கடல் | சிந்தை குளிர... அகம் மகிழ | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil

கண்களுக்குக் களிப்பூட்டும் காலத்தை வென்ற கடவுளின்  கொடை. 
அது மனதுக்கு மகிழ்ச்சி; இதயத்துக்கு இன்னிசை; ஆன்மாவுக்கு அமைதி. மொத்தத்தில் மனித வாழ்வுக்கான வற்றாத பரிசு!

கடலின் ஆழத்தை அறிந்தவர் யார்? அதன் வளங்களை அளந்தவர் யார்?
அதிசயங்களை ஆய்ந்தறிந்தவர் யார்? 
எல்லையைத் தொட்டவர் யார்?
எல்லாமே மனிதருக்கு வியப்பூட்டும் விந்தை அன்றோ?

வானம் கடலைத் தொடும் அழகைக் கண்டுள்ளீரா?
பூமி கோள வடிவம் என்பதைக் கடற்கரையில் நின்று கண்டுணர்ந்துள்ளீரா? 
அலைகள் ஆர்த்தெழுந்து வருவதைக் கண்டு ஆனந்தமடைந்துள்ளீரா?
ஆதவன் கடலுக்குள்ளிருந்து எழுச்சியோடு வருவதையும் கடலுக்குள் மூழ்கி மறைவதையும் கண்டு இன்புற்றிருக்கிறீ ரா?

கடல் மனித வாழ்வோடு எத்துணை தொடர்புடையது?
அமைதியாகவும் இருக்கும்; இரைச்சலாகவும் இருக்கும். அலைகள் போன்று உயர்ந்தும் இருக்கும்; தாழ்ந்தும் இருக்கும். மனிதரின் கண்ணீர், வியர்வையிலுள்ள உவர்ப்பு சுவை கடல் நீரிலும் உண்டு.எப்படி இருப்பினும் இரண்டும் அழகே!

கடலுக்குக் கரைமீது கரைகாணாக் காதல் போலும்... அயராமல் அலைகளைத் தூது அனுப்பிக் கொண்டே இருக்கிறதே!

வாழ்க வளமுடன் நலமுடன்!!!

எழுத்து 

அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச.
தூய ஆவியார் ஆலயம், தாகூர் நகர், புதுச்சேரி.