காத்திருத்தல் | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ், க.ச. | Veritas Tamil
இயற்கையில் இறைமை
ஒரு நிகழ்வு என் நினைவுக்கு வருகிறது. புகழ்பெற்ற நகைச்சுவையாளர் 'யாக்கவ் ஸ்மிநாப்' முதல் முறையாக ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவிற்கு செல்கிறார். அங்கு 'அமெரிக்கா' மளிகைக்கடைக்கு செல்கிறார். 'உடனடியாகத் தயாரிக்கலாம்' என்று அச்சிடப்பட்ட பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அதைக் கண்டு அவர் வியந்துபோனார். அவர் அந்த வியப்பினைப் பற்றிச் சொல்லும்போது இவ்வாறு சொன்னார், “நான் முதன் முறையாகக் கடைக்குச் சென்றேன்; (தூளாக்கப்பட்ட) பால் பவுடரைப் பார்த்தேன். கொஞ்சம் தண்ணீர் கலந்தால் பால் உடனடியாகத் தயாரித்து விடலாம். பிறகு ஆரஞ்சுப் பழச்சாற்றிற்கான பவுடரைப் பார்த்தேன். அதில் கொஞ்சம் தண்ணீர் கலந்தால் பழச்சாறு உடனடியாக கிடைக்கும். இவ்வாறு பார்த்துக்கொண்டே வந்த நான் அழகு சாதனப் பொருளான முகப்பவுடரைப் பார்த்தேன். இதிலிருந்து என்ன கிடைக்கும் என்று நினைத்து, இது என்ன நாடு என்று மலைத்துப் போனேன்.
ஆம், உலகத்தை இன்று அவசரம் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த அவசர உலகத்தில் பொறுமை என்பதை இழந்து நாமும் அவசரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எல்லாமே நமக்கு உடனடியாகக் கிடைத்துவிட வேண்டுமென்ற பேராசை. அதனை அடைய நாம் எந்த நிலைக்கும் சென்று விடுகிறோம்.
சிறைக்கைதி ஒருவனைக் கண்ட நீதிபதி அவன்மேல் இரக்கப்பட்டு, "நீ எதற்காக இந்தத் தண்டனையை அனுபவிக்கிறாய்?” என்று கேட்டார்.
நான் வெகு சீக்கிரமாகக் கடைக்குச் சென்று விட்டேன்” என்றான். “அது ஒரு பெரிய குற்றமே இல்லை. எவ்வளவு சீக்கிரம் சென்றாய்?" என்று கேட்டார். அவனோ, “கடை திறப்பதற்கு முன்பே” என்றான்.
உடனடித் தேவையை நிறைவேற்றுவதில் நாம் எவ்வளவு அவசரப்படுகிறோம். பொறுமை இருப்பதில்லை. பொறுமை, காத்திருப்பு என்ற சொற்களெல்லாம் இந்த அவசர உலகில் காணாமல் போய்விட்டது. இந்தப் பொறுமையையும், காத்திருப்பையும் நாம் இயற்கையிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
சூரிய உதயத்திற்காக காத்திருத்தல் என்பது நமக்கு இன்னொரு நாளை கிடைக்கச் செய்கிறது.
15 நாள்கள் காத்திருத்தல் என்பது அழகிய பௌர்ணமியைக் காணச் செய்கிறது.
10 மாதம் காத்திருத்தல் என்பது பிள்ளைப் பேற்றைத் தருகிறது.
மெதுவாக வளர்ந்து நிலைத்து நிற்கும் மரத்தின் பொறுமைதான் பூவும், காயும், கனிகளும். இவ்வாறு... இயற்கை அனைத்தும் பொறுமையாக இருப்பதால்தான், அதன் சுழற்சி இன்னும் மாறாமல் இருக்கிறது. இந்த இயற்கைமீது அளவிலா பிரியம்கொண்டு, மாறாத அன்புடன் அதனைக் கூர்ந்து நோக்கி, இரசித்து, இன்புற்று, அனுபவித்து சகோதர, சகோதரிகளாக அழைத்து மகிழ்ந்த மாமனிதர் நம் தந்தை பிரான்சிஸ், இயற்கையிடமிருந்து அவர் கற்றுக்கொண்ட பாடம்.
நிதானம், பொறுமை, காத்திருப்பு, தன்னிலை மறத்தல்... இவற்றின் வழி நாம் இறைவனை நேசிப்போம்... தரிசிப்போம்...
மண்ணிலும் இருப்பான்; மரத்திலும் இருப்பான்;
கல்லிலும் இருப்பான்; கடலிலும் இருப்பான்:
ஆகாயத்திலும் இருப்பான்:
அலையோசையிலும் இருப்பான்:
அகிலத்திலும் இருப்பான்; அணுவிலும் இருப்பான்
இயற்கைக்குச் சேவை....
இறைவனுக்கே சேவை...
எழுத்து
அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ், க.ச.