"நற்செய்தி அறிவிப்பு பேசுவதில் அல்ல; கேட்பதில்தான் தொடங்குகிறது" – கர்தினால் பாப்லோ விர்ஜிலியோ டேவிட் | FABC | Veritas tamil

ஆசிய ஆயர் பேரவை கூட்டமைப்பின் (FABC) துணைத் தலைவரான கர்தினால் பாப்லோ விர்ஜிலியோ டேவிட் அவர்கள், ஜூலை 24 அன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இடம்பெற்ற FABC-யின் 12-ஆவது நிறைவிறுதிப்பேரவையின் தினசரி திருப்பலியில் வழங்கிய மறையுரையில், "நற்செய்தி அறிவிப்பு பேசுவதில் அல்ல; முதலில் கேட்பதில்தான் தொடங்குகிறது" என்ற மையக் கருத்தை வலியுறுத்தினார்.

ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும் பொதுநிலைப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அந்த வாரம் முழுவதும் நடைபெற்ற பேரவையில், எரேமியா இறைவாக்கினர் நூலிலிருந்தும் விதைப்பவர் உவமையிலிருந்தும் கருத்துகளை எடுத்துக்கொண்டு, ஒன்றிணைந்த திருஅவையின் (Synodal) மனமாற்றத்தின் ஒளியில் ஆசியத் திருஅவை தனது மறைப்பணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

இறைவனின் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களைப் பற்றிய எரேமியாவின் உருவகத்தை மேற்கோள் காட்டிய கர்தினால் டேவிட், திருஅவை தன்னை ஞானமிக்க விதைப்பவனாகவும் காண வேண்டும் என்றார். ஏனெனில், பலன்தரும் நற்செய்தி அறிவிப்பு விதையை விதைப்பதற்கு முன்பே தொடங்குகிறது என்றார்.

விதைப்பவர் உவமையில், விதை என்பது இறைவார்த்தையையும், நிலம் என்பது அதை ஏற்றுக்கொள்ளும் மக்களின் மனநிலையையும் குறிக்கிறது என்ற வழக்கமான விளக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தாமல், அந்த நிலம் எவ்வாறு தயாராக்கப்படுகிறது என்பதில்தான் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

இதனை விளக்குவதற்காக, பிலிப்பீன்சில் ஒரு அடிப்படை திருஅவைச் சமூகத்துடன் (Basic Ecclesial Community) நடைபெற்ற திருமறைப் பகிர்வு அனுபவத்தை அவர் நினைவுகூர்ந்தார். அப்போது வயதான ஒரு விவசாயி, விதைப்பவர் உவமை குறித்து எதிர்பாராத ஒரு கருத்தைப் பகிர்ந்ததாகக் கூறினார்.

"அந்த விவசாயி என்னிடம் மரியாதையுடன், 'உவமையில் வரும் விதைப்பவர் நல்ல விவசாயி அல்ல. ஏனெனில் அவர் சாலையிலும், பாறைகளிலும், முட்செடிகள் நிறைந்த இடங்களிலும் விதையைச் சிதறவிட்டார்' என்று கூறினார்," என கர்தினால் டேவிட் நினைவுகூர்ந்தார்.

அந்த எளிய கருத்து, திருஅவையின் மறைப்பணியைப் பற்றிய ஆழமான புரிதலைத் தமக்குத் தந்ததாக அவர் கூறினார்.

"ஒரு நல்ல விவசாயிக்குத் தெரியும்; விதைப்பதற்கு முன்பே பெரும்பாலான வேலை நடைபெறுகிறது. அவர் முதலில் நிலத்தைத் தயார்படுத்துகிறார்."

இன்றைய உலகில் நற்செய்தி அறிவிப்பின் உண்மையான சாராம்சம் இதுவே என்று கர்தினால் டேவிட் விளக்கினார். நற்செய்தியை அறிவிப்பதற்கு முன், அதை ஏற்றுக்கொள்ள மக்களின் இதயங்களைத் திருஅவை தயார்படுத்த வேண்டும் என்றார்.

அந்த "நிலத்தைத் தயார்படுத்துதல்" என்பது, ஒன்றிணைந்த திருஅவையின் வாழ்வின் அடிப்படை மனப்பாங்குகளை வளர்ப்பதாகும் என்றும் அவர் விளக்கினார்.

"நிலத்தைத் தயார்படுத்துதல் என்பது பேசுவதற்கு முன் கேட்பது; வாதிடுவதற்கு முன் உரையாடுவது; இணங்க வைப்பதற்கு முன் நட்புறவை உருவாக்குவது; அர்ப்பணிப்பைக் கேட்பதற்கு முன் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது என்பதாகும்."

ஆசியக் கண்டத்தில் திருஅவை, பல்வேறு சமயங்கள், கலாச்சாரங்கள் மற்றும் இனப்பின்னணிகளுக்கு மத்தியில் பணியாற்றி வருவதால், இந்த அணுகுமுறை மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார். சில இடங்களில் நற்செய்தி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற நிலையில், வேறு சில இடங்களில் அது தயக்கத்துடனோ சந்தேகத்துடனோ அணுகப்படுகிறது என்றார்.

இத்தகைய சூழலில், திருஅவை தனது இருப்பு, சேவை மற்றும் அன்பின் வழியாக முதலில் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்; அதன் பிறகே நற்செய்தி அறிவிப்பு பலன் தரும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதற்கு எடுத்துக்காட்டாக, கர்தினால் ஜியோர்ஜியோ மரெங்கோ தலைமையிலான மங்கோலியத் திருஅவையை அவர் சுட்டிக்காட்டினார். அங்கு திருஅவை முதன்மையாக போதனையின் வழியாக அல்ல; மாறாக கல்வி, பிறரன்புப் பணிகள் மற்றும் உள்ளூர் மக்களுடனான உண்மையான நட்புறவின் வழியாக அறியப்படுகிறது என்றார்.

மங்கோலியாவின் அனுபவம், அன்பும் இரக்கமும் நிறைந்த செயல்களே, நற்செய்தி வெளிப்படையாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே மக்களின் இதயங்களை அதற்குத் தயார்படுத்துகின்றன என்பதை எடுத்துக்காட்டுவதாக அவர் கூறினார்.

இந்த மனப்பாங்கே FABC ஊக்குவித்து வரும் ஒன்றிணைந்த திருஅவையின் மனமாற்றத்தின் (Synodal Conversion) மையக் கருத்து என்றும் கர்தினால் டேவிட் விளக்கினார். ஒன்றிணைந்த பயணம் என்பது திருஅவைக்குள் ஒன்றாக நடப்பது மட்டுமல்ல; மரியாதை, உரையாடல் மற்றும் சேவை ஆகியவற்றின் வழியாக மக்கள் கிறிஸ்துவைச் சந்திக்கும் இடங்களை உருவாக்குவதுமாகும் என்றார்.

தமது மறையுரையின் நிறைவில், ஆசியாவில் நற்செய்தி அறிவிப்பின் எதிர்காலம், விதையை எவ்வளவு உண்மையுடன் விதைக்கிறோம் என்பதில் மட்டுமல்ல; அந்த விதை வேரூன்றும் நிலத்தை எவ்வளவு பொறுமையுடன் தயார்படுத்துகிறோம் என்பதிலும் உள்ளது என்று அவர் நினைவூட்டினார்.

"ஆசியாவில் நற்செய்தி அறிவிப்பின் எதிர்காலம், விதையை நாம் எவ்வளவு உண்மையுடன் விதைக்கிறோம் என்பதில் மட்டுமல்ல; அந்த விதை வளரக்கூடிய நிலத்தை எவ்வளவு பொறுமையுடன் தயார்படுத்துகிறோம் என்பதிலும் தங்கியுள்ளது."

இறுதியாக, இறைவனின் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களாக மட்டுமல்லாமல், விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பின் விதைகள் ஆசியா முழுவதும் செழித்து வளருமாறு நிலத்தைப் பொறுமையுடன் தயார்படுத்தும் ஞானமிக்க விதைப்பவர்களாகவும் திருஅவையின் பணியாளர்களை இறைவன் ஆக்குவாராக என்று செபித்தபடி அவர் தனது மறையுரையை நிறைவு செய்தார்.

Tamil Survey Popup Image