மாறிவரும் உலகில் தகவல் குவிப்பை விட ஆன்மீக ஞானமும் பகுத்தறிதலும் அவசியம்: பேராசிரியர் தோமாஷ் ஹாலிக் | FABC | Veritas Tamil

இன்றைய வேகமாக மாறிவரும் உலகில் திருஅவை உண்மையுடன் தனது பணியை நிறைவேற்ற வேண்டுமெனில், அதிகமான தகவல்களைக் குவிப்பதை விட ஆன்மீக ஞானத்தையும் பகுத்தறிதலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று செக் குடியரசைச் சேர்ந்த இறையியலாளரும் சமூகவியலாளருமான பேராசிரியர் பேரருள்திரு தோமாஷ் ஹாலிக் அவர்கள் வலியுறுத்தினார்.

ஜூலை 23 அன்று, செக் குடியரசிலிருந்து காணொளி வாயிலாக, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இடம்பெற்ற ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12ஆவது பேரவையில் பங்கேற்ற ஆயர்கள் மற்றும் பிரதிநிதிகளிடம் உரையாற்றிய அவர், உலகம் ஆழமான மாற்றங்களை எதிர்கொண்டுவரும் இக்காலத்தில், திருஅவை கடவுளின் குரலையும், ஒருவரையொருவர் செவிமடுத்துக் கேட்பதையும் மேலும் ஆழப்படுத்த வேண்டும் என்றார்.

ஒன்றிணைந்த மனமாற்றத்திற்கான அழைப்பும், ஆசியாவில் பாலங்களாகவும் பாலங்களை உருவாக்குபவர்களாகவும் விளங்கும் மறைப்பணியும்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்தப் பேரவையில் நேரில் கலந்துகொள்ள முடியாத அவர், நவீன தொழில்நுட்பம் புவியியல் தூரங்களைக் குறைக்க முடிந்தாலும், பகிரப்பட்ட நம்பிக்கையிலிருந்து பிறக்கும் உண்மையான ஒற்றுமையை உருவாக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

தொழில்நுட்பம் புவியியல் தூரங்களை இணைக்க முடியும். ஆனால், எவ்வளவு மேம்பட்ட தொழில்நுட்பமாக இருந்தாலும், அது உண்மையான நெருக்கத்தை உருவாக்க முடியாது. அந்த நெருக்கம் நமது விசுவாசத்திலும், திருஅவைக்கும் ஆண்டவருக்கும் நாம் பகிர்ந்துகொள்ளும் பொறுப்புணர்விலும்தான் உருவாகிறது” என்று அவர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு, எண்மமுறை தகவல் தொடர்பு மற்றும் சமூக, அரசியல் மாற்றங்கள் நிறைந்த இக்காலத்தில் பகுத்தறிதல் மிகவும் அவசியம் என்று வலியுறுத்திய அவர், “நமக்குக் கிடைக்கும் தகவல்கள் அதிகரிக்க அதிகரிக்க, அவற்றைப் பகுத்தறியும் ஞானத்தின் தேவையும் அதிகரிக்கிறது. இன்றைய சிக்கலான உலகச் சவால்களை எதிர்கொள்ள அறிவு மட்டும் போதாது” என்றார்.

FABC பேரவையை வெறும் நிர்வாகக் கூட்டமாகக் கருதாமல், தூய ஆவியின் குரலை ஒன்றிணைந்து கேட்டு, திருஅவையின் இறைவாக்குப் பணியை நிறைவேற்றும் வாய்ப்பாகக் காணுமாறு ஆயர்களை அவர் அழைத்தார்.

யோவான் நற்செய்தி 1:50-இல் இடம்பெறும்இவற்றைவிடப் பெரியவற்றைக் காண்பீர்” என்ற இறைவார்த்தையை மையமாகக் கொண்ட பேரவையின் கருப்பொருளைக் குறிப்பிட்ட அவர், இன்று திருஅவை உணர்ந்து கொள்ள வேண்டிய “பெரிய செயல்கள்” என்ன என்பதை சிந்திக்குமாறு பங்கேற்பாளர்களுக்கு சவால் விடுத்தார்.

மேலும், மக்கள்தொகை வளர்ச்சி, பண்பாட்டு பன்முகத்தன்மை மற்றும் சமயப் பன்மைத்துவம் ஆகிய காரணங்களால், உலகளாவிய திருஅவையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆசியா முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் அவர் கூறினார்.

உண்மையான ஒன்றிணைந்த மனமாற்றம் என்பது நிர்வாக அமைப்புகளில் மாற்றம் செய்வதிலிருந்து அல்ல; மாறாக, கடவுளின் குரலையும், பிறரின் குரலையும், உலகின் யதார்த்தங்களையும் புதிய மனதுடன் செவிமடுத்துக் கேட்பதிலிருந்தே தொடங்குகிறது என்று அவர் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு ஒன்றிணைந்த பயணமும் “பகுத்தறிதலின் பள்ளிக்கூடம்” எனக் குறிப்பிட்ட அவர், அன்றாட வாழ்வின் சாதாரண நிகழ்வுகளிலும் இறைவனின் செயல்பாட்டை உணர இறைமக்கள் கற்றுக்கொள்ளும் இடமாக அது அமைகிறது என்றார்.

இன்றைய உலகம் பெரும்பாலும் ஆரவாரமான, பரபரப்பான நிகழ்வுகளிலேயே கவனம் செலுத்துகிறது. ஆனால், இறைவன் அமைதியான, சாதாரண நிகழ்வுகளின் வழியாகவே செயல்படுகிறார். எனவே, ஒவ்வொரு சவாலுக்கும் வெறும் நடைமுறைத் தீர்வுகளை வழங்குவதற்குப் பதிலாக, திருஅவை தனது ஆன்மீகம், இறையியல் மற்றும் விசுவாச உணர்வை (sensus fidei) மேலும் ஆழப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஒன்றிணைந்த பயணம் என்பது ஒன்றாக நடப்பது மட்டுமல்ல; மாறாக, இறைவேண்டலுடனான பகுத்தறிதலின் வழியாக இறைவன் தொடர்ந்து வெளிப்படுத்தும் “பெரிய செயல்களை” ஆழமாகக் காணக் கற்றுக்கொள்வதும் ஆகும் என்பதை அவரது உரை மீண்டும் நினைவூட்டியது.

Tamil Survey Popup Image