கடல் வாழ்வுக்கு அச்சுறுத்தலா? பிலிப்பைன்ஸ் திருஅவை கவலை | Veritas Tamil

பிலிப்பைன்ஸின் வடக்கு பகுதியில் உள்ள லாவோக் (Laoag) மறைமாவட்டம், இலோகோஸ் நோர்டே (Ilocos Norte) மாகாணத்தின் புர்கோஸ் (Burgos), பங்குய் (Bangui), மற்றும் பகுட்புட் (Pagudpud) கடலோரப் பகுதிகளில் முன்மொழியப்பட்டுள்ள கடல்சார் காற்றாலை (Offshore Wind Farm) திட்டங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்ற நல்ல நோக்கத்தைக் கொண்டிருந்தாலும், இந்தத் திட்டம் கடல் உயிரியல் அமைப்புகளையும் ஆயிரக்கணக்கான சிறிய அளவிலான மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கக்கூடும் என்று மறைமாவட்டம் எச்சரித்துள்ளது.

 ஆயர் ரெனாட்டோ பி. மயுக்பா (Bishop Renato P. Mayugba) வெளியிடப்பட்ட சுற்றறிக்கை கடிதத்தில் குருக்கள், துறவியர், மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்கள் "பொதுவான இல்லமான" இயற்கையைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலைப்பாட்டிற்கு திருத்தந்தை பிரான்சிஸின் Laudato Si திருமடலை அடிப்படையாகக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருஅவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முயற்சிகளை ஆதரிக்கிறது. ஆனால், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சிகள் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தையோ அல்லது உள்ளூர் உயிரினப் பல்வகைமையையோ பாதிக்கக் கூடாது என்று ஆயர் வலியுறுத்தியுள்ளார்.

மறைமாவட்டத்தின் அறிக்கையின்படி, மிதக்கும் காற்றாலை மின்கோபுரங்கள் அமைப்பதும், கப்பல்கள் செல்லத் தடை செய்யப்பட்ட கடல் பகுதிகளை உருவாக்குவதும், பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளை பாதிக்கக்கூடும். இதனால் மீனவர்கள் தங்கள் வழக்கமான கடலோரப் பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் போகலாம். மேலும், ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தைத் தாங்கி நிற்கும் கடல் உயிரியல் அமைப்புகளும் சேதமடையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், பசுக்வின் (Pasuquin), புர்கோஸ் (Burgos), பங்குய் (Bangui), மற்றும் பகுட்புட் (Pagudpud) ஆகிய பகுதிகளில் உள்ள 6,500-க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான மீனவர்கள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும் என்று மறைமாவட்டம் கூறியுள்ளது.

மேலும், கடலடிப் பகுதியில் நடைபெறும் கட்டுமானப் பணிகள், தொடர்ச்சியான குறைந்த அதிர்வெண் ஒலி, மீன்களின் இடம்பெயர்வு, மற்றும் கடல் உயிரினங்களின் இயற்கை வாழ்வுச்சூழல் பாதிக்கப்படுவது குறித்தும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

"உண்மையான சுற்றுச்சூழல் மாற்றம்" என்பது இயற்கைப் பாதுகாப்பையும் சமூக நீதியையும் ஒன்றிணைத்ததாக இருக்க வேண்டும் என்று மறைமாவட்டம் வலியுறுத்தியுள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் கடலோர ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பலிகொடுக்கக் கூடாது என்றும் அது தெரிவித்துள்ளது.

அதேவேளை, அரசு அதிகாரிகள், சுற்றுச்சூழல் நிபுணர்கள், கல்வி நிறுவனங்கள், இளைஞர்கள் மற்றும் உள்ளூர் மக்களுடன் இணைந்து இலோகோஸ் நோர்டே கடலோரப் பகுதிகளைப் பாதுகாக்கவும், நிறுவனங்களின் லாபத்தை விட மனித மையப்படுத்தப்பட்ட உண்மையான சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கவும் மறைமாவட்டம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும், வருங்கால சந்ததியினரின் நலனுக்காகவும், கடலோரச் சூழலைப் பாதுகாப்பதற்காகவும், இலோகோஸ் பகுதி மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லாவோக் மறைமாவட்டத்தின் இந்த அறிக்கை, பிலிப்பைன்ஸ் அரசு தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் பாதுகாப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக கடல்சார் காற்றாலைத் திட்டங்களை விரிவுபடுத்தும் முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் சூழலில் வெளியாகியுள்ளது.

Tamil Survey Popup Image