புனிதர் பட்டத்தை நோக்கி சிபில் கத்திகாசு: மகிழ்ச்சியில் மலேசிய கத்தோலிக்கர்கள் | VERITAS TAMIL

மலேசியாவின் போர்கால வீராங்கனையான சிபில் காத்திகாசுவின் (Sybil Kathigasu) புனிதர் பட்டத்திற்கான (Canonisation) பயணம் முன்னேறி வரும் நிலையில், அவரை நினைவுகூரும் வகையில் ஜூன் 6 ஆம் தேதி மலேசிய கத்தோலிக்கர்கள் பெனாங்கு மறைமாவட்டத்திலுள்ள புனித மிக்கேல் ஆலயத்தில் ஒன்று கூடினர்.

அவரது மறைவின் 78ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறப்பு செபங்கள், அவரது கல்லறைக்கு மரியாதை செலுத்துதல், நினைவு திருப்பலி மற்றும் ஓய்வு பெற்ற பிரிகேடியர் ஜெனரல் பிட்ஸ்ஜெரால்ட் ஆகஸ்டின் வழங்கிய “என் ஆண்டவரே, உமது திருநாமத்தில் உன்னத தியாகத்தைச் செலுத்துவேன் என்று உறுதியளிக்கிறேன்” என்ற தலைப்பிலான உரையும் இடம்பெற்றன.இரண்டாம் உலகப்போரின் போது மலாயாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக துணிச்சலுடன் செயல்பட்ட செவிலியரும் மகப்பேறு உதவியாளருமான சிபில் காத்திகாசுவின் அசாதாரண வாழ்க்கைப் பயணத்தை இவ்வுரை எடுத்துரைத்தது.

சிபில் டேலி (Sybil Daly) என்ற பெயரில் பிறந்த அவர், பேராக் மாநிலத்தின் பாப்பான் (Papan) பகுதியில் உள்ள தனது இல்லத்திலிருந்து நேச நாடுகளின் (Allied Forces) எதிர்ப்புப் போராட்ட வீரர்களுக்கு ரகசியமாக மருந்துகள், மருத்துவ உதவிகள் மற்றும் பல்வேறு ஆதரவுகளை வழங்கினார். ஜப்பானிய ஆட்சிக்கு எதிராக அவர் மேற்கொண்ட இந்தச் செயல்பாடுகள் இறுதியில் அவரை ஜப்பானிய இராணுவ ரகசிய காவல்துறையான கெம்பெய்தாய் (Kempeitai) அமைப்பின் கைகளில் சிக்க வைத்தன.

கடுமையான சித்திரவதைகளும் நீண்டகால விசாரணைகளும் அவருக்கு எதிராக நடத்தப்பட்டபோதிலும், அவர் உதவி செய்தவர்களின் பெயர்களை வெளிப்படுத்த மறுத்தார். அவர் அனுபவித்த இந்தக் கொடூரமான போர்க்கால துயரங்கள் பின்னர் “No Dram of Mercy” என்ற அவரது சுயசரிதை நூலில் பதிவு செய்யப்பட்டன. அந்த நூல் இன்றளவும் துன்பத்தின் மத்தியில் நிலைத்த நம்பிக்கை, தியாகம் மற்றும் உறுதியான விசுவாசத்தின் சாட்சியாகத் திகழ்கிறது.

சிறைவாசத்தின் போது ஏற்பட்ட காயங்கள் அவரது வாழ்நாள் முழுவதும் உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தின. போருக்குப் பின்னர், முதுகுத்தண்டில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் அவதிப்பட்ட நிலையிலும், பத்து காஜாவில் (Batu Gajah) உள்ள புனித யோசேப்பு ஆலயத்திற்கு தன்னைத் தூக்கிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். ஆலய வாசலில் இறக்கிவிடப்பட்ட அவர், நற்கருணை ஆண்டவர் எழுந்தருளியிருந்த திருப்பேழையின் முன் செபிக்கத் தவழ்ந்து சென்றதாகக் கூறப்படும் சம்பவம் அவரது ஆழ்ந்த விசுவாசத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

மிகுந்த வேதனைகளையும் துன்பங்களையும் எதிர்கொண்டபோதும், இறைவன் மீதான அவரது நம்பிக்கை ஒருபோதும் தளரவில்லை என்பதை இந்த நிகழ்வு வெளிப்படுத்துகிறது.

ஜூன் 6 அன்று நடைபெற்ற நினைவு நிகழ்வில் பங்கேற்றவர்கள் சிபில் காத்திகாசுவின் கல்லறையில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பெனாங்கு மறைமாவட்ட ஆயரும் கர்தினாலுமான செபாஸ்டியன் பிரான்சிஸ் நினைவு திருப்பலியை நிறைவேற்றினார்.தமது மறையுரையில், புனித பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் இடம்பெறும், “நான் ஓட்டத்தை நிறைவு செய்தேன்; விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன்; இனி நான் புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்ற வார்த்தைகளை கர்தினால் செபாஸ்டியன் மேற்கோளாகக் குறிப்பிட்டார்.

இந்த வார்த்தைகள் புனித பவுலுக்குப் பொருந்துவது போலவே சிபில் காத்திகாசுவுக்கும் பொருந்துமா? மேலும் அவை நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தக்கூடியவையா? என்று சிந்திக்குமாறு அவர் விசுவாசிகளை அழைத்தார்.மதம், இனம் மற்றும் கலாச்சார எல்லைகளைக் கடந்து அனைவருக்கும் முன்மாதிரியாக விளங்கும் சாட்சியாக சிபில் காத்திகாசுவை கர்தினால் செபாஸ்டியன் வர்ணித்தார்.

சிபில் காத்திகாசுவின் புனித வாழ்வை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் நோக்கில் மலேசிய கத்தோலிக்க திருச்சபை முக்கியமான முன்னேற்றத்தை 2024 ஜூலை 1 அன்று எட்டியது. அன்றைய தினம் கர்தினால் செபாஸ்டியன், அவரது பீட்டிப்பிக்கேஷன் (Beatification) மற்றும் புனிதர் பட்ட அறிவிப்பு தொடர்பான செயல்முறை முன்னேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

போரில் உயிர் தப்பியிருந்தாலும், சிறைவாசத்தின் போது ஏற்பட்ட காயங்களில் இருந்து அவர் முழுமையாக குணமடையவில்லை. மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக பிரிட்டனுக்கு சென்ற அவர், 1948 ஜூன் 12 அன்று ஸ்காட்லாந்தின் லனார்க்ஷயரில் தனது 49வது வயதில் காலமானார்.

அவரது உடல் பின்னர் மலாயாவிற்கு கொண்டு வரப்பட்டு, ஈப்போவில் உள்ள புனித மிக்கேல் ஆலய வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்று அவரது கல்லறை கத்தோலிக்கர்களுக்கும், அவரது வாழ்க்கையால் ஈர்க்கப்பட்ட பலருக்கும் ஒரு புனித யாத்திரைத் தலமாக விளங்குகிறது.மலேசிய கத்தோலிக்கர்களுக்கு சிபில் காத்திகாசு ஒரு போர்கால வீராங்கனை மட்டுமல்ல. துன்புறுத்தல்களின் மத்தியிலும் தளராத விசுவாசத்துடன் வாழ்ந்த பெண்ணாகவும், துணிவு, இரக்கம் மற்றும் இறைவனுக்கு உண்மையாய் வாழ்வதற்கான ஊக்கமூட்டும் முன்மாதிரியாகவும் அவர் நினைவுகூரப்படுகிறார்.

“விசுவாசத்தில் வேரூன்றிய துணிச்சல், வரலாற்றின் இருண்ட தருணங்களைக்கூட வென்று நிற்கும் என்பதை சிபிலின் வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது,” என்று கர்தினால் செபாஸ்டியன் பிரான்சிஸின் தனிச்செயலாளரான கிறிஸ்டோபர் குஷி, ரேடியோ வேரித்தாஸ் ஆசியாவிடம் தெரிவித்தார்.

அவர் மறைந்து கிட்டத்தட்ட எட்டு தசாப்தங்கள் கடந்திருந்தாலும், சிபில் காத்திகாசுவின் வாழ்க்கைக் கதை மலேசிய கத்தோலிக்க வரலாற்றின் மிகவும் ஊக்கமளிக்கும் மற்றும் மறக்க முடியாத அத்தியாயங்களில் ஒன்றாகத் தொடர்ந்து விளங்குகிறது.