நேபாளத்திற்காக ஆசிய மக்களின் சமய நல்லிணக்க இறைவேண்டல் | Veritas Tamil

செப்டம்பர் 15ஆம் நாள், ஆசியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் நேபாளத்திற்காக நடைபெற்ற சமய நல்லிணக்க இறைவேண்டல் நிகழ்வில் இணையவழியாகப் பங்கேற்றனர். பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட இவ்விறைவேண்டல், நடைமுறை சார்ந்த ஒருமைப்பாடு, இரக்கமிக்க சேவை மற்றும் படைப்பைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கான அழைப்பாகவும் அமைந்தது.

ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் மனிதவள மேம்பாட்டுக்கான அலுவலகம் (FABC-OHD), ரேடியோ வேரித்தாஸ் ஆசியா மற்றும் "லௌதாதோ சி" இயக்கத்தின் ஆசிய-பசிபிக் பிரிவு ஆகியவை, மியான்மர், இந்தோனேசியா, கொரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் திமோர்-லெஸ்தே ஆகிய நாடுகளின் அதன் கிளைகளுடன் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

நேபாள மக்களுடன் இணைந்து “துயரப்படவும், செவிமடுக்கவும், துணைநிற்கவும், நம்பிக்கையுடன் இருக்கவும்” பங்கேற்பாளர்கள் அழைக்கப்பட்டனர். மேலும், இறைவேண்டல் எவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடைமுறை ஆதரவாக மாற முடியும் என்பது குறித்தும் சிந்திக்கப்பட்டது.

நேபாளத்திலிருந்து உரையாற்றிய இயேசு சபை அருள்பணி முனைவர் போபி ஜோசப் தாதத்தில், SJ, காத்மாண்டுவில் உள்ள புனித சவேரியார் பள்ளியின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். பேரிடர், இரக்கத்தைச் செயலாக வெளிப்படுத்துவதற்கான தருணமாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார். மனிதநேயம், இரக்கம் மற்றும் சேவையை வெளிப்படுத்த வேண்டிய காலம் இது” என்று அவர் தெரிவித்தார்.

இந்தப் பேரிடர் மனித உயிர்கள் மற்றும் உடைமைகளை மட்டுமல்லாமல், வீடுகள், வாழ்வாதாரங்கள், கல்வி, நலவாழ்வு, குடிநீர் அமைப்புகள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளையும் பாதித்துள்ளதாக அருள்பணி போபி கூறினார். மீட்பு மற்றும் மறுகட்டமைப்புக்கான நீண்டகாலப் பணிகளிலும் தொடர்ந்து ஒருமைப்பாட்டுடன் துணைநிற்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் தங்குமிடம், உணவு, நலவாழ்வுப் பராமரிப்பு, பாதுகாப்பான குடிநீர் ஆகியவற்றைப் பெறுவதில் சிரமப்படும் குடும்பங்களின் தேவைகளை அவர் சுட்டிக்காட்டினார். நேபாளத்திற்கு வெளியே உள்ள சமூகங்கள், வீடமைப்பு, கல்வி, உளவியல் மற்றும் சமூக ஆதரவு, வாழ்வாதாரம், நலவாழ்வு மற்றும் தூய்மை, பேரிடர் முன்னெச்சரிக்கை உள்ளிட்ட துறைகளில் நடைமுறை ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கரித்தாஸ் நேபாளத்தின் இயக்குநரான அருள்சகோதரி செசிலியா ஷ்ரேஷ்தா, காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய பேரிடர்களால் சமூகங்கள் அதிகளவில் பாதிக்கப்படும் நிலையை இப்பேரிடர் எடுத்துக்காட்டுகிறது என்று தெரிவித்தார்.

காலநிலை மாற்றம் என்பது நேபாள மக்களுக்கு இனி தொலைதூரத்திலோ அல்லது எதிர்காலத்திலோ ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் அல்ல; அது ஏற்கனவே மக்களின் வாழ்வு, வாழ்வாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் இடம்பெயர்வு ஆகியவற்றைப் பாதித்து வருகிறது” என்று அவர் கூறினார்.

காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய பேரிடர்கள் ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களை அதிக அளவில் பாதிக்கின்றன என்று குறிப்பிட்ட அவர், ஆசிய-பசிபிக் மாநிலத்தில் மேலும் வலுவான ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்தார்.

ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் மனிதவள மேம்பாட்டுக்கான அலுவலகத்தின் தலைவரான ஆயர் ஆல்வின் டி சில்வா அவர்கள், எசேக்கியேல் 47ஆம் அதிகாரத்தில் இடம்பெறும் வாழ்வளிக்கும் நீரின் விவிலிய உருவகத்தை எடுத்துரைத்து, சமூகங்களின் குணப்படுத்துதலையும் படைப்பைப் பாதுகாப்பதையும் இணைத்துப் பேசினார்.

காலநிலை நெருக்கடிக்கு நடைமுறை சார்ந்த பதிலளிப்புகளை வலுப்படுத்துமாறு அவர் பங்கேற்பாளர்களை ஊக்குவித்தார். குறிப்பாக, ஆற்றல் பயன்பாட்டை ஆய்வு செய்தல், ஆற்றல் திறனை அதிகரித்தல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சூரிய ஆற்றல் மற்றும் மின்சார வாகனங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை அவர் வலியுறுத்தினார். நேபாளப் பேரிடர், பூமியைப் பாதுகாப்பதில் நமக்கு ஒரு பாடமாக அமையட்டும்” என்று ஆயர் டி சில்வா அவர்கள் கூறினார்.

பஹாய், புத்த, இஸ்லாமிய மற்றும் கிராத் சமய மரபுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கத்தோலிக்கர்களுடன் இணைந்து உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக இறைவேண்டல் செய்தனர்.

ஆசிய-பசிபிக் முழுவதும் உள்ள "லௌதாதோ சி"  இயக்கத்தின் கிளைகள், கொரிய, பர்மிய, இந்தோனேசிய, தெதுன் மற்றும் பிலிப்பினோ மொழிகளில் இறைவேண்டல்களை வழங்கின. இதன் மூலம் இந்நிகழ்வின் மாநில மற்றும் சமய நல்லிணக்கத் தன்மை வெளிப்படுத்தப்பட்டது.

நேபாளத்தின் மீட்பு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளில் தொடர்ந்து துணைநிற்கவும், “ஒருமைப்பாட்டின் மக்களாகவும், இரக்கத்தின் மக்களாகவும், நமது பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பவர்களாகவும்” மாறவும் விடுக்கப்பட்ட அழைப்புடன் இவ்விறைவேண்டல் நிகழ்வு நிறைவடைந்தது.

நேபாளத்திற்காக மட்டுமல்ல, நேபாள மக்களுடன் இணைந்து இறைவேண்டல் செய்வோம்” என்ற அழைப்பை முன்னிறுத்திய ஏற்பாட்டாளர்கள், மனிதாபிமான ஒருமைப்பாட்டையும் சுற்றுச்சூழலுக்கான பொறுப்புணர்வையும் ஒன்றிணைத்தனர்.

 

Tamil Survey Popup Image