மனிதாபிமான மனிதர் | ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

வயதான மனிதர் ஒருவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்வுக்காக அழைக்கப்பட்டிருந்தார். எதற்காகத் தாம் அழைக்கப்பட்டோம் என்றுகூட அந்த முதியவருக்குத் தெரியாது. அந்த முதியவர் மேடையில் ஏறியதும் மேடையில் இருந்த அனைவரும், அரங்கத்தில் இருந்த யாவரும் எழுந்துநின்று இவருக்கு மரியாதை கொடுத்தனர். ஏன் இந்த மரியாதை என்று இவருக்குத் தெரியவில்லை.

பிரிட்டானியாவைச் சேர்ந்த சர் நிக்கோலாஸ் வின்டன் என்ற முதியவர் நா நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த முன்னாள் செக்கோஸ்லோவாக்கியாவிலிருந்து, 669 யூதச் சிறுவர்களை 1938ஆம் ஆண்டில் தனியாளாக, பாதுகாப்பாகப் பிரிட்டானியாவுக்கு அழைத்து வந்தவர். இக்குழந்தைகளின் பெரும்பாலான பெற்றோர் ஆஷ்விஷ் நாசி வதை முகாமில் கொல்லப்பட்டவர்கள். வின்டன் அவர்கள் தான் காப்பாற்றிய இக்குழந்தைகளைப் பற்றி ஒருபோதும் யாரிடமும் சொன்னதில்லை. இந்த நிகழ்வு நடந்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் இவர் செய்த இந்நற்செயல் வெளியுலகுக்குத் தெரியவந்தது. மேல் மாடியின் சிறிய அறையில் தற்செயலாக இவரின் நாள் குறிப்பேடு இவரது மனைவி கிரேட் என்பவரின் கண்ணில் பட, அக்குறிப்பேட்டில் அவரது கணவர் காப்பாற்றிய எல்லா சிறார்களின் பெயர்களும் அவர்கள் பற்றிய விபரங்கள், புகைப்படங்களையும் கண்டார். அவற்றைச் செய்தியாளர் ஒருவரிடம் கொடுக்க, வின்டனின் மனிதாபிமானச் செயல் உலகுக்குத் தெரியவந்தது.

இப்போதுதான் வின்டனுக்குப் புரிந்தது, எழுந்து நின்று மரியாதை செலுத்திய அனைவரும் தன்னால் காப்பாற்றப்பட்டவர்கள் என்று. அவர்கள் யாவரும் ஒவ்வொருவராக மேடைக்கு வந்து வின்டன் அவர்களுக்கு நன்றி செலுத்தியது, அங்கிருந்த அனைவரின் உள்ளங்களையும் உருகச் செய்தது. 2015ஆம் ஆண்டு ஜூலை முதல் நாள் தனது 106ஆம் வயதில் வின்டன் அவர்களின் உயிர் பிரிந்தது. ஆனால், இவரால் காப்பாற்றப்பட்ட 669 பேர்களின் உள்ளங்களிலும் இவர் இன்றும் வாழ்கிறார் என்பது உண்மை.

* இரக்கக் குணம் என்பது பிறர் துன்பத்தைக் கண்டதும் தானாக முன்வந்து உதவுவது. பெயர், புகழைப் பெறுவதற்காக எந்தப் பெரும் தியாகத்தையும் செய்வது போற்றுதற்குரியதல்ல.

Tamil Survey Popup Image