கிறிஸ்துவே சோர்வுற்றவர்களின் நம்பிக்கையும் பலமும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 15ஆம் வாரம் – வியாழன்
எசாயா  26: 7-9, 12, 16-19
மத்தேயு  11: 28-30

கிறிஸ்துவே சோர்வுற்றவர்களின் நம்பிக்கையும் பலமும்!

முதல் வாசகம்.

இவ்வாசகத்தில் இறைவாாக்கி்னகினர் எசாயா, இறைவனுடைய நீதியும்,
அவர்தம் மக்களின் நம்பிக்கையும், உயிர்த்தெழுதலில் நம்பிக்கையும்
வலியுறுத்தப்படுகின்றன.
நீதிமான்கள் இரவும் பகலும் இறைவனைத் தேடி, அவரது
திருவுளத்தின்படி வாழ விரும்புகின்றனர். உலகத்தில் நீதி
நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே அவர்களின் ஏக்கமாக உள்ளது
என்கிறார்.
இறைவன் தனது மக்களுக்கு அமைதியையும் ஆசீர்வாதத்தையும்
அளிக்கிறார். துன்பங்களின் மத்தியிலும் மக்கள் இறைவனை நோக்கித்
திரும்பி, அவரிடமே உதவியை நாடுகின்றனர். மனித வலிமையால்
விடுதலை கிடைக்காது; இறைவனே உண்மையான மீட்பர் என்பதை
அவர்கள் உணர்கின்றனர்.
மேலும் இவ்வாசகத்தில் "இறந்த உம் மக்கள் உயிர் பெறுவர்; அவர்களின்
உயிரற்ற உடல்கள் மீண்டும் எழும்" (வ.19) என்ற மகத்தான நம்பிக்கை
அறிவிக்கப்படுகிறது. மரணம் இறுதியல்ல; இறைவன் தம் மக்களுக்கு
புதிய வாழ்வை அருளுவார் என்ற உயிர்த்தெழுதல் நம்பிக்கை
இப்பகுதியில் ஒளிர்கிறது.

நற்செய்தி.

இன்றைய நற்செய்தியில், வாழ்க்கையின் பல்வேறு துன்பங்களாலும்
கவலைகளாலும் சோர்ந்து போன அனைவரையும் இயேசு அன்போடு
தம்மிடம் வருமாறு அழைக்கிறார். அவரிடம் வருபவர்களுக்கு
உண்மையான இளைப்பாறுதலையும் உள்ளத்தின் அமைதியையும்
தருவதாக வாக்களிக்கிறார்.
இயேசு, தமது "நுகத்தை" ஏற்றுக்கொண்டு தம்மிடமிருந்து
கற்றுக்கொள்ளும்படி அழைக்கிறார். ஏனெனில் அவர் சாந்தமும்
மனத்தாழ்மையும் கொண்டவர். அவரைப் பின்பற்றும் வாழ்க்கை
கடினமான சுமையல்ல; மாறாக, அன்பு, கருணை, மற்றும் இறையருளால்
நிறைந்த வாழ்வாகும். அதனால், அவருடைய நுகம் எளிதானது;
அவருடைய சுமை கிலகுவானதாக இருக்கும் என்கிறார்.

சிந்தனைக்கு.

எல்லா சூழலிலும் இயேசுவே நம் வாழ்வின் உண்மையான
இளைப்பாறுதலும் அமைதியும் ஆவார். நம் பாரங்களையும்
கவலைகளையும் அவரிடம் ஒப்படைத்து, அவரது வழியில் நடக்கும்போது
உள்ளார்ந்த அமைதியையும் புதிய வாழ்வின் நம்பிக்கையையும்
பெறுவோம் என்ற நம்பிக்கையை ஆண்டவர் விதைக்கிறார்.

முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, நீதிமான்களின் பாதையை
ஆண்டவர் நேராக்குகிறார் என்றும், துன்ப காலங்களில் மக்கள் அவரை
நாடி இறைவேண்டல் செய்கிறார்கள் என்றும் கூறுகிறார். ஒன்றை நாம்
நினைவில் கொள்ள வேண்டும். நமது சொந்த முயற்சியால் மட்டும்
வாழ்க்கையில் அமைதி கிடைத்து விடாது. இறைவனே உண்மையான
அமைதியையும் நம்பிக்கையையும் அளிக்க வல்லவர். மேலும், "
இறந்தோர் உயிர் பெறுவார்கள்" என்ற வார்த்தைகள், இறைவன்
மரணத்தைக்கூட வெல்லும் ஆண்டவர் என்பதை நமக்கு
நினைவூட்டுகின்றன.

இந்நம்பிக்கையையே இயேசு நற்செய்தியில் மேலும்
தெளிவுபடுத்துகிறார்.
" சுமை சுமக்கிறவர்களே, என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு
இளைப்பாறுதல் தருவேன்" என்று அவர் அழைக்கிறார்.

இன்று நாம் வாழ்க்கையின் பல சுமைகளால் சோர்ந்திருக்கிறோம்.
குடும்பப் பிரச்சினைகள், உடல்நலம், பொருளாதாரக் கவலை, எதிர்கால
அச்சம், மனஅழுத்தம் போன்ற பல சுமைகள் நம்மை அழுத்துகின்றன.
இந்த சுமைகளைத் தனியாகச் சுமக்க வேண்டாம் என்று இயேசு
அழைக்கிறார். அவரிடம் வந்தால், அவர் சுமையை உடனே அகற்றுவதாக
அல்ல; ஆனால் அதைத் தாங்கும் வலிமையையும் உள்ளத்தின்
அமைதியையும் அளிப்பதாக வாக்கிக்கிறார்.

இயேசு மேலும், "என் நுகம் இனிமையானது; என் சுமை இலகுவானது"
என்கிறார். "நுகம்" என்பது இரண்டு மாடுகளின் கழுத்தில் வைக்கப்படும்
மரக்கட்டை. அது அவற்றை ஒன்றாக இணைத்து, ஒரே திசையில்
ந்நடக்கச் செய்கிறது. இயேசு இந்த உருவகத்தைப் பயன்படுத்தி,
"என்னோடு இணைந்து நட; நான் உன்னோடு இருப்பேன்" என்று
அழைக்கிறார். ஆம், கிறிஸ்துவோடு சேர்ந்து சுமக்கும் வாழ்க்கை.
அவரோடு நடந்தால், கனமான சிலுவையும் நம்பிக்கையின் பாதையாக
மாறுகிறது என்று ஆண்டவரே நமக்கு உறுதியாளிக்கிறார். அந்தக்
காலத்தில் சமயத் தலைவர்கள் எண்ணற்ற விதிமுறைகளை மக்களின் மீது
சுமத்தியிருந்தனர். ஆனால் இயேசு, இறைவனுடன் அன்பின் உறவை
மையமாகக் கொண்ட வாழ்வையே கற்பித்தார். இயேசுவின் "நுகம்"
என்பது அவரோடு இணைந்த சீடத்துவ வாழ்க்கையைக் குறிப்பதாகப்
பொருள் கொள்ளலாம்.

இறைவேண்டல்.

என் மீட்பராகிய ஆண்டவரே, உமது நுகத்தை மகிழ்ச்சியுடன்
ஏற்றுக்கொள்ளும் மனதையும், தாழ்மையும் சாந்தமும் நிறைந்த உமது
இதயத்தைப் பின்பற்றும் அருளையும் எனக்குத் தருவீராக. ஆமென்.

ஆர். கே. சாமி (மலேசியா). ஜெனிசிஸ்
விவிலியக் கல்வி மையம் +6
0122285452

Tamil Survey Popup Image