இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் புதிய தலைவராக கர்தினால் அந்தோணி பூலா தேர்வு! | Veritas Tamil

பெங்களூருவில் உள்ள புனித யோவான் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வரும் CBCI-ன் பொதுக்குழு கூட்டத்தில், வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற தேர்தலில் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CBCI) புதிய தலைவராக மேதகு கர்தினால் அந்தோணி பூலா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத் அவர்களின் பதவிக்காலம் நிறைவடைவதைத் தொடர்ந்து பொறுப்பேற்கிறார்.

திருஅவையும் நாடும் சந்தித்து வரும் சமூக, மேய்ப்புப்பணி மற்றும் அரசியலமைப்புச் சவால்களுக்கு இடையே, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார் பேராயர் மேதகு கர்தினால் அந்தோணி பூலா . இவரின் இந்தப் புதிய தேர்வு, இந்தியத் திருஅவையின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைவதோடு, நிர்வாகத் தொடர்ச்சியையும் புத்துயிர் பெற்ற ஆன்மீகப் பார்வையையும் பறைசாற்றுகிறது.

மேலும், இந்த பொதுக்குழுவில் அனைத்து நாடுகளிலிருந்தும்  ஆயர்கள் கலந்து கொண்டு இறை நம்பிக்கை, நற்செய்திப் பணி, சமூகப் பணி மற்றும்  இந்திய திருஅவையின் முக்கிய பங்கு குறித்த  ஆலோசனைகளை மேற்கொண்டனர். 

CBCI தலைவராகத் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்த பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத்தின் சீரிய தலைமையைப் பொதுக்குழு பாராட்டி மகிழ்ந்தது. குறிப்பாக, மதச் சுதந்திரம் மற்றும் ஆழமான மத நல்லிணக்கத்தின் இன்றியமையாமைக்கு அவர் அளித்த முக்கியத்துவத்தையும் அரசியலமைப்பு விழுமியங்கள், உரையாடல் மற்றும் இந்தியத் திருஅவைகளுக்கு  இடையிலான ஒருமைப்பாடு ஆகியவற்றில் அவர் கொண்டிருந்த உறுதியான நிலைப்பாட்டினையும் ஆயர்கள் சிறப்பாகப் பாராட்டினர்.

மேதகு கர்தினால் அந்தோணி பூலா அவர்கள், தமது மேய்ப்புப்பணி சார்ந்த நுட்பமான அணுகுமுறை, சமூக நீதிக்கான அர்ப்பணிப்பு மற்றும் விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்கான ஆதரவு ஆகியவற்றால் பரவலாக அறியப்படுபவர். இந்திய தேசத்தின் முதல் தலித் கர்தினால் என்ற வகையில், அவரது தலைமைத்துவமானது யாவரையும் உள்ளடக்கிய மற்றும் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஒரு திருஅவையை உருவாக்குவதில் ஒரு மிக முக்கியமான அடையாளமாகவும் உந்துசக்தியாகவும் திகழ்கிறது.

தொடர்ந்து நடைபெற்று வரும் நிர்வாகப் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். இந்தியத் திருஅவையானது சேவை, ஒப்புரவு மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் தன்னைத் தொடர்ந்து ஈடுபடுத்தி வரும் வேளையில், இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CBCI) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேதகு கர்தினால் அந்தோணி பூலா அவர்கள் மேய்ப்புப்பணி முன்னுரிமைகளையும், சமூகப் பங்களிப்புகளையும் நெறிப்படுத்துவதில் ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்வார்.