பசியை ஒழிக்க உலகளாவிய ஒத்துழைப்பிற்கு திருத்தந்தை அழைப்பு! | Veritas tamil

இன்றைய உலகம் நீடித்த போர்கள், உணவுப் பாதுகாப்பின்மை, பொருளாதார நிலையற்ற தன்மை மற்றும் காலநிலை மாற்றச் சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும்,  இத்தகைய பிரச்சினைகளை உருவாக்கி மீண்டும் மீண்டும் தொடரச் செய்யும் உலக அமைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகவும் திருத்தந்தை வலியுறுத்தினார்.

ஜூன் 22, திங்களன்று, உரோமையில் அமைந்துள்ள உலக உணவுத் திட்டத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிறைவேற்று சபையின் ஆண்டு அமர்வில் பங்கேற்கும் பிரதிநிதிகள், பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்துபோது இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, பன்னாட்டு ஒத்துழைப்பு பலவீனமடைந்து, நாடுகள் தங்களது பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால், உலகளாவிய ஒற்றுமை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

உலகில் போதுமான வளங்கள் இருந்தபோதிலும், கோடிக்கணக்கான மக்கள் இன்னும் பசி மற்றும் வறுமையில் வாழ்வது ஒரு முரண்பாடான நிலை என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, அதிகப்படியான நிர்வாகச் சிக்கல்கள் மனிதாபிமான உதவிகளை தாமதப்படுத்துவதாகவும், உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் சில நேரங்களில் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களால் பாதிக்கப்படுவதாகவும் கவலை தெரிவித்தார்.

மேலும், பசி என்பது மனிதாபிமானப் பிரச்சினை மட்டுமல்ல; அது சமூக ஒற்றுமையை சீர்குலைத்து, மோதல்களையும் கட்டாய இடம்பெயர்வுகளையும் அதிகரிக்கிறது என்று கூறிய திருத்தந்தை, பசியின் மூலக் காரணங்களை நீக்குவதற்காக உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இறுதியாக, உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவப் பராமரிப்பு போன்ற அத்தியாவசிய தேவைகள் வணிகப் பொருட்களாகக் கருதப்படக் கூடாது; ஏனெனில் அவை அடிப்படை மனித உரிமைகள் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, ஒவ்வொரு மனிதரின் உள்ளார்ந்த மாண்பை மதித்து செயல்படுவதன் மூலமே நீதி மற்றும் அமைதி நிறைந்த உலகை உருவாக்க முடியும் என்று வலியுறுத்தி தனது உரையை நிறைவு செய்தார். 

Tamil Survey Popup Image