மனச்சான்று | சிந்தை குளிர... அகம் மகிழ | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil

மனச்சான்று 
மனிதரின் ஆன்மாவில் ஒலிக்கும் இறைவனின் மெல்லிய குரல்.
உங்கள் வாழ்வை நேரிய வழியில் செலுத்தும் 
திசைகாட்டி; 
உன்னத வழியில் பயணிக்க உதவும் ஒளிவிளக்கு!

மனச்சான்றே 
நீதிமன்றங்கள் அனைத்திலும் தலைசிறந்த நீதிமன்றம்.
உங்கள் இதய நீதிமன்றத்தின் நீதிபதி அதுவே!

உங்கள் மனச்சான்று தெளிவானதாக இருந்தால் நீங்கள்  யாருக்கு அஞ்ச வேண்டும்? எதற்குப் பயப்பட வேண்டும்?
நல்ல மனச்சான்று எந்த சாட்சிக்கும் அஞ்சுவதில்லை!
தெளிந்த மனச்சான்று 
பொய்சாட்சிகளைக் கண்டு நகைக்கும்!

மனச்சான்றே உங்கள் வலிமை;  மகிழ்வின் அடித்தளம்;
மங்காப் பெருமையின் ஊற்று; 
நன்மைத்தனத்தின் நங்கூரம்!

நல்ல மனச்சான்று உங்களை நேர்மையோடு வாழவைக்கும்;
தலைநிமிர்ந்து நடக்கச் செய்யும்; நீடித்தப் புகழைப் பெற்றுத் தரும்;
நல்லவர் மனதில் நாளும் வாழவைக்கும்!

உண்மையான மனச்சான்று உங்களைக் கண்ணியமாய் வாழச் செய்யும்; கவலையின்றி உறங்கச் செய்யும்;
கண்ணிமைப் போல் உங்களைக் காத்து நிற்கும்!

குற்றமுள்ள மனச்சான்று உங்களைக் கொல்லும். அதோடு ஒருநாளும் வாழாதீர்கள். பரமனிடம் 
பாவ மன்னிப்பு பெற்று பாங்குடன் இப்பாரில் வாழ்ந்திடுங்கள்!