ஆசிய திருஅவைத் தலைவர்களை வரவேற்க இந்தோனேசிய அரசு தீவிர ஏற்பாடுகள் | Veritas Tamil
2026ஆம் ஆண்டு ஜூலை 20 முதல் 26 வரை ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12ஆம் நிறைவிறுதிப் பேரவையில் பங்கேற்க ஆசியா முழுவதிலுமிருந்து வரவிருக்கும் கத்தோலிக்க திருஅவைத் தலைவர்களை அன்புடனும் மரியாதையுடனும் வரவேற்க இந்தோனேசிய அரசு தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
ஒரு வாரம் நடைபெறவுள்ள இந்த நிறைவிறுதிப் பேரவை சிறப்பாக நடைபெறுவதை உறுதிசெய்வதோடு மட்டுமல்லாமல், பிரதிநிதிகள் இந்தோனேசியா வந்த தருணத்திலிருந்து அவர்கள் தாயகம் திரும்பும் வரை பாதுகாப்பாகவும், வசதியாகவும், மனநிறைவுடனும் தங்கியிருக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
ஜூலை 7ஆம் நாள், இந்தோனேசிய சமய அலுவல் அமைச்சர் நசருத்தீன் உமர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், பிரதிநிதிகளின் நலன் முதன்மை கவனமாக எடுத்துக்கொள்ளப்பட்டதாக சமய விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"இவர்கள் அனைவரும் சமயத் தலைவர்கள். எனவே, அவர்கள் இந்தோனேசியாவில் தங்கியிருக்கும் காலம் முழுவதும் அமைதியையும், பாதுகாப்பையும், மனநிறைவையும் அனுபவிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்," என்று அமைச்சர் நசருத்தீன் உமர் அவர்கள் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் அரசு துறைகள் மற்றும் உள்ளூர் ஏற்பாட்டுக் குழுவினர் இணைந்து குடியேற்றச் சேவைகள், பாதுகாப்பு, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் பிற நிர்வாக ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
பல்வேறு கலாச்சாரப் பின்னணிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பதால், அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரத் தேவைகளை கருத்தில் கொண்டு உணவு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் மிகுந்த கவனத்துடன் திட்டமிடப்பட்டு வருகின்றன.
இந்தத் தயாரிப்புப் பணிகளில் ஜகார்த்தா மாகாண அரசு, தேசிய காவல்துறை, இந்தோனேசிய தேசிய ஆயுதப்படை, குடியேற்றத் துறை, இஸ்திக்லால் பள்ளிவாசல் நிர்வாகம், ஜகார்த்தா உயர் மறைமாவட்டம் மற்றும் அரசின் பொதுமக்கள் ஒலிபரப்பு நிறுவனங்கள் ஆகியவை இணைந்து செயல்பட்டு வருகின்றன.
ஜூலை 26ஆம் நாள் ஜகார்த்தா பேராலயத்தில் நடைபெறும் நிறைவு திருப்பலிக்குப் பின்னர், பிரதிநிதிகள் "நட்புறவுச் சுரங்கப்பாதை" (Tunnel of Friendship) வழியாக இஸ்திக்லால் பள்ளிவாசலுக்குச் செல்லும் நிகழ்வுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஜகார்த்தாவில் வாராந்திர வாகனமில்லா நாள் (Car-Free Day) அனுசரிக்கப்படுவதால், போக்குவரத்து மற்றும் மக்கள் கூட்ட மேலாண்மை தொடர்பாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதிநிதிகள் சிறு குழுக்களாக அந்தச் சுரங்கப்பாதை வழியாக அழைத்துச் செல்லப்பட்டு, அது இந்தோனேசியாவில் மதநல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் அமைதியான இணை வாழ்வின் அடையாளம் என்பதை விளக்க ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
உடல்நலக் குறைபாடுகள் அல்லது நடமாட்டக் கட்டுப்பாடுகள் உள்ள பிரதிநிதிகளுக்காகவும் தனிப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சக்கர நாற்காலி அல்லது பிற உதவிகள் தேவைப்படுபவர்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான சேவைகளைத் தயார்படுத்துமாறு ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூதுப் பயணத்தின்போது அரசு அமைப்புகள் ஒருங்கிணைந்து பணியாற்றிய அனுபவம், இம்முறை நடைபெறும் FABC நிறைவிறுதிப் பேரவைக்கான தயாரிப்புகளுக்கு பெரிதும் உதவியாக இருப்பதாக சமய அலுவல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், இந்தப் நிறைவிறுதிப்பேரவை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாண்டி, ஆன்மிகச் சூழல், மேய்ப்புப் பணிக்கேற்ற விருந்தோம்பல் மற்றும் திருஅவைத் தலைவர்களுக்கான அக்கறையுடன் கூடிய சேவை ஆகியவற்றையும் மையமாகக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
"பிரதிநிதிகள் இந்தோனேசியா வந்த முதல் தருணத்திலிருந்தே எங்களின் விருந்தோம்பலை உணர வேண்டும். அவர்கள் நிறைவிறுதிப்பேரவையில் முழுமையாகப் பங்கேற்பதோடு மட்டுமல்லாமல், இந்தோனேசியாவின் மத நல்லிணக்கம், அமைதியான இணை வாழ்வு மற்றும் பல்வகைமையில் ஒற்றுமை என்ற பண்பாட்டையும் நேரடியாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் மிகுந்த கவனத்துடன் செய்து வருகிறோம்," என்று அமைச்சர் நசருத்தீன் உமர் அவர்கள் தெரிவித்தார்.
FABC-இன் 12ஆம் நிறைவிறுதிப்பேரவையில், ஆசியாவின் 29 நாடுகளிலிருந்து ஆயர்கள் மற்றும் திருஅவைத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். மேலும், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்தும் சிறப்பு அழைப்பாளர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.
இந்த நிறைவிறுதிப் பேரவையின் ஆலோசனைகளின் பயன்களோடு மட்டுமல்லாமல், மத நல்லிணக்கம், விருந்தோம்பல் மற்றும் பல்வகைமையில் ஒற்றுமையைப் பேணும் நாடு என்ற நிலையான நினைவையும் பிரதிநிதிகள் தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே இந்தோனேசிய அரசின் எதிர்பார்ப்பாகும்.
