தொழுநோயாளர்களின் அடைக்கலத் தாய் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
உறவுகளைப் பிரிந்தவர்களுக்கு உறவாக உறவாக இருப்பதில் இருப்பதில் ஆத்ம திருப்தி நிச்சயம் உண்டு.
தொழுநோயாளர்களைக் கண்டாலே கொஞ்சம் அருவருப்பாகத்தான் கருதுவோம். அவர்கள் வந்தாலே அருகில் செல்லத் தயங்குவோம். ஆனால், கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக அவர்களுக்காகவே வாழ்ந்து வரும் தாய் ஜெயின் மேரி. கேரள மாநிலம் புனலூர் அருகே முக்கூடு என்ற சிறிய மலைக்கிராமத்தில் பிறந்தவர்தான் இவர். இவரது குடும்பம் மிகப்பெரியது. இவரோடு பிறந்தவர்கள் ஏழு சகோதர்கள் மற்றும் ஆறு சகோதரிகள். இவ்வாறாக மொத்தம் பதினான்கு பிள்ளைகள் இவருடைய பெற்றோருக்கு. பாசத்துக்கு இவர்கள் குடும்பத்தில் பஞ்சமே இல்லை. அருள்சகோதரியாக மாற விரும்பிய இவர் தம் 19வது வயதில் கும்பகோணத்துக்கு வந்தார். அருள்சகோதரிகளுக்கான பயிற்சியை முடித்தபிறகு, செவிலியருக்கான படிப்பைப் படிக்க விரும்பினார். தொடர்ந்து மருத்துவச் சேவை புரிந்துவந்தார்.
இவர் அருள்சகோதரியாக படிக்க கும்பகோணம் வந்தபோது, தொழுநோயாளிகள் மறுவாழ்வு மையத்துக்குச் சென்றிருந்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழுநோயாளர்களைப் பார்த்தபோது, அவர்களுக்காகப் பணிவிடை செய்யவேண்டும், அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் இவருக்கு வந்தது. "தொழுநோயாளிகளுக்குக் காலை முதல் இரவு வரை பணிவிடை செய்து, அவர்களுடனே அமர்ந்து, அவர்களின் குடும்ப விவரங்களைக் கேட்டா கேட்டறிவதிலும், அவர்களுக்கு ஆறுதல் கூறுவதிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். யாராவது இறந்து விட்டால் அது எனக்குப் பெரிய இழப்பாக இருக்கிறது” என்கிறார் அருள்சகோதரி ஜெயின் மேரி. தற்போது அறுபது தொழுநோயாளர்களைக் கொண்டுள்ள "தொழுநோயாளர்கள் மறு வாழ்வு மையமே” தமது உலகம் என்று எண்ணி, அவர்களுக்காகவே தமது வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார். மிகுந்த பொறுமையோடும், சகிப்புத் தன்மையோடும் பணி செய்கிறார் ஜெயின் மேரி.
அவர்களில் ஒருவராகவே தன்னையும் பாவித்து, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்து கொடுத்தும் பராமரித்தும் வரும் ஜெயின் மேரி, ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகின்ற பணிமாறுதலைக்கூடத் தவிர்த்து விடுகிறார்.
வாழ்க்கை என்பது சாகும்வரை அல்ல; மற்றவர்கள் மனதில் வாழும்வரை.
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.
