ஆசிய திருஅவையை இணைக்கும் பாலமாக FABC செயல்படுகிறது: அருட்தந்தை கிளாரன்ஸ் தேவதாஸ் | FABC | Veritas Tamil
ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12வது நிறைவிறுதிக்கூட்டம் ஜகார்த்தாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரேடியோ வெரித்தாஸ் ஆசியா (RVA), FABC-யின் இணைச் செயலரும், ஒத்துழைப்பு மற்றும் ஒன்றிணைந்த திருஅவை (Synodality) ஆணையத்தின் நிர்வாகச் செயலருமான அருட்தந்தை கிளாரன்ஸ் தேவதாஸ் அவர்களைச் சந்தித்து, இவ்வாண்டு நடைபெறும் நிறைவிறுதிக்கூட்டத்தின் நோக்கம் குறித்து உரையாடியது.
இந்நேர்காணலில், நிறைவிறுதிக்கூட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் பலன்கள், ஆசியாவில் பாலங்களை உருவாக்கும் திருஅவையின் பணி, கண்டம் எதிர்கொள்ளும் முக்கியமான மேய்ப்புப்பணி சவால்கள் மற்றும் உள்ளூர் திருஅவைகளுக்கிடையேயான ஒன்றிப்பை வலுப்படுத்துவதில் FABC-யின் பங்கு குறித்து அவர் விளக்கினார்.
இந்த FABC நிறைவிறுதிக்கூட்டத்திற்குப் பிறகு ஆயர்கள் தங்கள் உள்ளூர் திருஅவைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கும் மிக முக்கியமான பலன் அல்லது மரபு என்ன?
நாம் எதிர்பார்க்கும் மிகப் பெரிய பலன்களில் ஒன்று, ஒன்றிணைந்த பயணம் (Synodality) ஒரு வாழ்வியல் முறையாக மாற வேண்டும் என்பதாகும். ஒன்றிணைந்த பயணம் என்பது வெறும் பணியாற்றும் முறை அல்லது முடிவெடுக்கும் நடைமுறை மட்டுமல்ல; அது ஒரு ஆன்மீகம்.
இந்த ஒன்றிணைந்த ஆன்மீகம் ஆசியாவின் பங்குத்தளங்கள், மறைமாவட்டங்கள் மற்றும் முழு திருஅவையிலும் தொடர்ந்து வளர வேண்டும் என்று விரும்புகிறோம். ஒன்றிப்புத் தன்மையின் மூலம், ஒன்றாகப் பயணிக்கும் மற்றும் ஒன்றாக வளரும் திருஅவையாக மாற நாம் கற்றுக்கொள்கிறோம்.
இந்த பொதுக்கூட்டத்திற்குப் பிறகு, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் இடையே இன்னும் ஆழமான ஒன்றிப்பு உணர்வு உருவாக வேண்டும் என்று நம்புகிறோம். ஆயர்கள் ஒன்றிப்புத் தன்மையுடன் வாழ்வதற்கான தங்கள் அர்ப்பணிப்பை ஆழப்படுத்துவதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
“பாலங்களாகவும், பாலங்களை உருவாக்குபவர்களாகவும் திருஅவை மாற வேண்டும்” என்ற இக்கூட்டத்தின் கருப்பொருள் ஆசியச் சூழலில் எதைக் குறிக்கிறது?
ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளில் கத்தோலிக்கர்களும், பொதுவாக கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினராக உள்ளனர். இது சமூகத்தில் பாலங்களை உருவாக்கும் தனித்துவமான அழைப்பை திருஅவைக்கு வழங்குகிறது. ஆசியா முழுவதும் மதங்கள், இனக்குழுக்கள் மற்றும் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து பிளவுகளை நாம் காண்கிறோம். திருஅவை அமைதி மற்றும் ஒப்புரவின் கருவியாக மாற அழைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி திருஅவைக்கு வெளியே மட்டுமல்ல, அதன் உள்ளேயும் பொருந்தும். ஆயர்கள், அருளபணியாளர்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் இடையிலும் வேறுபாடுகளை நாம் அனுபவிக்கிறோம். எனவே, திருஅவை ஒன்றிப்பை உருவாக்கும் சக்தியாக இருக்க வேண்டும்.
பாலங்களை உருவாக்குபவர்களாக இருப்பது என்பது மக்களை இணைப்பது, உரையாடலை வளர்ப்பது, சமூகங்கள் அமைதியில் வாழ உதவுவது என்பதாகும். இதுவே திருஅவையின் பணி.
இந்தப் நிறைவிறுதிக்கூட்டத்தில் ஏறத்தாழ 150 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒன்றிணைந்த பயணத்தின் உணர்வைத் தங்கள் சொந்த சமூகங்களுக்கு எடுத்துச் சென்று மாற்றத்திற்கான கருவிகளாக மாறுவார்கள் என்று நம்புகிறோம்.
மாற்றம் பெரும்பாலும் ஒருவரிடமிருந்தே தொடங்குகிறது. ஒருவர் மாறும்போது, அந்த மாற்றம் மற்றவர்களிடமும் பரவுகிறது. இந்த நிறைவிறுதிக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவரிடமும் இதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் ஆசிய திருஅவை எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்கள் என்ன?
சவால்கள் பல உள்ளன. சமூகப் பதற்றங்கள் மற்றும் நிலையற்ற சூழல்களுக்கு அப்பால், திருஅவை வளர்ந்து வரும் கருத்தியல் அழுத்தங்களையும் எதிர்கொள்கிறது. சமய சார்பற்ற சிந்தனை (Secularism) அதிகரித்து வருகிறது. பல சமூகங்கள் நுகர்வுவாதம் மற்றும் முதலாளித்துவத்தால் வடிவமைக்கப்படுகின்றன. வறுமை, ஊழல், இடம்பெயர்வு மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு போன்ற பிரச்சினைகளையும் ஆசியா தொடர்ந்து எதிர்கொள்கிறது.
இதனால், திருஅவை தனது சொந்த வாழ்விலும் சமூகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் கருவியாக அழைக்கப்படுகிறது. மத்தேயு நற்செய்தி கூறுவது போல, நாம் “உலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும்” இருக்க அழைக்கப்பட்டுள்ளோம். சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த திருஅவை உதவ வேண்டும்.
ஆசிய திருஅவைக்கு நீங்கள் வழங்க விரும்பும் ஒரு செய்தி என்ன?
ஆசியா பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டதால் நமக்குள் பல வேறுபாடுகள் உள்ளன. அந்த வேறுபாடுகளில் மட்டுமே கவனம் செலுத்தினால், அவை தடைகளாக மாறிவிடும். ஆனால் நம்மை ஒன்றிணைப்பவற்றில் கவனம் செலுத்தினால், திருஅவை தொடர்ந்து வளர்ச்சி அடையும்.
ஒவ்வொருவருக்கும் தனித்துவமான அழைப்பு உள்ளது. ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் வெவ்வேறு, ஆனால் ஒருவருக்கொருவர் துணைபுரியும் பணிகளைக் கொண்டுள்ளனர்.
இன்று நம்முடைய மிகப்பெரிய சவால்களில் ஒன்று அக்கறையின்மை. திருஅவையின் பிரச்சினைகள் வேறு யாருக்கோ உரியவை என்று நினைப்பது தவறான அணுகுமுறை.
திருமுழுக்கு மூலம் நாம் அனைவரும் இறைமக்களாக மாறுகிறோம். திருஅவை ஆயர்களுக்கும் அருள்பணியாளர்களுக்கும் மட்டும் சொந்தமானது அல்ல; அது திருமுழுக்கு பெற்ற அனைவருக்கும் உரியது. திருஅவையை கட்டியெழுப்புவதில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.
மனிதர்களால் உருவாக்கப்பட்டதால் எந்தத் திருஅவையும் முழுமையானதல்ல. அதன் குறைகளில் மட்டும் கவனம் செலுத்தினால் அது வளர முடியாது. மாறாக, நம்மை ஒன்றிணைக்கும்வற்றை அடையாளம் கண்டு, இறைவன் அளித்த கொடைகளைப் பயன்படுத்தினால் திருஅவை தொடர்ந்து வளர்ச்சி பெறும்.
ஆசியாவின் உள்ளூர் திருஅவைகளுக்கு ஆதரவளிப்பதில் FABC-யின் பணி என்ன?
ஆசியாவின் உள்ளூர் திருஅவைகளுக்கிடையேயான ஒன்றிப்பை வலுப்படுத்துவதே FABC-யின் நோக்கமாகும். உதாரணமாக, ஆசியா முழுவதும் உள்ள கத்தோலிக்க ஆய்வு நிறுவனங்களை ஒன்றிணைக்கும் வலையமைப்பை FABC உருவாக்கி வருகிறது. இதன் மூலம் அவை ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்து, வளங்களைப் பகிர்ந்து கொண்டு, வலுவான ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்.
பொதுவாக, FABC என்பது உள்ளூர் திருஅவைகளை வழிநடத்தும், கண்காணிக்கும் அல்லது மேற்பார்வையிடும் அமைப்பு அல்ல. அது ஆயர் பேரவைகளுக்கு மேலான ஆளும் அமைப்பும் அல்ல. மாறாக, ஆசிய ஆயர் பேரவைகளுக்கிடையேயான சகோதர ஒன்றிப்பின் அமைப்பாக இருந்து, தேவையான இடங்களில் ஆதரவு வழங்குகிறது.
உள்ளூர் திருஅவைகள் தங்கள் சொந்த மேய்ப்புப்பணி சூழல்களுக்கு பதிலளிக்கும்போது, அவற்றுடன் இணைந்து பயணிப்பதும், ஆதரிப்பதும், ஊக்கப்படுத்துவதுமே எங்களின் பணி.
ஆசியா கலாச்சாரம், மொழி மற்றும் சமூகங்களில் மிகவும் பல்வகைமையைக் கொண்டது. FABC ஒரு பாலமாகச் செயல்பட்டு, திருஅவைகளை ஒன்றிணைத்து, அவை ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளவும், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஒன்றிப்பு மற்றும் பணியில் ஒன்றாக வளரவும் உதவுகிறது.
