நான் உன்னை அன்பு செய்கிறேன் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

ஆயுளின் பெருமை ஆண்டுகளில் அல்ல; அன்பு செய்யும் முறையில்தான் இருக்கிறது.

புருக்லின் நகரில் எமிலி என்ற 21 வயது கல்லூரி மாணவி இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, பதினெட்டுச் சக்கரங்கள் கொண்ட பெரிய வாகனத்தால் இடிக்கப்பட்டு Bellevue மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலை, இடது கால், இடுப்பெலும்பு ஆகியவை பலமாகப் பாதிக்கப்பட்டுச் செயலிழந்தன. படுத்த படுக்கையாக இருந்த எமிலியால் பேச முடியவில்லை; பார்க்க முடியவில்லை; எதையும் கேட்க முடியவில்லை.

அறுவைச் சிகிச்சையின்போது அவரது இதயம் ஒரு நிமிடம் நின்று விட்டது. உறுப்புகளைத் தானம் செய்யச் சொல்லி தாதியர் அம்மாணவியின் பெற்றோரிடம் கூறிவிட்டனர். பெற்றோரும் அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். இந்த ஒரு சூழ்நிலையில்தான் எமிலியின் வாழ்வில் ஓர் அதிசயம் நடந்தது.

“பாய் ஃபிரண்ட்” என்று சொன்னாலே பெண்களோடு ஊர் சுற்றுவதும் உல்லாசமாக வாழ்வதும்தான் என்ற புரிந்துணர்வு பலருக்கு உண்டு. ஆனால், எமிலியின் நண்பர் ஆலன் லூங்கார்டு என்பவர் இரவும் பகலும் எமிலியின் அருகில் அமர்ந்து, தான் அவர்மீது வைத்திருக்கும் அன்பைச் சொல்லிக்கொண்டே இருந்தார். “நான் உன்னை அன்பு செய்கிறேன்” என எமிலியின் கையில் எழுதி வைத்தார். எமிலியின் கை, கண், உடல் பாகம் லேசாக அசையத் தொடங்கியது. ஆலனின் பேச்சுக்குப் பதில் கொடுக்க ஆரம்பித்தாள் எமிலி. 

மருத்துவர்கள் கைவிட்ட சூழலில் எமிலியின் நண்பரின் இந்தச் செயல்பாடு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இறந்துவிடுவார் எனக் கூறப்பட்ட அவர் இன்றும் உயிரோடிருக்கிறார்.

எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.