இறைவனில், உறுதியான நம்பிக்கைக்கு மறுப்பு இல்லை! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 18 ஆம் வாரம் – புதன்
எரேமியா 31: 1-7
மத்தேயு 15: 21-28
இறைவனில், உறுதியான நம்பிக்கைக்கு மறுப்பு இல்லை!
முதல் வாசகம்.
எரேமியா இறைவாக்கினரின் நூலின் இறுதி வாசகத்தை இன்று
வாசிக்கிறோம். இன்று அவர் இறைவனின் மாறாத அன்பையும், மீட்பின்
நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார். துன்பத்திலும் சிதறலிலும்
இருந்த இஸ்ரயேல் மக்களை அவர் மீண்டும் ஒன்றுசேர்த்து, அவர்களின்
வாழ்வை புதுப்பிப்பதாக உறுதியளிக்கிறார். கன்னிப் பெண்ணாகிய
இஸ்ரயேலே! உன்னை நான் மீண்டும் கட்டி எழுப்புவேன்.
இக்காலக்கட்டத்தில் பாஇஸ்ரயேல் மக்கள் பாபிலோன் சிறையில்
துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
இறைவன், எரேமியா மூலம் அழிந்துபோன வாழ்வு மீண்டும்
கட்டியெழுப்பப்படும்; திராட்சைத்தோட்டங்கள் மீண்டும் நடப்படும்;
மகிழ்ச்சியும் ஆசீர்வாதமும் திரும்பும் என்றும், இறுதியாக, மக்கள்
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் போற்றி, அவர் அளிக்கும் மீட்பிற்காக
நன்றியோடு அவரை வழிபடுவர் என்ற வாக்குறுதியும் வழங்கப்படுகிறது.
நற்செய்தி.
இவ்வாசகத்தில், கானான் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், தன் மகளின்
நலனுக்காக இயேசுவை ஆழ்ந்த நம்பிக்கையுடன் அணுகுகிறாள்.
ஆரம்பத்தில் இயேசு அவளைச் சோதிப்பதுபோல் தோன்றினாலும்,
அந்தப் பெண் தாழ்மையுடனும் உறுதியான விசுவாசத்துடனும் தொடர்ந்து
மன்றாடுகிறாள்.
அவளுடைய அசைக்க முடியாத நம்பிக்கையைக் கண்டு இயேசு,
“பெண்ணே, உன் நம்பிக்கை பெரியது; நீ விரும்பியபடியே உனக்கு
ஆகட்டும்” என்று கூறி, அவளுடைய மகளை குணமாக்குகிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய நற்செய்தியில், உறுதியான நம்பிக்கையும், தாழ்ச்சி,
விடாமுயற்சியுள்ள இறைவேண்டல் ஆகியவை இறைவனின் அருளைப்
பெற்றுத் தருகின்றன என்பதையும், இயேசுவின் மீட்பானது எல்லா
இனத்தாருக்கும் உரியது என்பதையும் எடுத்துரைக்கிறது. இறைவன் தம்
மக்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. அவரது என்றுமுள அன்பும்
இரக்கமும் மனந்திரும்புவோருக்கு புதிய வாழ்வு, நம்பிக்கை மற்றும்
மீட்பை அளிக்கின்றன என்பதை இன்று உணர்த்தப்படுகிறோம்.
குறிப்பாக, இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவர் சிதறிப்போன
இஸ்ரயேல் மக்களை மீண்டும் ஒன்று சேர்ப்பதாக வாக்களிக்கிறார்.
அவர்கள் துன்பத்திலும் அன்னிய நாடான பாபிலோனில் சிறையில்
இருந்தபோதும், "நான் இஸ்ரயேலின் தந்தை" என்று கூறி, தமது மாறாத
அன்பை வெளிப்படுத்துகிறார்.
நற்செய்தியில், கானானியப் பெண் தன் மகளின் நலனுக்காக இயேசுவை
நாடுகிறார். ஆரம்பத்தில் இயேசு அமைதியாக இருந்தாலும், பின்னர்
அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கையையும் தாழ்மையையும் கண்டு,
"பெண்ணே, உன் நம்பிக்கை பெரியது; நீ விரும்பியது உனக்குக்
கிடைக்கட்டும்" என்று அருள்கிறார். அந்தப் பெண்ணின் உறுதியான
நம்பிக்கைதான் இறைவனின் இரக்கத்தின் கதவுகளைத் திறந்தது.
ஆம், இறைவனின் அன்பு நமது புறக்கணிப்பால் குறைவதில்லை; அவர்
எப்போதும் நம்மை காக்கவும் வழிநடத்தவும் விரும்புகிறார். இதுவே
அவரது திருவுளம்.
நமது வாழ்க்கையில் நம்பிக்கை தளரும்போது, இறைவனின் மாறாத
அன்பையும், அவருடைய வாக்குறுதிகளையும் நினைவுகூர்ந்து,
உறுதியான நம்பிக்கையுடனும் அவரைச் சார்ந்து வாழ்வோமேயாகில்,
நாமும் ஆறுதலும் நலனும் பெறுவோம். ஒன்றை இன்றுமுதல் நினைவில்
கொள்வோம், "இறைவனின் அன்பிற்கு எல்லை இல்லை; உறுதியான
நம்பிக்கைக்கு மறுப்பு இல்லை என்பதில்லை."
இறைவேண்டல்.
இரக்கத்தின் ஆண்டவரே, கானானியப் பெண்ணைப் போல,
தாழ்மையுடனும் அசைக்க முடியாத நம்பிக்கையுடனும் உம்மைத்
தொடர்ந்து நாடி, உமது இரக்கத்தையும் அருளையும் என் வாழ்வில்
அனுபவிக்கும் அருளை எனக்குத் தந்தருள்வீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா). ஜெனிசிஸ்
விவிலியக் கல்வி மையம் +6
0122285452
