சிலுவையை நோக்கி, கிறிஸ்துவை நோக்கி!| ஆர்.கே.சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 24ம்.வாரம்-திங்கள்
14 செப்டம்பர் 2026
திருச்சிலுவையின் மகிமை
எண்ணிக்கை 21: 4-9
யோவான் 3: 13-17
சிலுவையை நோக்கி, கிறிஸ்துவை நோக்கி!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் எதோம் நாட்டைச் சுற்றிச் செல்ல வேண்டியதால், நீண்ட பயணத்தில் சோர்ந்து போனார்கள். அவர்கள் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராக முறையிட்டு, தங்களுக்கு உணவும் தண்ணீரும் இல்லை என்று குறைக்கூறி சாட்டினர்.
இதன் காரணமாக கடவுள் மக்கள் மத்தியில் விஷப் பாம்புகளை அனுப்பினார். பலர் பாம்புகளால் கடிபட்டு இறந்தனர். மக்கள் தங்கள் தவறை உணர்ந்து, மோசேயிடம் வந்து, தங்களுக்காக கடவுளிடம் மன்றாடும்படி கேட்டார்கள். மோசேயின் மன்றாட்டுக்கு கடவுள், ஒரு வெண்கலப் பாம்பை செய்து கம்பத்தில் உயர்த்தி வைக்கும்படி கட்டளையிட்டார். பாம்பால் கடிபட்டவர்கள் அந்த வெண்கலப் பாம்பைப் பார்த்தபோது உயிர் பிழைத்தார்கள் என்று வாசாகம் விவரிக்கிறது.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு, தாம் விண்ணிலிரு்து வந்தவர் என்றும், அவரில் நம்பிக்கைகொள்பவர்கள் நிலைவாழ்வைப் பெறுவார்கள் என்றும் கூறுகிறார். பாலைநிலைத்தில் மோசே வெண்கலப் பாம்பை உயர்த்தியதைப் போல, மானிடமகன் இயேசுவும் உயர்த்தப்பட வேண்டும் என்கிறார்.
அவர்மீது நம்பிக்கை வைக்கும் ஒவ்வொருவரும் அழிவை அடையாமல் நிலைவாழ்வைப் பெறுவதற்காகவே இது நடந்தது என்று விவிரக்கிறார்.
சிந்தனைக்கு.
இன்று திருஅவை திருச்சிலுவையின் மாட்சி விழாவைக் கொண்டாட அழைப்புவிடுத்துள்ளது. இரு வாசகங்களிலும், “உயர்த்தப்படுதல்” என்பதே இன்றைய திருநாளின் மையமாக விளங்குகிறது எனலாம்.
திருச்சிலுவையின் மகிமை அல்லது மாட்சி என்பது கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்வது மட்டுமல்ல; மாறாக, அவருடைய வெற்றியைக் கொண்டாடுவதுமாகும். ஒருகாலத்தில் உரோமையர்களின் கொலைத் தண்டனைக்கான கருவியாக இருந்த சிலுவை, இன்று வாழ்வின் மரமாக மாறியுள்ளது. இச்சிலுவையில், தம்மையே பலியாக அர்ப்பணித்ததன் மூலம், இயேசு பாவத்தையும் மரணத்தையும் வென்றார். இவ்வாறு, ஒரு சாபமாகக் கருதப்பட்ட சிலுவையை அவர் ஆசீர்வாதமாகவும் மாட்சிக்குரிய சின்னமாகவும் மாற்றினார்.
இன்று, நம் சீடத்துவ வாழ்வில், கிறிஸ்துவின் சிலுவையை மாட்சிபடுத்த அழைக்கப்படுகிறோம். சிலுவை கொண்டிருக்கும் மறைபொருளையொட்டி சிந்திக்கும்போது, உண்மைகக்காக, நீதிக்காக நாம் எதிர்கொள்ளும் கொடூரமான வேதனையும் மரணமும் எவ்வாறு நமக்கு மாட்சிமிகு வாழ்வைத் தரவல்லவை என்பதை நினைவூட்டுகின்றன.
இயேசுவின் சிலுவையினாலும், அதிலிருந்து பொங்கி வழிந்த மீட்பின் வல்லமையினாலும், நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு துன்பமும், நாம் சுமக்கும் ஒவ்வொரு சிலுவையும், நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு அநீதியும், திருச்சிலுவையின் மகிமைப்படுத்துதலில் பங்கேற்கும் வாய்ப்பைக் கொண்டுள்ளதை மறக்கலாகாது. சிலுவை மீட்பின் சின்னம்.
நாம் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் கிறிஸ்துவோடு இணைந்து, அவருடன் உயர்த்தப்படுவதற்கு நம்மை அர்ப்பணித்தால், நமது துன்பங்கள்கூட அர்த்தமுள்ளவையாக மாறும் என்பதில் ஐயமில்லை.
இயேசுவின் சிலுவை மரணம் பாவத்தின் வல்லமையை முறியடித்தது. சிலுவை நமக்கு மன்னிப்பையும் மீட்பையும் திறந்து வைத்தது. ஆகவே, சிலுவை என்பது தங்கச் சங்கிலியோடு கழுத்தில் அணிந்து உடலுக்கு அழகு சேர்க்கும் ஒரு பொருளாக எண்ணுவது தவறு.
உண்மையில். சிலுவை புதிய வாழ்வின் அடையாளமாக ஏற்கப்பட வேண்டிய ஒன்று. மேலும், நாம் சுமக்கும் துன்பங்கள், நோய்கள், இழப்புகள், அநீதிகள் மற்றும் வாழ்க்கையின் சவால்களை கிறிஸ்துவின் சிலுவையோடு இணைக்கும்போது, அவை நம்பிக்கையின் பாதையாக மாறுகின்றன என்பது நமக்கான படிப்பினையும் நம்பிக்கையுமாகும்.
இறைவேண்டல்.
அன்பு இயேசுவே, உமது சிலுவையோடு ஒன்றிணைந்து, நானும் உமது வெற்றியிலும் மாட்சிலும் பங்குகொள்ள அருள்புரிவீராக. ஆமென்.
எழுத்து,
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலியக் கல்வி மையம்
+6012 228 5452
