பசுமையான மனிதர்கள் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
நம் பெயருக்கு முன்னால் நாம் செய்கின்ற வேலையைச் சொல்லி அழைப்பதுண்டு. ஆனால், தாம் மிகவும் நேசிக்கக்கூடிய மரத்தைத் தம் பெயருக்கு முன்னால் சொல்லி அழைக்க விரும்புகிறார் கருணாநிதி. அவரை 'மரம் கருணாநிதி' என்றே பலரும் அழைக்கின்றனர்; பலருக்கும் அவ்வாறே அறிமுகமாகியிருக்கின்றார்.
விழுப்புரம் மாவட்டம் சங்கீத மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் கருணாநிதி அவர்கள். பிறந்த நாள், திருமண நாள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது தமது சொந்தச் செலவில் 1000 மரங்கன்றுகளை வாங்கி அந்த விழாவுக்கு வருபவர்களுக்கு வழங்குகிறார்.
இவ்வாறு ஏறத்தாழ ஏழு இலட்சம் மரக்கன்றுகளை வழங்கியுள்ளார். தம் வாழ்நாள் முழுவதுமே மரக்கன்றுகளை வழங்குவதே தமது இலட்சியம் எனக் குறிப்பிடுகிறார்.
இவர் தாம் வேலை செய்யும் பணம் முழுவதையும் மரத்துக்காகவே செலவு செய்கிறார். "சம்பாதிக்கின்ற பணம் எங்களுக்குப் போதாது" என்று சொல்லும் சமூகத்தில், இவர் நம் அனைவராலும் போற்றுதலுக்குரிய மனிதர் என்றால் மிகையாகுமோ?
இவரைப்போன்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அய்யாவாடியைச் சேர்ந்த திவ்யா செல்வம் அவர்கள் கடந்த பத்து ஆண்டுகளில் கும்பகோணம் நகரில் எல்லாத் தெருக்களிலும் மரங்களை நட்டுப் பராமரித்து வருகிறார். கும்பகோணம் நகரில் இதுவரை 4,500 மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமைகளில் மரக்கன்றுகளைப் பராமரிக்கவும், அதற்குத் தண்ணீர் ஊற்றவும் தமது நேரத்தைச் செலவிடுகிறார்.
நாம் பல நேரங்களில் பசுமை மனிதர்களாக வாழ விரும்பாமல் காய்ந்த சருகைப் பொறுக்கும் மனிதர்களாகவே வாழ விரும்புகிறோம்.
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.