இப்படியும் ஒரு மனிதர் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
எளிய மனிதர்கள் பலர் ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருப்பார்கள்.
எளிய மனிதர்கள் பலருக்கு வீடு வாசல்கூட இருக்காது. சொல்லிக்கொள்ள உறவுகளும் இருக்காது. இவர்களது முகவரியெல்லாம் கோயில்களும், பேருந்து நிழற்கூடங்களும், நடைபாதைகளும்தாம். இப்படிப்பட்டவர்களால் சமூகத்திற்கு எந்தப் பலனும் இல்லை என்று ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால், ஏதாவது ஒரு வகையில் சமூகத்திற்கு உதவியாக இருப்பவர்கள் இவர்கள்தான்.
"மதுரை டவுன்ஹால் ரோடு காளி” என்று பலராலும் அறியப்படும் ஐம்பத்து ஐந்து வயதைக் கடந்த முதியவர், பிறர் முகம் சுளிக்கக்கூடிய ஒரு பணியைச் செய்து வருகிறார். விபத்து மற்றும் தற்கொலைச் சம்பவங்களில் ரயில் மோதி சிதறி இறப்பது துயரத்திலும் பெரும் துயரம். இப்படிச் சிதைந்துக் கிடக்கும் உடல்களைப் பார்த்து “ஐயோ” என்று பரிதவித்துவிட்டு, அடுத்த சில நிமிடங்களில் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றிடுவோம். சிதறிக்கிடக்கும் உடல்களைத் தேடிப்பிடித்து அள்ளுபவர்களின் துயரமும் சோகமானதுதான். ஒரு நேர வயிற்றுப்பசியைப் போக்கவே இவ்வளவு கடினப்பட வேண்டியதாயிற்று.
விருதுநகர், மதுரை, திண்டுக்கல் பகுதியில் யார் ரயிலில் அடிப்பட்டுக் கிடந்தாலும் காவல்துறையினர் காளியைத்தான் தேடி வருவார்கள். ரயில் தண்டவாளங்களில் ரயிலில் விழுந்தும், விபத்தில் அடிபட்டும் சிதறும் மனித உடல்களை அள்ளிக் கட்டிக் காவல்துறையினருக்கு உதவி செய்வார் காளி. இதில் கிடைக்கும் கொஞ்ச பணம்தான் இவரின் அன்றாடத் தேவையாகிறது. சொந்த வீடு இல்லாத இவருக்கு மதுரை டவுன்ஹால் ரோடு நடைபாதைதான் வீடு, வாசல், முகவரி எல்லாம்.
கடந்த எட்டு ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்களை அள்ளி, காவல்துறையினரிடம் ஒப்படைத்திருக்கிறார். உடற்கூறுப் பரிசோதனை முடிந்தபிறகு உறவினர்கள் யாரும் வரவில்லை என்றால், காவல்துறையினர் தங்கள் ஆய்வுகளை முடித்துக்கொண்டு, காளியை அழைத்து அவரிடமே உடலை ஒப்படைத்து விடுகிறார்கள். இவரும் அந்த உடல்களை மயானத்துக்கு எடுத்துச்சென்று அடக்கம் செய்து விடுகிறார். இவ்வாறு சுமார் 300க்கும் அதிகமான அடையாளம் தெரியாத உடல்களைத் தானே மயானத்துக்குக் கொண்டுபோய் புதைத்திருக்கிறார்.
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.