திருவழிபாடு: இதயத்தைப் புதுப்பிக்கும் இறையருள் பாலம்! | Veritas Tamil
ஜூன் 03 , புதன்கிழமை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சரியாக காலை 10 மணிக்கு தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தொடங்கினார். கோட்பாட்டு அமைப்புவிதித் தொகுப்பு 'மக்களினங்களின் ஒளி' என்ற திருஅவைப் பற்றி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க ஆவணத்தில், திருவழிபாட்டின் அடிப்படை கூறுகளான: சடங்குமுறை (rite), அடையாளம் (sign), மற்றும் அடையாளம்/குறியீடு (symbol) ஆகியவற்றைப் பற்றிய சிந்தனைகளை திருப்பயணிகளுடன் திருத்தந்தை பகிர்ந்துகொண்டார். முதலில் லூக்கா நற்செய்தியிலிருந்து இறைவார்த்தைகள் ஆங்கிலம், இத்தாலி மற்றும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன. இப்போது வாசகத்திற்கு செவிமடுப்போம்.
அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார். அவர்கள் அவரிடம், “எங்களோடு தங்கும்; ஏனெனில், மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார். அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார். (லூக்கா 24: 28 - 31)
இறைவார்த்தை வாசிப்பிற்குப் பிறகு திருத்தந்தை தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார்.
அன்புள்ள சகோதர் சகோதரிகளே, காலை வணக்கம். உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன்!
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம், திருவழிபாட்டு இயக்கத்தின் (Liturgical Movement) மதிப்புமிக்க பணிகளை அடிப்படையாகக் கொண்டு, தொடக்கக்கால திருஅவையின் விழிப்புணர்விலும் திருஅவைத் தந்தையர்களின் போதனைகளிலும் மிக ஆழமாக உயிரோட்டத்துடன் இருந்த ஓர் உண்மையை நாம் மீண்டும் கண்டறிய உதவியது. கிறிஸ்தவ வழிபாட்டுமுறையின் சடங்குகள் என்பவை திருவருட்சாதன மறைபொருளின் வெளிப்புற மூடியோ அல்லது தன்னிச்சையான சடங்குகளின் தொகுப்போ அல்ல; மாறாக, அவை இறைக்கொடை நம்மை வந்தடைவதற்குக் காரணமாய் இருக்கும் திருஅவையின் வழிமுறையாகும் (ecclesial mediation). இதன்காரணமாகவே, வழிபாட்டுமுறையில் அதன் சடங்குகள் மற்றும் செபங்களின் வழியாக நிறைவேற்றப்படும் நம்பிக்கையின் மறைபொருளை (Mysterium fidei) ஆழமாகப் புரிந்துகொள்ளுமாறு பொதுச்சங்கம் நமக்கு அழைப்பு விடுக்கிறது (காண்க: SC, 48).
வழிபாட்டுச் சடங்கானது வழிபாட்டுச் செயல்பாட்டிற்கு ஒரு வடிவத்தைத் தருகிறது; அதன் வழியாக, நம் வாழ்விற்கும் வடிவம் கொடுத்து, இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாம் இறைவனின் பிரசன்னத்தை சுவைக்கச் செய்யும் ஆன்மீக உணர்திறனை நமக்குள்ளே உருவாக்குகிறது. இயல்பாகவே, நாம் வழிபாட்டுமுறையில் அந்நியர்களாகவோ அல்லது மௌனப் பார்வையாளர்களாகவோ (காண்க: அதே பகுதி) இராமல், ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நமது உடல், மனம் மற்றும் இதயம் என நமது முழு ஆற்றலோடும் அதில் பங்கேற்றால் மட்டுமே இது சாத்தியமாகும்.
இந்தத் தூய சடங்கின் வழியாக, நாம் இறைவார்த்தையைக் கேட்கவும், நன்றி செலுத்தி ஆராதிக்கவும், சகோதரத்துவத்தோடு பகிர்ந்து கொள்ளவும், திருஅவையின் ஒன்றிப்பில் வாழவும் உருவாக்கப்படுகிறோம். ஒரே நம்பிக்கையால் ஒன்றிணைக்கப்பட்ட, பல்வேறு முகங்களைக் கொண்ட ஒரு வழிபாட்டுச் சமூகமாக நாம் நம்மையே கண்டறிகிறோம்.
இந்தச் சடங்கு, துல்லியமாக வரையறுக்கப்பட்ட சைகைகள் மற்றும் செபங்களின் வரிசையில் நம்மை ஈடுபடுத்துகிறது; இது சில நேரங்களில் தன்னிச்சையாகச் செயல்பட விரும்பும் நமது தனிப்பட்ட விருப்பத்திற்கு முரணாகத் தோன்றலாம். இருப்பினும், அதன் நோக்கம் கடுமையான வடிவங்கள் மூலம் நமது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது அல்ல. மாறாக, அதன் சீரான இயக்கங்களின் கம்பீரமான எளிமையின் வழியாக, இச்சடங்கு நமது பரபரப்பான செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, எவை இன்றியமையாதவையோ அவற்றிற்கு நம்மைத் திரும்ப அழைத்துச் செல்கிறது. உற்பத்தி சார்ந்த கணக்கீடுகளால் வழிநடத்தப்படாத ஒரு செயல்பாட்டின் மறுபக்கத்தையும், காலம் மற்றும் வெளி சார்ந்த மற்றொரு அனுபவத்தையும் நாம் இங்கே கண்டறிகிறோம்.
இச்சடங்கில் நாம் இறைவனின் கைம்மாறுகருதா அன்பின் நெறியை (logic of gratuitousness) எதிர்கொள்கிறோம்; இதயத்தைப் புதுப்பிக்கும் ஒரு அமைதியை உணர்கிறோம்; நமக்கு முன்பாகவே இறையருள் இருப்பதை அறிந்துகொள்கிறோம்; மேலும் தூய ஆவியானவர் குடிகொண்டிருக்கும் ஒரு சீரான வாழ்வின் இயக்கத்திற்கு ஏற்ப வாழக் கற்றுக்கொள்கிறோம்.
வழிபாட்டு முறையின் நெறிமுறைகள், அதற்குரிய அடையாளங்களோடும் குறியீடுகளோடும் பின்னி பிணைந்துள்ளன." பொதுச்சங்கம் குறிப்பிடுவது போல, "மனிதனின் புனிதமாக்கல் புலனாகக்கூடிய அடையாளங்களால் குறிக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றிற்கும் உரிய தனித்துவமான வழியில் நிறைவேற்றப்படுகிறது" (SC, 7). கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்விச் சுவடி, இந்த அடையாளங்களின் மதிப்பை மேலும் விளக்கி, "படைப்பின் ஆற்றலிலும் மனித கலாச்சாரத்திலும் வேரூன்றியுள்ள இவற்றின் பொருள், பழைய உடன்படிக்கையின் நிகழ்வுகளில் தெளிவுபடுத்தப்பட்டு, கிறிஸ்துவின் ஆளுமையிலும் அவரது பணியிலும் முழுமையாக வெளிப்படுத்தப்படுகிறது" (எண். 1145) என்பதை நினைவூட்டுகிறது.
இதற்கு ஒரு சிறந்த உதாரணம் தண்ணீரின் அடையாளம் ஆகும்: படைப்பின் தொடக்கத்திலிருந்து வெள்ளப்பெருக்கு வரையிலும், செங்கடலைக் கடந்தது முதல் யோர்தான் ஆறு வரையிலும், இறுதியாகக் கிறிஸ்துவின் விலாவிலிருந்து வழிந்தோடிய நீர் வரையிலும் இது நீடிக்கிறது; இந்த நீர், நாம் அவரது இறப்பிலும் உயிர்த்தெழுதலிலும் மூழ்கியெழுந்ததன் திருவருட்சாதன அடையாளமாக மாறுகிறது.
"அடையாளம்" (sign) மற்றும் "குறியீடு" (symbol) ஆகிய சொற்கள் பெரும்பாலும் ஒன்றிற்குப் பதிலாக மற்றொன்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. உண்மையில், ஓர் அடையாளம் வெறும் ஒரு கருத்தை மட்டும் குறிக்காமல், அர்த்தங்கள் மற்றும் விழுமியங்களின் ஒட்டுமொத்த அமைப்பையே சுட்டிக்காட்டும் போதுதான் அது 'குறியீடாக' மாறுகிறது. எனவே, நம் மீது புனித நீர் தெளிக்கப்படும்போது, திருமுழுக்கின் வழியாக நாம் பெற்ற கொடை பற்றிய விழிப்புணர்வும், கிறிஸ்துவுக்குள் நமக்குக் கிடைத்துள்ள புதிய வாழ்வில் நிலைத்திருப்பதற்கான நமது அர்ப்பணிப்பும் புதுப்பிக்கப்படுகின்றன.மேலும், குறியீடுகள் அடிப்படையில் நடைமுறைத் தன்மை கொண்டவை; ஏனெனில், அவை எல்லாவற்றிற்கும் மேலாகச் 'செயல்பாடுகளாக' இருக்கின்றன: முழங்கால்ப்படியிடுதல் அல்லது சமாதான அடையாளம் பகிர்ந்துகொள்ளுதல் போன்ற சில எளிய மற்றும் பொதுவான செயல்பாடுகள்; ஒவ்வொரு திருவருட்சாதனத்தின் இன்றியமையாத கூறுகளைப் போன்ற இன்னும் சில ஆழமான செயல்பாடுகள். எல்லாவற்றிற்கும் மேலாக, குறியீடுகள் தனித்துவமான செயலாக்க மற்றும் உருமாற்றத் (performative and transformative) திறனைக் கொண்டுள்ளன; அவை தங்களை உருவாக்கும் பருப்பொருள் கூறுகளையும், தங்களோடு தொடர்புகொள்ளும் மனிதர்களையும் ஒரே நேரத்தில் பாதிக்கின்றன. அவை ஒரு பிணைப்புணர்வை உருவாக்குகின்றன, இதயத்தையும் மனதையும் தொடுகின்றன, மேலும் உண்மையான திருஅவை உறவுகளை வளர்க்கின்றன.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 'நான் ஆவலோடு விரும்பினேன்' (Desiderio desideravi) என்ற திருத்தூது மடலில், இறையியலாளர் ரொமானோ குவார்டினி அவர்களின் (Romano Guardini) கூற்றை எதிரொலித்து, "வழிபாட்டுமுறை உருவாக்கத்தின் முதல் பணி: மனிதன் மீண்டும் குறியீடுகளைப் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவனாக மாற வேண்டும்" (எண். 44) என்று அடையாளப்படுத்தியுள்ளார். வழிபாட்டுமுறையின் சடங்குகள் நம்மைப் பக்குவப்படுத்த நாம் நம்மையே அனுமதிக்க வேண்டும்; நமது வழிபாட்டுக் கொண்டாட்டங்களின் அழகைத் தன்னிச்சையான போக்குகள் இன்றி, கவனத்தோடும் வளர்க்க வேண்டும்; மேலும், உண்மையான மறைபொருள் விளக்கக் கற்பித்தலுக்கு (mystagogical catechesis) நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.
பொருத்தமான மறைபொருள் விளக்க அறிவுறுத்தல்களோடு கூடிய, உயிரோட்டமுள்ள மற்றும் பக்திநிறைந்த வழிபாட்டுமுறையின் அனுபவமே, இறைவனை எதிர்கொள்வதற்கான திறந்தமனதை ஒவ்வொருவருக்குள்ளும் தூண்டுவதற்கான மிகச்சிறந்த வழிமுறையாகும். மனுவுருவெடுத்தலின் (Incarnation) தர்க்கத்தின்படி, இத்தகையதொரு சந்திப்பு மனிதனின் முழு ஆளுமையையும் ஆவி, ஆன்மா மற்றும் உடல் (காண்க: 1 தெச 5:23) ஈடுபடுத்துவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.இவ்வாறு தனது மறைக்கல்வி உரையை திருத்தந்தை நிறைவு செய்தார். இறுதியாக இயேசு கற்பித்த இறைவேண்டல் செபத்திற்குப் பிறகு அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தனது திருத்தூது ஆசீரை வழங்கினார்.