உலகப் பற்றற்ற வாழ்வே சீடத்துவத்தின் சிறப்பு! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 20ஆம் வாரம் 
17 ஆகஸ்ட் 2026, திங்கள்

எசேக்கியேல் 24: 15-24
மத்தேயு 19: 16-22

உலகப் பற்றற்ற வாழ்வே  சீடத்துவத்தின் சிறப்பு!

முதல் வாசகம்.

இன்றைய முதல் வாசகமானது, ஆழமான, வேதனையான ஒரு இறைவாக்குச் செய்தியாகத் தரப்பட்டுள்ளது.  இதில் இறைவாக்கினர் எசேக்கியேலின் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட துயரத்தின் வழியாக, எருசலேமுக்கு வரப்போகும் அழிவை கடவுள் மக்களுக்கு வெளிப்படுத்துகிறார்.
கடவுள் எசேக்கியேலிடம், “உன் கண்களின் இன்பமானவளை ஒரே அடியில் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்வேன்” என்று கூறுகிறார். அது அவருடைய மனைவியைக் குறிப்பதாக இருந்தாலும், சேக்கியேல் வழக்கமான துக்கச் சடங்குகளைச் செய்யக்கூடாது என்று கடவுள் கட்டளையிடுகிறார். இதன்படி, அவர் துக்கத்தை வெளிப்படையாகக் காட்டாமல், இறைவனின் வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறார்.
 மக்கள் எசேக்கியேலிடம், “நீ இப்படிச் செய்வதன் அர்த்தம் என்ன?” என்று கேட்கிறார்கள். அப்போது இறைவன் கூறும் செய்தி மிகவும் கடுமையானது என்றும் எருசலேம் நகரமும் ஆலயமும் அழிக்கப்படும் என்று பதில் கூறுகிறார். 

யூதர்களுக்கு ஆலயம் வெறும் கட்டிடம் அல்ல. அது அவர்களின் பெருமை, பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் இறைவனின் உடனிருப்பின் அடையாளம். ஆம், எருசலேம் அழிக்கப்படும் போது மக்களும் எசேக்கியேலைப் போல வெளிப்படையாகத் துக்கம் அனுசரிக்க முடியாத நிலைக்கு வருவார்கள் என்று மறைமுகமாக எடுத்துரைக்கப்படுகிறது. இதன்மூலம், இறைவன் எசேக்கியேலின் வாழ்க்கையையே ஒரு அடையாளமாக பயன்படுத்துகிறார்.
 
நற்செய்தியின் இந்தப் பகுதி “செல்வந்த இளைஞன்” பற்றிய நிகழ்வாகும். இளைஞன் இயேசுவிடம் வந்து, “நிலைவாழ்வைப் பெற நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?” என்று கேட்கிறான். இயேசு மறுமொழியாக, நீர் வாழ்வடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடியும்” என்றார்.

அவன் இயேசுவைத் தேடி வந்தான்.
இயேசுவின் வார்த்தையைக் கேட்டான்.
ஆனால் தன் செல்வத்தை விட்டுவிட முடியவில்லை.

அவனுக்கு இயேசு, “நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்றார். அவன் வருத்தத்தோடு  வீடு திரும்பினார்.

சிந்தனைக்கு.

நற்செய்தியில் இயேசுவை அணுகி வந்த இளைஞனுக்கு, இறைவனைப் பற்றிய ஆர்வம் இருந்தது. அவனுடைய கேள்வி நல்லது. அவன் வெறும் உலகச் செல்வத்தைப் பற்றி கவலைப்படாமல், நம்மை போன்று நிலைவாழ்வைப் பற்றி சிந்தித்தான். அந்த இளைஞன், “இவற்றையெல்லாம் நான் கடைப்பிடித்து வருகிறேன்” என்கிறான்.
உண்மையில் அவன் வெளிப்புறமாக நல்ல வாழ்க்கை வாழ்ந்தவனாக இருந்திருப்பான். ஆனால் இன்னும் அவனுடைய உள்ளத்தில் ஒரு குறை இருந்தது. அதைச் சுட்டிக் காட்டினார் இயேசு. எனவே, “நிறைவுள்ளவனாக விரும்பினால், போய் உனக்கு உள்ளதை விற்று ஏழைகளுக்குக் கொடு; பின்னர் என்னைப் பின்பற்றி வா” என்கிறார். அந்த இளைஞனுடைய செல்வத்தின் மீதான பற்றுதலை இயேசு வெளிப்படுத்துகிறார். இங்கே நாம்,  நமக்கு உள்ளதை விற்றதோடு நின்றுவிடாமல், கிடைத்த பணத்தை ஏழைகளுக்குப் பகிர வேண்டும். 

ஆழச் சிந்திப்போமானால், அவனிடம் செல்வம் இருந்தது என்பது பிரச்சினை அல்ல;
செல்வம் அவனுடைய இதயத்தைப் பிடித்திருந்ததே பிரச்சினை. இறுதியல்  “அவன் வருத்தத்தோடு சென்றான்”  என்பதே இந்த நிகழ்வின் உச்சமாக உள்ளது.  சுருங்கச் சொன்னால், அவன் இயேசுவைத் தேர்ந்தெடுக்க விரும்பினான்; ஆனால் அவனது செல்வம் அவனுக்குத் தடையாக இருந்தது. 

இயேசுவைப் பின்பற்றுவதற்கு என்ன என்ன பற்றுகள் நம்மை தடுக்கின்றன? பணமா? பதவியா? புகழா? சொந்த விருப்பங்களா? மன்னிக்க முடியாத மனக்கசப்புகளா? நாம் அனைவரும் விண்ணகத்தில் நிலைவாழ்வைப் பெற விரும்புகிறோம். மிக முக்கியமாக,  இவ்வுலகில் வாழும்போதே தயாரிப்புகள் இருக்க வேண்டும்.  

அந்த இளைஞனால் இயேசுவுக்கு நல்ல சீடனாக இருக்க முடியவில்லை.  இநேணுவைத் தேடி பாதி வழி வந்தவரால் மீதி வழி தொடர இயலவில்ல. நாமும் இவ்வாறுதான் ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாக தத்தளிக்கிறோம். “நாம் ஓரளவுக்காவது நல்லவர்களாக இருந்தால் போதும்” என்பதில்  திருப்தியடைந்து விடுகிறோம். உலகப் பற்றற்ற வாழ்வே  சீடத்துவத்தின் சிறப்பு. 

இறைவேண்டல்.
இயேசுவே, நீரே என் செல்வமும், நீரே என் நிலைவாழ்வும் ஆவீர். ஆமென்

 ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலியக்கல்வி மையம்
+60122285452

Tamil Survey Popup Image