ஒற்றுமையின் வெற்றி | அருள்பணி. முனைவர் செ. ரெ. வெனி இளங்குமரன் | Veritas Tamil

கடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு (267)

நெருப்பிலிட்டுச் சுடச்சுட தங்கம் ஒளிர்வது போல தவம் செய்பவர்களுக்குத் துன்பம் வருத்த வருத்த மெய்யன்பு மிளிரும்.

பறவைகள் மாநாடு நடந்து கொண்டிருந்தது. பறவைக் காய்ச்சல், அலைப்பேசிக் கோபுரங்கள், கொரோனா தொற்று போன்ற தலைப்புகளில் கருத்துரைகளும், கலந்துரையாடல்களும் நடைபெற்றன. தங்களது மேனி வண்ண அழகு, புதுமையான செயல்திறன் போன்றவை தொடர்பான பட்டறிவுப் (அனுபவப்) பகிர்வுகளும் அரங்கேறின. பத்துத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அவற்றுள் ஒன்று காக்கை, கருங்குயில் முதலான கருப்பு நிறப் பறவைகளுக்கு எதிரானவை என்பதால், தாங்கள் ஒதுக்கப்பட்ட நிலையை எண்ணி காக்கைகள் மனங்கலங்கின. இருப்பினும் பொறுமையோடு அச்சூழலை இறைத்திருவுளம் என்று ஏற்றுக்கொண்டன. மாநாடு நிறைவுற்று அவரவர் கூடு நோக்கிப் பறவைகள் விரைந்தன.

அங்கே ஓரிடத்தில் கவர்ச்சியான தானிய உணவு சிதறிக் கிடந்ததைப் பார்த்த பறவைகளுள் சில தரை இறங்கின.

தானியத்தை உண்ண நகர்ந்து சென்ற பொழுதுதான், தாங்கள் வலையில் சிக்கிக் கொண்டோம் என்று உணர்ந்தன. அடுத்தடுத்துப் பறந்து வந்த புறா, மைனா, கிளி, மரங்கொத்தி, தூக்கணாங்குருவி, கொக்கு உள்ளிட்ட பறவைகளும் நிலைமையறியாது வலையில் சிக்கிக் கொண்டன. இவற்றையெல்லாம், வலை விரித்த வேடன் தூரத்தில் ஒரு புதருக்குள் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டு, இன்றைக்கு நல்ல வேட்டை; எப்படியும் பதினைந்து கிலோ தேறும் என்று எண்ணி மகிழ்ந்திருந்தான்.

பறவைகள் தங்கள் மனம், மெய், மொழி அனைத்தையும் ஒடுக்கிக் கொண்டு கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தன. மாநாட்டுத் தீர்மானங்களில் பிழை ஏதும் செய்து விட்டோமோ என்று ஓரிரு முன்னணிப் பறவைகள் சீராய்வு செய்து கொண்டிருந்தன.

அந்த நேரத்தில்...

மாநாட்டிலிருந்து, மனம் உடைந்துபோன ஓரிரு காக்கைகள் பறந்து வந்தன. அறிவுக் கூர்மையோடு ஆய்ந்தன. பறவைகள் மாட்டிக் கொண்ட நிலையை அறிந்து கொண்டன. அமைதியாகத் திரும்பிச் சென்றன. வலையில் சிக்கிய பறவைகள், காக்கைகள் ஏமாறாததை எண்ணி வியந்தன; வெட்கமடைந்தன.

அடுத்த ஓரிரு நிமையங்களில் (நிமிடம்) நாற்பது காக்கைகள் பறந்து வந்தன. விரைந்து வலையருகே நின்றன.வலையில் அகப்பட்டிருந்த பறவைகள் எல்லாம் அஞ்சி நடுங்கின. காக்கைகள் நம்மைப் பழிவாங்கப் போகின்றன என்று கலங்கின. வேடனும் வியப்பில் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். காக்கை பேசியது வேடனுக்குப் புரியவில்லை. (தூய தமிழில் பேசியிருக்கக் கூடும்), 'தோழர்களே அஞ்சாதீர்கள், இதோ உங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியூட்டும் நன்மையைச் செய்யவே வந்திருக்கிறோம்' என்று வானதூதரைப் போன்று கனிவாகக் காக்கைத் தலைவி கூறினார். மேலும் தொடர்ந்து, நாங்கள் நாற்பது பேர் வலையைச் சுற்றி விளிம்போரங்களைக் கவ்விக் கொண்டு வலிமையாகப் பறப்போம். நீங்கள் பதற்றப்படாமல், நம்பிக்கையோடு பறப்பதற்குரிய மனநிலையோடு இருங்கள் என்று அறிவுறுத்தினார். பறவைகளுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.

கண்ணிமைக்கும் நேரத்தில், 'தொண்டர்களே, கவனமாக இருங்கள். நம் பறவை நண்பர்களின் உயிர் தொடர்பான முயற்சி இது. எனவே, அணியம் (ரெடி), 'படை புறப்படுக' என்று சொன்னவுடன், திருவிழாவில் மணி அடித்ததும் தூக்குத் தேரைத் (சப்பரம்) தூக்கிக் கொண்டு ஊக்கத்தோடு மக்கள் நடப்பது போன்று, வலையைத் தூக்கிக் கொண்டு மிக வலிமையாக, விரைவாகக் காக்கைகள் பறந்தன. வேடன் அலறி விட்டான். 'ஐயயோ... எல்லாம் போச்சே....

காக்கைகள் தங்களது அணில் நண்பர்கள் வாழ்ந்து வந்த வேப்பந் தோப்புக்கு அருகே தரையிறங்கின. அணில்கள் தங்கள் காக்கைத் தோழர்களைப் பார்த்தவுடன் விரைந்து வந்தன. அணில் தலைவனும் காக்கைத் தலைவியும் கலந்துரையாடினர். தங்கள் தலைவனிடமிருந்து ஆணை கிடைத்தவுடன், அணில்கள் வலைகளைக் கடித்துக் குதறின. பறவைகள் மகிழ்ச்சிக் கண்ணீரோடு விடுதலை அடைந்தன.

காக்கைகளுக்கு நன்றி தெரிவித்தன. கருப்பு வண்ணத் தீண்டாமையைத் தூக்கி எறிந்து விட்டு பறவைகள் காக்கைகளைக் கண்ணீர் மல்க ஆரத்தழுவின. அணில்கள் கைத்தட்டின. அப்பொழுது எங்கிருந்தோ பாடல் ஒலித்தது;

'காக்கா கருப்புத் தான் அதன் மனசு வெளுப்புத்தான்

குயிலு கருப்புதான் அதன் குரலு இனிப்புத்தான்

வேடனின் தீய சூழ்ச்சியை மட்டுமன்று, கறுப்பு இன மக்களுக்கு எதிராக அமெரிக்காவின் வல்லாண்மை சூழ்ச்சிச் செயல்பாடுகள் போன்ற தங்களது மடத்தனமான தீர்மானத்தையும் பறவைகள் தெளிவாய் அறிந்து கொண்டன. காக்கைகளின் நற்குணத்தால் பறவைகள் ஒன்றுபட்டன. வேடன் தன் வாழ்வின் ஆதாரமான வலையை இழந்தான்.

வேடம் அணிபவர்கள் வாழ்வை இழப்பார்கள். தவக்காலத்தில் என்றாலும் துறவறத்தில் என்றாலும் தவக்கோலம் உண்மையானதாக இருக்க வேண்டும். வேடத்தனம் கூடாது. வேடம் கலையுமுன்னால் வெளிவேடத்தைக் களைந்திடுவோம். தவத்தை நேர்மையோடு கடைப்பிடிப்போம்.

நமக்கு நேரும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு நெருப்பிலிடப்பட்ட தங்கம் போல் மெய்யறிவோடு மிளிர்வோம்! பிற உயிர்களுக்கு மனத்தாலும் தீங்கு செய்யாமல் உதவி செய்து கலங்கரை விளக்கமாய் ஒளிர்வோம்! 


எழுத்து, 
வெனி இளங்குமரன்.

Tamil Survey Popup Image