தவக்கால திருப்பயணம் - ஆயிரக்கணக்கான நம்பிக்கையாளர்கள் பங்கேற்பு ! | Veritas Tamil
கோவா மற்றும் டமன் மறைமாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான நம்பிக்கையாளர்கள் , தவக்காலத்தின் முதல் ஞாயிறான பிப்ரவரி 22 அன்று, கோவாவில் உள்ள பழமையான சாங்கோயல் ஆலயத்தில் நடைபெற்ற 8வது ஆண்டு திருப்பயணத்தில் கலந்து கொண்டனர்.
இந்த திருப்பயணம் அதிகாலை 2:00 மணிக்கு கோவா வெல்யா, நெயுரா, கன்சாலிம், வெர்னா, வாஸ்கோ ஆகிய ஐந்து மையங்களில் இருந்து தொடங்கியது. சுமார் 10 கிலோமீட்டர் நடைப்பயணத்திற்கு பிறகு , அனைவரும் மிகுந்த நம்பிக்கையோடு பழமையான சாங்கோயல் ஆலயத்தில் ஒன்றிணைந்தனர்.
பேராயர் ஃபிலிப் நேரி கர்தினால் பெர்ராவும் துணை ஆயர் சிமியான் பெர்னாண்டஸும் நம்பிக்கையாளர்களுடன் இணைந்து நடைபயணத்தில் பங்கேற்றனர்.
திருப்பலி நிகழ்வை கர்தினால் பெர்ராவ் வழிநடத்தினார். ஆலயங்கள் மற்றும் கபேல்கள் நிர்வாக அமைப்புகளுக்கான எபிஸ்கோபல் விக்காரான அருட்தந்தை லூசியோ டயஸ் மறையுரை வழங்கினார். துணை ஆயர் சிமியான் பெர்னாண்டஸ், சிந்துதுர்க் மறைமாவட்டத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயர் அருட்தந்தை அக்நெலோ பின்ஹெய்ரோ, மறைமாவட்ட திருப்பயண குழு ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை ஜார்ஜ் ராடோஸ், சாங்கோயல் பங்குத் தந்தை அருட்தந்தை கெனத் டெலஸ், இந்திய அருட்தந்தையர்கள் மாநாட்டின் (கோவா பிரிவு) தலைவர் அருட்தந்தை கப்ரியல் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பலர் இணைந்து திருப்பலியை சிறப்பு செய்தனர் .
“கிறிஸ்துவைப் பின்பற்றுவோர் நம்பிக்கையின் திருப்பணியாளர்கள் ” என்ற கருப்பொருளில் மறையுரை வழங்கிய அருட்தந்தை டயஸ், வாழ்க்கையே பிறப்பு முதல் இறப்பு வரை நம்பிக்கையால் தாங்கப்படும் ஒரு திருப்பயணம் என்று கூறினார். தவக்காலத்தைச் சுட்டிக்காட்டி, ஜெபம், நோன்பு, இறைவார்த்தை தியானம் ஆகியவற்றின் மூலம் சோதனைகளை வெல்லுமாறு அவர் நம்பிக்கையாளர்களை ஊக்குவித்தார்.
மேலும் ட்ராமாபூர் பங்கு உறுப்பினர் வாலெரி கார்டோசோ,அவர்கள் கூறுகையில் ,ஆண்டுதோறும் நம்பிக்கையுடன் கலந்து கொள்கிறேன்; கடவுள் என்னை வழிநடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். நீண்ட நடைபயணம் உடலை சோர்வடையச் செய்தாலும், ஜெபமும், ஜெபமாலையும் ஆன்மாவை புதுப்பித்து அமைதியை அளிக்கின்றன என்றார்.
இறுதியாக , சகோதரி ஷ்யஜா ஜோசப், இரவு அமைதியில் சக திருப்பயணிகளுடன் செபிப்பது ஒற்றுமையையும், கடவுளின் உடனிருப்பை உணரும் தருணமாகவும் இருந்தது. இந்த அனுபவம் ஆன்மிகத்தை வளப்படுத்தும் ஒரு மாற்றமாக உணர்கிறேன் என்று கூறினார்.இவ்வாறாக பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். இந்த திருப்பயணமானது நம்பிக்கையாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒரு பயனாக அமைந்தது.