறுத்தியது; வியப்பிலும் ஆழ்த்தியது.

வண்டி ஆடியாடி ஓடிவந்து நின்றது. ஆசிரியரது வழிகாட்டுதலின்படி குழந்தைகள் இறங்கினர். கைகால்களை
உதறிக் கொண்டனர். விளையாட்டாக அந்தப் பெண் ஆசிரியரின் கன்னத்தில் சில குறும்புக்காரச் சிறுவர், சிறுமியர் கையால் தடவியும் நுள்ளியும் பார்த்து மகிழ்ந்தனர். ஆசிரியர் புன்னகை பூத்துக் கொண்டார்.

அங்கே ஒரு யானை காலை உதறியபடி கதறிக் கொண்டிருந்தது. சிறுவர்களுக்குப் புரியவில்லை. ஆசிரியர் சொன்னார். அந்த யானையின் காலில் ஒரு முள் தைத்திருக்கிறது. எனவே அது வலியால் துடிக்கிறது.

உடனே துடிப்புமிக்க சிறுவர், சிறுமியர் சிலர் அம்மா 'முள்ளை எடுத்துவிட்டு அந்த யானைக்கு உதவி செய்யட்டுமா' என்று கேட்டனர்.

ஆசிரியரும் துணிச்சலோடு கூறினார்; உங்கள் நல் எண்ணத்திற்கு ஏற்ப எல்லாம் நல்லபடியாக நடக்கும். முயற்சி செய்யுங்கள்.

சிறுவர் மூவரும் சிறுமியர் இருவருமாக ஐந்துபேர் யானையை நெருங்கினர். சிறுவர், சிறுமியரைப் பார்த்ததும் யானை அமைதியாகப் படுத்திருந்தது. சிறுவன் ஒருவன். யானையின் காலில் தைத்திருந்த முள்ளைக் கண்டுபிடித்து விட்டான். மூவர் காலைப் பிடித்துக் கொள்ள ஒருவர் முள் தைத்த பகுதியை அழுத்திப்பிடிக்க மற்றொருவர் முள்ளைப் பிடுங்கி விட்டார். யானை வலியில் இருந்து மீண்டது. தன் தும்பிக்கையால் சிறுவர் சிறுமியருக்கு ஆசி வழங்கியது. நன்றி தெரிவித்தது.

இந் நிகழ்ச்சியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற குழந்தைகள் அனைவரும் கைகொட்டி மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்தனர். யானையும் மகிழ்ச்சியால் குரல் எழுப்பிக் கொண்டே அரச நடைப் போட்டுச் சென்றது.

"ஆ... என் முறுக்கு" என்று ஒரு சிறுமி அழுதார். அங்கே ஒரு குரங்கு அச்சிறுமியின் கையிலிருந்து முறுக்கைப் பிடுங்கிக் கொண்டு மரத்தில் ஏறி அமர்ந்து தின்று கொண்டிருந்தது. பல குரங்குகள் ஆங்காங்கே ஓடித் திரிந்தன. இன்னும் அவற்றைப் பார்த்த சிறுவர்கள் ஒரு குரங்கைப் பிடிக்க முயற்சி எடுத்தனர்.

இறுதியில் ஒரு குட்டிக் குரங்கைப் பிடித்தனர். அந்த குரங்கின் வாலில் துணிகளைச் சுற்றி தீக்குச்சியால் தீப்பற்ற வைத்தனர். குரங்குக் குட்டி ஓடியது. அங்கிருந்த காய்ந்த சருகுகளில் எல்லாம் தீப்பற்றிக் கொண்டது. குழந்தைகள் அஞ் சினர். சுற்றிலும் தீ. இரண்டு சிறுமிகளும் ஒரு சிறுவனும் சிக்கிக் கொண்டனர். ஆசிரியரும் மற்ற பிள்ளைகளும் வெளியே நின்று தீயை அணைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டனர். தீ நடுவே நின்றிருந்த குழந்தைகள் "அம்மா அம்மா," என்று கத்தினர்.

வெளியில் நின்று கொண்டிருந்த சிறுவர் சிறுமியரும் செய்வதறியாது திகைத்து "ஒ"வென அலறினர். "காப்பாத்துங்க... காப்பாத்துங்க..." என்று குரல் உயர்த்தினர்.

குழந்தைகளின் சத்தத்தைக் கேட்டு ஓடோடி வந்தது யானை. தங்களுக்கு உதவி செய்த குழந்தைகள் சிக்கலில் மாட்டிக் கொண்டதைப் பார்த்து மீண்டும் ஓடோடிச் சென்றது.

கண்ணிமைக்கும் நேரத்தில் திரும்பி வந்தது. தன் வயிற்றுக்குள் இருந்த தண்ணீரையெல்லாம் எடுத்து தன் தும்பிக்கையால் தீயை நோக்கிப் பாய்ச்சியது.

தீ அணைந்த பகுதியில் ஆசிரியரும் ஓரிரு சிறுவர்களும் சென்று குழந்தைகளை மீட்டனர். யானையின் கண்ணில் ஆனந்தக் கண்ணீர். குழந்தைகளின் கைகள் ஆர்ப்பரித்துத் தட்டின. குழந்தைகளுக்கிடையே யானை படுத்திருந்தது. சிறுவர், சிறுமியர் யானையின் மேல் ஏறி சிறிது நேரம் விளையாடினர். அன்புக் குழந்தைகளின் கைகளும் கால்களும் தன் உடம்பில் பட்டதும் மகிழ்ச்சியால் நெகிழ்ந்தது யானை.

அப்பொழுது ஆசிரியர் குழந்தைகளை நோக்கிக் குரலெழுப்பிச் சொன்னார். பார்த்தீர்களா, யானைக்கு நீங்கள் நன்மை செய்தீர்கள். யானை செய்த நன்மையால் நாம் உயிர் பிழைத்தோம். குரங்குக் குட்டிக்கு ஒரு தீமை செய்தீர்கள். அக்குரங்கு செய்த தீமையால் துன்பப்பட்டோம். தீமை செய்வதால் தீமை நேரும், நன்மை செய்வதால் நன்மை நேரும். ஒரு நன்மையை செய்கின்ற போது இரட்டிப்பு நன்மையை அனுபவிக்கிறோம். ஒரு தீமையைச் செய்கின்றபோது, இரட்டிப்புத் தீமையை அனுபவிக்கிறோம்.

ஒரு நன்மையைச் செய்வதன் மூலம் இரண்டு நன்மைகளை ஊடாக நடந்து செல்வோம். யானை முன்னே விளைவிப்போம். வாருங்கள். இயற்கையிடமிருந்து பாடம் கற்க இயற்கையின் செல்ல குழந்தைகள் யானையைத் தொடர ஆசிரியர் இறுதியில் நடக்க அந்த மாசற்றோர் பயணம் இனிதே தொடர்ந்தது.


எழுத்து, 
வெனி இளங்குமரன்.

Tamil Survey Popup Image