ஊர் மெச்ச அல்ல, கடவுள் மெச்ச வாழ்வது சீடத்துவம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 11 ஆம் வாரம் –  புதன்

2 அரசர்  2: 1, 6-14
மத்தேயு 6: 1-6, 16-18

 

 ஊர் மெச்ச அல்ல, கடவுள் மெச்ச வாழ்வது சீடத்துவம்!

 
முதல் வாசகம்.


இனைறய முதல் வாசகத்தில் கடவுளின் மற்றொரு வல்ல செயலை வாசிக்கிறோம்.  இறைவாக்கினர் எலியா தமது மண்ணகப் பணியை முடித்துவிட்டு இறைவனால் விண்ணுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார். எலியா தம் சீடரான எலிசாவிடம் தம்மைவிட்டு பிரிந்து செல்லுமாறு கூறினாலும், எலிசா அவரை விட்டு பிரிய மறுக்கிறார்.
இருவரும் யோர்தான் ஆற்றை அடைந்தபோது, எலியா தமது மேலங்கியால் நீரை அடிக்க, ஆறு இரண்டாகப் பிரிந்து அவர்கள் உலர்ந்த தரையில் கடந்து செல்கின்றனர். பின்னர் நெருப்புத் தேரும் நெருப்புக் குதிரைகளும் தோன்றி, எலியா  சுழற்காற்றில் விண்ணுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்.
எலிசா இதைக் கண்டு துயரப்படும் வேளை,  எலியாவின் மேலங்கி கீழே விழுகிறது. அதை எடுத்து, எலிசா யோர்தான் ஆற்றை அடித்து, “எலியாவின் கடவுளாகிய ஆண்டவர் எங்கே?” என்று கேட்கிறார். உடனே நீர் மீண்டும் பிரிகிறது. இதன் மூலம் எலியாவிடம் இருந்த இறைவனின் ஆவியும் அதிகாரமும் எலிசாவுக்குக் கிடைத்தது என்பது வெளிப்பட்டதை ஆசிரியர் விவரிக்கிறார்.

நற்செய்தி. 


இப்பகுதியில் இயேசு, மக்ளுக்கான நற்பணிகளை பிறர்  பாராட்டைப் பெறுவதற்காக அல்ல, கடவுளுக்காகச் செய்ய வேண்டும் என்று போதிக்கிறார்.
தர்மம் செய்வது, இறைவேண்டல் செய்வது, நோன்பு இருப்பது ஆகியவற்றில் வெளிப்படையான புகழை நாடாமல், மறைவாகச் செய்யும்படி அவர் அறிவுறுத்துகிறார்.   இறைவனை மகிழ்விக்க வேண்டும் என்ற மனநிலையுடன் மறைவாகச் செய்பவர்களுக்கு, அனைத்தையும் காணும் விண்ணகத் தந்தை தக்க பலனை அளிப்பார் என்பதை இயேசு இங்கே வலியுறுத்துகிறார். 
இதன் மூலம், உண்மையான இறைப்பற்று வெளிப்புறக் காட்சியில் அல்ல, நேர்மையான இதயத்திலும் கடவுளோடு கொண்டுள்ள ஆழ்ந்த உறவிலும் இருக்கிறது என்பதை இயேசு எடுத்துரைக்கிறார்.

சிந்தனைக்கு.

இன்றைய முதல் வாசகத்தில் முற்காலத்தில் செங்கடலில் நிகழ்ந்தொரு கடவுளின் வல்ல செயலையும், பின்பு  யோர்தான் நதி அற்புதமாகப் பிரிந்து யோசுவாவையும் இஸ்ரயேலர்களையும் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள்  கடக்க அனுமதித்ததைப் போன்ற கடவுளின் மற்றொரு  வல்ல செயலையும் போன்று இன்றும் ஒரு வல்ல செயலை நாம் கண்டோம். எலியா இறைவனால் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார். ஆனால் அவர் புறப்படுவதற்கு முன், எலிசாவுக்கு தனது ஆவியின் இரட்டிப்பு பங்கை வழங்குகிறார்.  
நற்செய்தியில் இயேசு ஆண்டவர், தர்மம் செய்வதிலும், இறைவேண்டலிலும், நோன்பிருப்பதிலும் மனிதர்களின் பாராட்டைப் பெறுவதற்காக அல்ல, இறைவனை மகிழ்விப்பதற்காக செயல்பட வேண்டும் என்று போதிக்கிறார். வெளிப்படையான பக்தியை விட, உள்ளத்தின் தூய்மையும் நேர்மையும் இறைவனுக்கு முக்கியம் என்று இயேசு இன்று நமக்கு விவரிக்கிறார்.

எலிசா எலியாவின் ஆவியைப் பெற விரும்பியது புகழுக்காக அல்ல; இறைவனின் பணியைத் தொடர்வதற்காக. அதுபோல நாமும் இறைவேண்டல், தர்மம், நோன்பு போன்றவற்றை மனிதர்களின் பாராட்டுக்காக அல்ல, இறைவனோடு ஆழ்ந்த உறவை வளர்ப்பதற்காக மேற்கொள்ள வேண்டும் என்பதை ஆழ உணர வேண்டும். 

இன்றைய இறைவார்த்தை நமக்கு ஒரு அழைப்பை விடுக்கிறது: வெளிப்புற காட்சியை விட உள்ளார்ந்த நம்பிக்கையையும், மனிதரின் பாராட்டை விட இறைவனின் அங்கீகாரத்தை நாம் நமது நற்பணிகளில் கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர வேண்டும். 

விளம்பரத்தால் உயர்ந்தவர் வாழ்வு நிரந்தரமாகாது என்பது நமது சீடத்துவ வாழ்வுக்கான அடிப்படை படிப்பினையாகும். யோவான் 5:41-ல், ‘மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை’ என்கிறார் ஆண்டவர். உண்மையான பணிவு மற்றும் நல்லொழுக்கத்துடன் வாழ்வோர் இயல்பாகவே ஆண்டவரின் சீடர் ஆகிறார்.   இதற்கு நேர்மாறாக, பாசாங்குத்தனம்—உள்ளார்ந்த நற்பண்பு இல்லாத நீதியின் வெளிப்புறக் காட்சி, கடவுளுக்காக அல்லாமல் மனித அங்கீகாரத்திற்காக செய்யப்படுவோர்  நாளடைவில் மறைந்துபோவர்.  ஆகவே, மனிதர்களின் பாராட்டை விட, இறைவனின் பாராட்டைப் பெறும் வாழ்க்கையை நாளும் பொழுதும் வாழ்வோம். 

 இறைவேண்டல்.

ஆண்டவராகிய இயேசுவே, உண்மையான இறைபக்தி வெளிக்காட்சியில் அல்ல; தூய்மையான இதயத்திலும் கடவுளோடான   நேர்மையான உறவிலும் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் வாழ்வாக என் வாழ்வு அமைவதாக. ஆமென்

 


ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452