டிஜிட்டல் மறைப்பணிக்கு உடனிருத்தல் அவசியம் | Veritas Tamil
டிஜிட்டல் மறைப்பணிக்கு உடனிருத்தல் அவசியம்: வத்திக்கான் தகவல் தொடர்பு அதிகாரி
செப்டம்பர் 12, 2026 அன்று கியூசான் நகரில் நடைபெற்ற ஆசிய கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர் பேரவையில் ஊக்கமளிக்கும் அமர்வு மற்றும் உடனிருத்தலை வழங்கிய முனைவர் நடாஷா கோவெகாரை ஏற்பாட்டுக் குழுவினர் பாராட்டினர்.
டிஜிட்டல் நற்செய்திப் பணியை வெறுமனே உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கோ அல்லது இணையதள ஈடுபாட்டை அதிகரிப்பதற்கோ மட்டுப்படுத்த முடியாது. மாறாக, அது ஒன்றிப்பு மற்றும் உறவுகளை உருவாக்குவதற்கு உதவ வேண்டும் என்று வத்திக்கான் தகவல் தொடர்பு திருப்பணிக்குழுவின் இறையியல்-மேய்ப்புப்பணி துறையின் இயக்குநர் முனைவர் நடாஷா கோவெகார் தெரிவித்தார்.
ரேடியோ வெரித்தாஸ் ஆசியாவிற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், டிஜிட்டல் உலகில் திருஅவையின் இருப்பு இறுதியில் உண்மையான மனிதச் சந்திப்புகளுக்கும் சமூகத்திற்கும் மக்களை வழிநடத்த வேண்டும் என்று அவர் கூறினார். அதேவேளையில், சமூக ஊடகத் தளங்கள் தனிமை, அடிமைத்தனம் மற்றும் பிளவுகளை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிலிப்பைன்ஸின் மெட்ரோ மணிலா, கியூசான் நகரில் நடைபெற்ற முதல் ஆசிய கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர் பேரவையில் முனைவர் கோவெகார் உடனிருந்து வழிகாட்டினார். மூன்று நாள் நிகழ்விலும் அவர் பங்கேற்றதுடன், டிஜிட்டல் உலகில் தகவல் தொடர்பு குறித்த திருஅவையின் பார்வை பற்றிய அமர்வையும் வழிநடத்தினார்.
செப்டம்பர் 10 முதல் 13 வரை நடைபெற்ற இப்பேரவையில் ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர்கள், தகவல் தொடர்பாளர்கள், உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் நம்பிக்கை சார்ந்த சமூக ஊடகச் செயல்பாட்டாளர்கள் பங்கேற்றனர். ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் சமூகத் தொடர்பு அலுவலகம் (FABC-OSC) மற்றும் ரேடியோ வெரித்தாஸ் ஆசியா ஆகியவை, வத்திக்கான் தகவல் தொடர்பு திருப்பணிக்குழுவின் Fully Present Network அமைப்புடன் இணைந்து இப்பேரவையை ஏற்பாடு செய்தன.
டிஜிட்டல் உலகின் ஆபத்துகளை உணர வேண்டும்
“டிஜிட்டல் நெடுஞ்சாலைகள்” என்று அவர் குறிப்பிட்ட டிஜிட்டல் உலகில் காணப்படும் ஆபத்துகளை முதலில் திருஅவை அடையாளம் காண வேண்டும் என்று கோவெகார் கூறினார். குறிப்பாக, 2023ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “Towards Full Presence” என்ற மேய்ப்புப்பணி சிந்தனை ஆவணம், டிஜிட்டல் தகவல் தொடர்பின் வாய்ப்புகள் மற்றும் சவால்களை எடுத்துரைப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆவணம் வெளியிடப்பட்டதிலிருந்து சமூக ஊடகங்களின் எதிர்மறையான தாக்கங்கள் குறித்து அதிகமான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, பயனர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சமூக ஊடகத் தளங்களின் அல்காரிதம்கள், அடிமைத்தனம், கட்டுப்பாடற்ற முறையில் தொடர்ந்து ஸ்க்ரோல் செய்தல் மற்றும் சமூகப் பிளவு போன்றவற்றை அதிகரிக்கக்கூடும் என்று அவர் கூறினார்.
“இந்த ஆபத்திலிருந்து திருஅவை வெளியே இல்லை” என்று கூறிய கோவெகார், டிஜிட்டல் தளங்களால் உருவாகும் பிளவுகள் கிறிஸ்தவ சமூகங்களையும் பாதிக்கக்கூடும் என்று குறிப்பிட்டார்.
இதற்கான சவால், டிஜிட்டல் உலகில் “மாறுபட்ட ஒரு பாணியிலான இருப்பை” உருவாக்குவதாகும் என்று அவர் கூறினார். உண்மையான சந்திப்புகளை ஊக்குவிக்கும் வகையில் டிஜிட்டல் இருப்பு அமைய வேண்டும். அதன் மூலம் உண்மையான சமூகங்களையும் ஒன்றிப்பையும் உருவாக்க முடியும் என்றார்.
திறன்களைக் காட்டிலும் சீடத்துவம் முக்கியம்
சமூக ஊடகங்கள் மற்றும் உருவாக்கப் பயிற்சி குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட Faith Communication in the Digital World என்ற திட்டத்தையும் கோவெகார் விளக்கினார்.
ஆரம்பத்தில், ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படும் 16 இளம் தொழில்முறை நிபுணர்களுக்கான பரிசோதனைத் திட்டமாக இது தொடங்கப்பட்டது. பல்வேறு நாடுகள், பின்னணிகள் மற்றும் துறைகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து, குறிப்பிட்ட திருஅவை நிறுவனங்களுக்கான நடைமுறை தகவல் தொடர்புத் திட்டங்களைச் சிந்தித்து செயல்படுத்தும் வகையில் இத்திட்டம் அமைந்தது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இத்திட்டம் Fully Present Network எனப்படும் முன்னாள் பங்கேற்பாளர்களின் வலையமைப்பாக வளர்ந்துள்ளது.
இந்த வலையமைப்பு இணையவழிக் குழுக்கள் மற்றும் கூட்டு திட்டங்கள் மூலம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதில் பங்கேற்றவர்கள் பயிற்றுநர்கள், வழிநடத்துநர்கள் மற்றும் திருஅவையின் தகவல் தொடர்புத் திட்டங்களுக்கான பங்களிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர். சிலர் தங்களது சிறப்புத் திறன்களைப் பயன்படுத்தி இணையதளங்கள் மற்றும் பிற திட்டங்களிலும் பணியாற்ற அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், இத்திட்டத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம் தொழில்முறை திறன்களைத் தாண்டியது என்று கோவெகார் கூறினார். “சீடத்துவம்” தேவை என்பதை வலியுறுத்திய அவர், ஒருவர் தனது பணியில் வளரும்போது அவருடன் உடனிருந்து வழிகாட்டுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
“இது வெறுமனே ஒரு உள்ளடக்கத்தை வழங்குவது அல்லது ஒரு நிகழ்ச்சியை மீண்டும் உருவாக்குவது பற்றியது அல்ல. ஏற்கனவே இதே போன்ற பயணத்தை மேற்கொண்ட ஒருவரின் உடனிருப்புடன், அந்த அனுபவத்திற்குள் ஆழமாக நுழைவது பற்றியது” என்று அவர் கூறினார்.
திருஅவையின் தகவல் தொடர்புப் பணியில் இந்த உடனிருத்தல் மிகவும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார். ஏனெனில், நம்பிக்கை உருவாக்கத்தையும் தொழில்முறை பயிற்சியையும் உடனிருத்தல் மற்றும் ஒன்றிப்பிலிருந்து பிரிக்கக்கூடாது என்றார்.
ஆசியா முழுவதும் கத்தோலிக்க சமூகங்கள் இளைஞர்களைச் சென்றடையவும், விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ளவும் டிஜிட்டல் தளங்களை அதிகளவில் பயன்படுத்தி வரும் நிலையில், கோவெகாரின் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.
அவரைப் பொறுத்தவரை, பெரிய பார்வையாளர் கூட்டத்தை உருவாக்குவது மட்டுமே இலக்காக இருக்கக்கூடாது. டிஜிட்டல் தகவல் தொடர்பு மக்களை உறவுகளுக்கும், சமூக வாழ்வுக்கும், ஒன்றிப்புக்கும் வழிநடத்துவதே உண்மையான இலக்காக இருக்க வேண்டும்.
