அமைதிப் பேச்சுவார்த்தை மற்றும் ஆயுதமற்ற செயற்கை நுண்ணறிவுக்கு திருத்தந்தை அழைப்பு! | Veritas Tamil
காசாவில் துயரப்படும் மக்களுக்கு அனைத்துலக சமூகம் உதவ வேண்டும் என்றும், ஒவ்வொரு மனிதனின் மனித உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறியுள்ளார்.
மே 26, செவ்வாயன்று, திருத்தந்தையின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தோல்ஃபோவில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, காசாவை நோக்கிச் சென்ற 'குளோபல் சுமூத் புளோட்டிலா' (Global Sumud Flotilla) என்ற நிவாரணக் கப்பல் குழுவைச் சேர்ந்த ஆர்வலர்கள் சிலர் கைகளில் விலங்கிடப்பட்டும், கண்களைக் கட்டியும் வைக்கப்பட்டதாக வந்த அறிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளதுடன் அனைத்து மக்களின் மனித மாண்பையும் உரிமைகளையும் நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
காசா மக்களுக்கு மனிதநேய உதவிகள் இன்னும் முழுமையாகச் சென்றடையாதது குறித்து கவலை தெரிவித்துள்ள திருத்தந்தை, அங்கு நீடிக்கும் நெருக்கடி மக்களின் வேதனையை அதிகரிப்பதால், சம்பந்தப்பட்ட அமைப்புகள் அவசர உதவிகளை வழங்குவதோடு மட்டுமின்றி, காசாவை மறுசீரமைப்பு செய்யும் பணிகளுக்கும் உதவ வேண்டும் என்றும் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
மேலும் வன்முறையினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரித்துள்ள திருத்தந்தை, அமைதிக்கான முயற்சிகள் தோற்கும்போது வெறுப்புணர்வே மேலோங்கும் என்றும், மோதல்களுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரே வழி பேச்சுவார்த்தைகளும் கலந்துரையாடல்களும் மட்டுமே என்பதால், அந்தப் பாதைக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
போர்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள திருத்தந்தை, இந்தத் தொழில்நுட்பமானது, முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களை மனித உயிர்களின் மதிப்பில் இருந்து ஒருபோதும் தூரப்படுத்திவிடக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
அண்மைய போர்களைச் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, ஆயுதங்கள் இல்லாத அல்லது "ஆயுதக் குறைப்பு செய்யப்பட்ட செயற்கை நுண்ணறிவு" (disarmed artificial intelligence) என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியதுடன் அத்தோடு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அறநெறிச் சிக்கல்கள் குறித்து, 'ஆந்த்ரோபிக்' (Anthropic) என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்துடன் வத்திக்கான் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.