ஆசியாவில் பாலம் அமைக்கும் திருஅவை: FABC பொதுப் பேரவையின் அழைப்பு! | FABC | Veritas Tamil

வரும் ஜூலை 20 முதல் 26 வரை இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு (FABC) பொதுப் பேரவையின் கருப்பொருளாக, “இணைந்து பயணிக்கும் திருஅவைக்கான மனமாற்றமும், ஆசியாவில் பாலமாகவும் பாலம் அமைப்பவர்களாகவும் செயல்படுவதற்கான பணியும்” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கருப்பொருள், இன்றைய ஆசியச் சூழலில் திருஅவையின் பணியைப் புதிய கோணத்தில் சிந்திக்க அழைப்பு விடுப்பதாக அமைந்துள்ளது.

சுவர்களைக் கட்டாமல், பாலங்களைக் கட்டுங்கள்” என்ற அழைப்பு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருப்பணியில் தொடர்ந்து ஒலித்த முக்கியமான செய்தியாகும். பயமும், புறக்கணிப்பும் ஒருபோதும் உண்மையான கிறிஸ்தவச் சாட்சியின் அடித்தளமாக இருக்க முடியாது என்பதை அவர் பலமுறை வலியுறுத்தியுள்ளார்.

2024ஆம் ஆண்டு இந்தோனேசியாவுக்கு அவர் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. அந்நாட்டின்கோத்தோங் ரொயோங்” (Gotong Royong) எனப்படும் பரஸ்பர ஒத்துழைப்பு கலாச்சாரத்தை அவர் பாராட்டியதோடு, ஜகார்த்தாவில் உள்ள இஸ்திக்லால் பள்ளிவாசலையும், அன்னை மரியாள் விண்ணேற்பு பேராலயத்தையும் இணைக்கும்நட்புறவுச் சுரங்கப்பாதை” (Tunnel of Friendship), வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருந்தபடியே உரையாடலையும் ஒத்துழைப்பையும் தேர்ந்தெடுக்க முடியும் என்பதற்கான வலிமையான அடையாளம் என்று குறிப்பிட்டார்.

1

ஆனால், இந்தப் பார்வை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களோடு தொடங்கியதல்ல. புனித இரண்டாம் ஜான் பால், தனது ஆசியாவில் திருஅவை’(Ecclesia in Asia (1999) திருத்தூது அறிவுரையில், ஆசியாவின் பண்பாடுகள் மற்றும் சமயங்களுடனான உரையாடல், திருஅவையின் நற்செய்தி அறிவிப்புப் பணியின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும் என்று வலியுறுத்தினார். ஆசியாவின் வளமான ஆன்மிக மரபுகளை உறுதியுடனும் மரியாதையுடனும் அணுகுமாறு அவர் கிறிஸ்தவர்களை அழைத்தார்.

அதேபோன்று, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள், கட்டாயப்படுத்துதலால் அல்ல, மாறாக பகுத்தறிவும் உரையாடலும் வழியாகவே விசுவாசம் வளர்கிறது என்று எடுத்துரைத்தார். இந்த மூன்று திருத்தந்தையர்களின் போதனைகளும், பாலம் அமைத்தல் என்பது வெறும் தூதரக நடவடிக்கையோ அல்லது பொது உறவுத் திட்டமோ அல்ல; அது நற்செய்தியின் உயிரோட்டமிக்க வெளிப்பாடு என்பதைக் காட்டுகின்றன.

உரையாடலின் மரபு

1970ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, FABC, “மூவகை உரையாடல்” என்ற அணுகுமுறையை முன்னெடுத்து வருகிறது. அதாவது, ஆசியாவின் பண்பாடுகளுடன் உரையாடல், சமயங்களுடன் உரையாடல், ஏழைகளுடன் உரையாடல். ஆசியாவில் நற்செய்தி அறிவிப்பு, நிறுவன வலிமையைவிட நம்பிக்கை, மரியாதை மற்றும் ஒற்றுமையின் அடிப்படையில் உருவாகும் உறவுகளையே அதிகமாக சார்ந்துள்ளது என்பதை இந்த அணுகுமுறை எடுத்துக்காட்டுகிறது.

ஆசியாவின் பல்வேறு நாடுகளில் உள்ள திருஅவைத் தலைவர்கள் இந்த நோக்கத்தை தங்கள் வாழ்வில் செயல்படுத்தியுள்ளனர்.

2

தாய்லாந்தில் கர்தினால் மைக்கேல் மிச்சாய் கிட்புஞ்சு புத்த சமயத்தவர்களுடன் நெருக்கமான உறவை வளர்த்தார். இந்தியாவில் கர்தினால் ஓஸ்வால்ட் கிராசியாஸ் சமய நல்லிணக்கத்தை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். இந்தோனேசியாவில் கர்தினால் இக்னேசியுஸ் சுஹார்யோ, பிற சமயத் தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டு, தமது விசுவாசத்தில் உறுதியாக இருப்பதும், பிறருடன் ஒத்துழைப்பதும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல என்பதை எடுத்துக்காட்டியுள்ளார்.

தென் கொரியாவில் கர்தினால் ஸ்டீபன் கிம் சௌ-ஹ்வான், ஜனநாயக மாற்றத்தின் காலத்தில் அமைதி மற்றும் நீதிக்கான குரலாகத் திகழ்ந்தார். பிலிப்பைன்சில் கர்தினால் ஜெய்மி சின், 1986ஆம் ஆண்டின் மக்கள் சக்திப் புரட்சி அமைதியான முறையில் நடைபெற திருஅவையின் தார்மீக செல்வாக்கைப் பயன்படுத்தினார்.

மலேசியாவில் மறைந்த கர்தினால் அந்தோனி சோட்டர் பெர்னாண்டஸ், உரையாடல் என்பது விசுவாசத்திற்கு எதிரான சமரசமல்ல; மாறாக, விசுவாசத்தின் வெளிப்பாடே என்று நம்பினார். தற்போது, மியான்மரில் கர்தினால் சார்ல்ஸ் மாங் போ, மோதல்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை வலியுறுத்தி வருகிறார். அதேவேளை, கர்தினால் லூயிஸ் அந்தோனியோ டாக்லே, செவிமடுத்தல், தாழ்மை மற்றும் உடனிருந்து வழிநடத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட மேய்ப்புப் பணிக்காக உலகளவில் அறியப்படுகிறார்.

இந்த தலைவர்கள் வெவ்வேறு சூழல்களில் வாழ்ந்தாலும், திருஅவை தடையாக அல்ல, பாலமாகச் செயல்படும்போதுதான் அதன் சாட்சி மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்ற ஒரே நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

அன்றாட வாழ்வில் பாலம் அமைக்கும் திருஅவை

பாலம் அமைப்பது சமயங்களுக்கிடையேயான உரையாடலுடன் மட்டும் முடிவதில்லை.

ஆசியாவின் பல நாடுகளில் கத்தோலிக்கர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், கல்வி, நலவாழ்வு, சமூகநலம் மற்றும் பிறரன்புப்பணிகள் மூலம் அனைவருக்கும் பாகுபாடின்றி சேவை செய்து, திருஅவை பெரும் மதிப்பைப் பெற்றுள்ளது. எண்ணிக்கையாலோ அரசியல் செல்வாக்காலோ அல்ல; மாறாக, நேர்மையான சேவை மற்றும் அர்ப்பணிப்பின் வழியாகவே திருஅவை தனது நம்பகத்தன்மையை வெளிப்படுத்தி வருகிறது.

3

மேலும், பாலங்களை அமைப்பவர்கள் ஆயர்கள் அல்லது தலைவர்கள் மட்டுமல்ல. பங்குகளில் சமய நல்லிணக்க நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் தன்னார்வத் தொண்டர்கள், ஏழைகளுக்குச் சேவை செய்யும் துறவியர், பல்வேறு பின்னணியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், இயற்கைப் பேரிடர்களுக்குப் பிறகு ஒன்றிணைந்து உதவும் சமூகங்கள் ஆகியோரின் அமைதியான பணிகளும், மனிதர்களை இணைக்கும் பாலங்களாகத் திகழ்கின்றன. பிளவுகளும், நம்பிக்கையின்மையும் அதிகரித்து வரும் இக்காலத்தில், வேறுபாடுகளை அழிப்பதே திருஅவையின் பணி அல்ல; மாறாக, அந்த வேறுபாடுகள் மனித மாண்பு, பரஸ்பர மரியாதை மற்றும் அமைதியான இணை வாழ்விற்கு ஒருபோதும் தடையாக மாறாதபடி செயல்படுவதே அதன் பணி.

4

எனவே, FABC வலியுறுத்தும்பாலம் அமைத்தல்” என்பது வெறும் மேய்ப்புப் பணித் திட்டம் மட்டுமல்ல. தீர்ப்பளிப்பதற்கு முன் செவிமடுக்கவும், போதிப்பதற்கு முன் உடனிருந்து பயணிக்கவும், மோதலுக்கு முன் சந்திப்பை உருவாக்கவும் அழைக்கும் திருஅவையின் அடையாளமாகும். ஜகார்த்தாவில் கூடும் ஆயர்கள் இந்தப் பார்வையை மீண்டும் உறுதிப்படுத்தினால், அது புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் உரையாடலுக்கான அழைப்பையும், திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டின் அவர்களின் பகுத்தறிவு சார்ந்த அணுகுமுறையையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சகோதரத்துவக் கனவையும், ஆசியத் திருஅவைத் தலைவர்களின் வாழ்வுச் சாட்சியையும் தொடர்ந்து முன்னெடுக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக அமையும்.

பல இனங்கள், மொழிகள், சமயங்கள் இணைந்து வாழும் ஆசியக் கண்டத்தில், திருஅவையின் மிகப்பெரிய இறைவாக்குப் பணி, பிளவுகளின் ஒரு பக்கத்தில் நிற்பதோ அல்லது மற்றவர்களை மட்டும் பாலம் கடக்கச் சொல்வதோ அல்ல; மாறாக, தானே ஒரு பாலமாக மாறி, உரையாடல், தாழ்மை மற்றும் சேவை வழியாக மக்களை ஒன்றிணைப்பதே ஆகும்.