அருட்பணி. போல்மாக்ஸ் பணியைத் தொடரும் கோவா இளைஞர்கள் | Veritas Tamil

இந்தியாவின் கோவா மாநிலத்தில் உள்ள சிக்காலிம் இளைஞர் விவசாயிகள் கழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், தங்களின் முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி போல்மாக்ஸ் ஃபிடெலிஸ் பெரேரா ஊக்குவித்த வயல்களில் நெல் நடவு செய்தனர். விவசாயத்தை மீட்டெடுத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற அவரது கனவைத் தொடர்ந்து செயல்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நாற்று நடவு நிகழ்ச்சியில், தெற்கு கோவாவின் நாடாளுமன்ற உறுப்பினரும் சிக்காலிம் பங்கின் உறுப்பினருமான கேப்டன் விரியாட்டோ பெர்னாண்டஸ், மேலும் அருட்பணி போல்மாக்ஸின் தாயார் பிலிப்பினா பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நெல் நடவு, 2026 மே 26 அன்று இறையடி சேர்ந்த கோவா மற்றும் டாமன் உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்பணி போல்மாக்ஸ் பெரேராவின் பணியைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகும். தாவரவியலாளர், கல்வியாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலரான அவர், சிக்காலிம் இளைஞர் விவசாயிகள் கழகத்தை நிறுவி வழிநடத்தி, இளைஞர்களை நிலையான விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வில் ஈடுபட ஊக்குவித்தார்.

இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள தெற்கு கோவா பகுதியில், வாஸ்கோ ட காமா துறைமுக நகரத்திற்கு அருகிலுள்ள மோர்முகாவ் பகுதியில் சிக்காலிம் அமைந்துள்ளது.

இளைஞர் விவசாயிகள் கழகத்தின் தலைவர் ஷோகன் பெர்னாண்டஸ் கூறுகையில், கொரோனா (COVID-19) பெருந்தொற்று காலத்தில் உணவுப் பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உள்ளூர் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக  இந்தக் குழு உருவாக்கப்பட்டது என்றார்.

“அருட்பணி போல்மாக்ஸ் எங்களின் வழிகாட்டியாக இருந்து, பொறுமையுடன் எங்களுக்கு விவசாயத்தை கற்றுக்கொடுத்து, இயற்கையின் மீது அன்பை வளர்த்தார். இளைஞர்களின் ஆற்றலை இயற்கையைப் பாதுகாக்கும் சக்தியாக மாற்றினார்,” என்று ஷோகன் தெரிவித்தார்.

அருட்பணி போல்மாக்ஸ், இயற்கை (ஆர்கானிக்) விவசாயம், மழைநீர் சேகரிப்பு, மறுசுழற்சி (Recycle) ஆகிய கொள்கைகளை நடைமுறைப்படுத்த இளைஞர்களை ஊக்குவித்தார். மேலும், விவசாய இயந்திரங்களை இயக்குவதற்கான பயிற்சியையும் இளைஞர்களுக்கு அளித்து, அவர்களுக்கு நடைமுறை விவசாயத் திறன்களை வளர்த்தார்.

இன்று அந்தக் கழகம், அவரது பணியைத் தொடர்ந்து, நிலையான விவசாயத்தை ஊக்குவித்தல், இளைஞர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சதுப்புநிலக் காடுகளை (Mangroves) பாதுகாத்தல், மற்றும் பயன்பாடின்றி கிடக்கும் விவசாய நிலங்களை மீண்டும் சாகுபடிக்குக் கொண்டு வர கிராம மக்களை ஊக்குவித்தல் போன்ற பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது.


சிக்காலிம் இளைஞர் விவசாயிகள் கழகத்தின் கள ஒருங்கிணைப்பாளர் ஜெரிகோ வாஸ், சமீபத்தில் நடைபெற்ற நெல் நாற்று நடவு நிகழ்ச்சியில், அருட்பணி  போல்மாக்ஸ் இல்லாத நிலையில் மிகவும் உணர்வுபூர்வமான அனுபவமாக இருந்ததாகக் கூறினார்.“அவரில்லாமல் நாற்று நடவு செய்தது மனதை நெகிழச் செய்தது. ஆனால், அவரது பணியை நான் தொடர்ந்து செய்கிறேன் என்ற உணர்வு எனக்குள் இருந்தது,” என்று ஜெரிகோ தெரிவித்தார்.

கழக உறுப்பினரான வலேரி அஃபோன்சோ, அருட்பணி போல்மாக்ஸ் இளைஞர்களுக்கு வெறும் அறிவுரைகள் வழங்கியவர் அல்ல; அவர்களுடன் இணைந்து களத்தில் உழைத்த அருட்பணியாளர் என்று நினைவுகூர்ந்தார்.

“வயலுக்குள் இறங்கி வேலை செய்த முதல் அருட்பணியாளரை நான் அவரிடமே பார்த்தேன். அவர் எங்களுக்கு கட்டளையிடவில்லை; எங்களோடு சேர்ந்து உழைத்தார், எங்களுடைய கருத்துகளையும் கவனமாகக் கேட்டார்,” என்று அவர் கூறினார்.

மேலும், கோவாவில் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் பிரச்சினைகளில் இளைஞர்கள் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்றும், நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல், விவசாய நிலங்களைப் பாதுகாத்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அருட்பணி போல்மாக்ஸ் தொடர்ந்து ஊக்குவித்ததாக அவர் தெரிவித்தார்.

 அவர் இளைஞர்களுக்குள் விதைத்த சுற்றுச்சூழல் அக்கறையும், விவசாயத்தின் மீதான பற்றும், அவர் உருவாக்கிய விவசாய முயற்சிகள் மூலம் இன்றும் தொடர்ந்து வாழ்ந்து வருகிறது.

Tamil Survey Popup Image