இறைவன் இயற்கை மனிதன் இணைக்கும் நதிகள்

கடவுள் உலகத்தைப் படைத்து ஒவ்வொரு நாளையும் படைத்து அதில் மரம், செடி, கொடி, சூரியன், சந்திரன், பறவைகள், விலங்குகள், மலைகள், குன்றுகள், நதிகள், கடல்கள் எல்லாவற்றையும் படைத்து இறுதியாக மனிதனை படைத்து எல்லாவற்றையும் மனிதன் ஆளும்படி உலகத்தை கொடுத்தார்.கடவுள் படைப்பில்  நதிகளும் அடங்கும். அதில் இந்தியாவில் மட்டும் ஏராளமான நதிகள் உள்ளன. முக்கியமாக கங்கை, யமுனை, நர்மதா, பிரம்மபுத்திரா, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி போன்ற நதிகள் நம்மைச் சுற்றிலும் ஓடுகின்றது. இந்தியாவில் பெரிய நதி கங்கை. நம் தமிழ்நாட்டில் முக்கியமான நதிகள் காவேரி,வைகை,தென்பெண்ணை,தாமிரபரணி, பாலாறு ஆகியனவாகும்.

ஒரு மனிதனுக்கு உடலில் நரம்பு மண்டலம் எவ்வளவு  முக்கியமானதோ. அதேபோல ஒரு நாட்டிற்கு நதிகள் நரம்பு மண்டலமாக செயல்படுகிறன. நதிகள் ஒரு நாட்டையும் மற்றொரு நாட்டையும் இணைக்கும் பாலமாக உள்ளன. நதிகள் பொருளாதார வளர்ச்சிக்கும்,வியாபார வளர்ச்சிக்கும் தொடர்புடையன. பன்முகப்பட்ட மக்களை  இணைக்கும் பாலமாகவும், விவசாயத்திற்கு முதுகெலும்பாக உள்ளன. நதிநீர் மனிதகுலத்திற்கு இன்றியமையாதது  நிலத்தடி நீருக்கும் நதி முக்கியமாக திகழ்கிறது. மனிதனை தூய்மையாக்கவும் பயன்படுகிறது. இறைவன் யோர்தான் நதிக்கரையில் திருமுழுக்குப் பெற்றார். இன்றும்  அந்த யோர்தான் நதி புனித நதியாகக் கருதப்படுகிறது.

அப்பேற்பட்ட நதிகளை நாம் காத்து  வருகிறோமா? சுத்தமாக வைத்துளோமா? நம்முடைய ஒவ்வொருவரின் கடமைதான் என்ன? நாட்டின் நரம்பு மண்டலமாக இருக்கும் நதிகளை மனிதகுலம் காணாமல் போகச் செய்து விட்டது.கடவுள் படைப்புகளில் மனிதனின் பேராசையால் பாதி அசுத்தமாகவும் மீதியை காணாமல் போகவும் செய்து விட்டோம்.நதியில் உள்ள மணலை தோண்டி எடுப்பதில் மனிதனின் சுயநலம் வெளிப்படுகிறது.  ஆதலால் விவசாயம், ஆற்றுப்படுகை எல்லாமே வீணாகிறது. கங்கையில்,  இறந்தவரின் உடலையும்,தொழிற்சாலைகளின் கழிவுகளையும் கலந்து அதை அசுத்தமாக்கிவிட்டோம். 

காவிரி!  ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு தண்ணீர் தருவதற்கு மறுப்பு கூறுகிறோம். தொழிற்சாலையின் கழிவுகள் கலப்பதால்  நதியில் தாவரங்கள், விலங்குகள், நீர்வாழ் உயிரினங்கள் முதலியன அழிந்து வருகின்றன. நதிகளில் நீர் இல்லாமல் காட்டில் வாழும் வனவிலங்குகள் நாட்டிற்குள் வர ஆரம்பித்துவிட்டன. அகன்று விரிந்து பாய்ந்து வந்த நதி, இப்போது கூனிக்குறுகி ஒத்தையடி பாதையாக மாறியுள்ளது. இதை யார் காப்பது?  இப்படி கடவுள் மனிதனுக்காக படைத்த படைப்பை மனிதன்  பாழ்படுத்தி வந்து கொண்டிருக்கின்றான். இப்படி மனிதனின் சுய நலத்திற்கும், பேராசையாலும் கடவுளின் படைப்பை அழித்து, விலங்குகளும் தாவரங்களும் மனிதனுக்கும் நீர்வாழ் உயிரினங்களுக்கும் யாருக்குமே பயன்படாத வகையில் அழித்து வைத்துள்ளான்.

இந்த சமயத்தில் கடவுள் மனிதனுக்குக் கொடுத்த தண்டனையாக  கொரோனா என்ற பெரிய தொற்றுநோயை இந்த மனித குலம் சந்தித்துள்ளது. அந்த தொற்றுநோய் காரணமாக உயிர்பலி, பசிக்கொடுமை, பொருளாதார இழப்பு, முகம் பார்த்து பேச முடியாத நிலைமை, மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைமை போன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன . நாட்டில் 75 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உள்ளதால், கடவுள் படைப்புகளுள் ஒன்றான இயற்கை, இப்போது புத்துயிர் பெற்று வருகிறது. சாலையில் வாகன போக்குவரத்து இல்லாததால் காற்று, மாசு இல்லாத சுத்தமான காற்றாக மாறியுள்ளது. தொழிற்சாலை  இயங்காததாலும், கங்கையில் எந்த ஒரு கழிவுநீரும் கலக்காமல் சுத்தமான குடிநீராக கங்கை நதி மாறியுள்ளது.

காடுகளிலுள்ள நதிகள் புத்துயிர் பெற்று சுத்தமான  நீராக மாறியுள்ளது. இந்த நீர் விவசாயத்திற்கு முக்கியமாக பயன்படும். காற்று மாசு குறைந்ததால் கோடை காலத்தில் மழை பெய்து பூமி குளிர்ச்சியாக மாறி உள்ளது.  நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?  கங்கை நதி  சுத்தமாக மாறியுள்ளதால் நம் தேசிய  நீர் வாழ் உயிரினமான கங்கை நதி டால்பின் 30 வருடங்களுக்குப் பிறகு தென்பட்டுள்ளது. இப்போது காற்று மாசு குறைந்துள்ளதால் உயர்ந்த சிகரமான இமயமலையின் சிகரம் தெளிவாக தெரிகிறது. பறவைகள், நதிகளுக்கு  தண்ணீர் தேடி வருகிறது. அனைத்து ஜீவராசிகளும் இப்போது தென்படுகிறது. ஆகவே கடவுள் மனிதன்  கையில் கொடுத்த இயற்கையை   இனிமேலாவது சுயநலமின்றி மாசுபடாமல் காப்போம். கடவுள் படைப்பை  போற்றி பாதுகாப்போம்.