வெளிப்புறத் தூய்மையை அல்ல உள்ளத்தின் தூய்மைக்கே முன்னுரிமை! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 18 ஆம் வாரம் – செவ்வாய்
எரேமியா 30: 1-2, 12-15, 18-22
மத்தேயு 15: 1-2, 10-14
வெளிப்புறத் தூய்மையை அல்ல உள்ளத்தின் தூய்மைக்கே முன்னுரிமை!
முதல் வாசகம்.
இவ்வாசகத்தில், ஆண்டவர் எரேமியாவிடம் தாம் கூறும் வார்த்தைகளை
ஒரு நூலில் எழுதும்படி கட்டளையிடுவதோடு, இஸ்ரயேல் மக்களின்
துன்பமும் சிறையிருப்பும் அவர்கள் செய்த பாவங்களின் விளைவு
என்பதை ஆண்டவர் எடுத்துரைக்கிறார். ஆனாலும், அவர்களுடைய
துனபமும் துயரமும், சிறைபிடிப்பும் நிலையானதல்ல என்றும் அவர்களை
ஆண்டவர் விடுவிப்பார் என்ற செய்தியை எரேமிய பகிர்கிறார்.
நிறைவாக, யாக்கோபின் கூடாரங்களை மீண்டும் எழுப்பி, நகரங்களைப்
புதுப்பித்து, மக்களைத் தங்கள் நாட்டிற்குத் திரும்பச் செய்வார் என்றும்,
அவர்களிடையே நன்றியுணர்வும் மகிழ்ச்சியும் பெருகும் என்றும்,
அவர்கள் மீண்டும் ஆண்டவரின் மக்களாக இருப்பார்கள்; ஆண்டவரும்
அவர்களுடைய இறைவனாக இருப்பார் என்ற வாக்குறுதியையும்
எரேமிய இங்கு முன்வைக்கிறார்.
நற்செய்தி.
இந்த நற்செய்தியில், எருசலேமிலிருந்து வந்த பரிசேயர்களும் மறைநூல்
அறிஞர்களும், இயேசுவின் சீடர்கள் மூப்பர்களின் மரபுப்படி கைகளைக்
கழுவாமல் உணவு உண்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர். அதற்கு
இயேசு, வெளிப்புறச் சடங்குகளைக் காட்டிலும் மனிதனின் உள்ளத்தின்
தூய்மையே முக்கியம் என்பதை வலியுறுத்தயதை மத்தேயு குறிப்பிட்டு
எழுதுகிறார்.
பின்னர் மக்களை நோக்கி, "கேட்டு புரிந்துகொள்ளுங்கள்" என்று கூறி,
வெளியில் இருந்து மனிதனுக்குள் செல்லும் பொருட்கள் அவனைத்
தீட்டுப்படுத்துவதில்லை; மாறாக, உள்ளத்திலிருந்து எழும் தீய
எண்ணங்களும் செயல்களுமே மனிதனைத் தீட்டுப்படுத்துகின்றன என்ற
உண்மையை விவரிக்கிறார்..
சீடர்கள், இந்தப் போதனை பரிசேயர்களுக்கு மனவருத்தத்தை
ஏற்படுத்தியதாகச் சொன்னபோது, இயேசு, விண்ணகத் தந்தை நடாத
செடிகள் வேரோடு பிடுங்கப்படும் என்றும், குருடர்கள் குருடர்களுக்கு
வழிகாட்டினால் இருவரும் குழியில் விழுவார்கள் என்றும் கூறி,
உண்மையான ஆன்மீக வழிகாட்டுதல் இறைவனிடமிருந்து வர வேண்டும்
என்பதை உணர்த்துகிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய முதல் வாசகமும் நற்செய்தியும் நாம் ஆழந்து வாசிக்கும்
வேளை, கடவுள் ஒரு முக்கியமான உண்மையை நினைவூட்டுவதை
அறியலாம். ஆம், இறைவன் நமது வெளிப்புற தோற்றத்தை அல்ல, நமது
இதயத்தைப் பார்க்கிறார்.
எரேமியா நூலில், இஸ்ரயேல் மக்கள் தங்கள் பாவங்களினால் துன்பத்தை
அனுபவிக்கிறார்கள். ஆனால் இறைவன் அவர்களை நிரந்தரமாகக்
கைவிடவில்லை. "நான் உன் கூடாரங்களை மீண்டும் எழுப்புவேன்;
உன்னை மீட்டெடுப்பேன்" என்று ஆறுதல் அளிக்கிறார். தண்டனையின்
நோக்கம் அழிப்பது அல்ல; மனமாற்றத்திற்குக் கொண்டு வந்து புதிய
வாழ்வை அளிப்பதே என்பது புலனாகிறது.
நற்செய்தியில், பரிசேயர்கள் வெளிப்புற சடங்குகளிலும் மரபுகளிலும்
அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் இயேசு, மனிதனைத்
தீட்டுப்படுத்துவது கைகளில் இருக்கும் அழுக்கு அல்ல; இதயத்தில்
இருக்கும் அகந்தை, பொறாமை, வெறுப்பு, போலித்தனம் ஆகியவையே
என்று உணர்த்துகிறார். தூய்மையான இதயம்தான் இறைவனுக்கு
விருப்பமான பலி என்பதுத் தெளிவாகிறது.
நமது கிறிஸ்தவ அன்றாட வாழ்வில், சில நேரங்களில் நாம் வெளிப்புற
பக்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, உள்ளத்தின் மாற்றத்தை
மறந்துவிடுகிறோம். திருப்பலியில் பங்கேற்பதும், இறைவேண்டலில்
செய்வதும், நோன்பு இருப்பதும் அவசியம். ஆனால் அவை நம்மை அதிக
அன்பும், இரக்கமும், மன்னிப்பும் கொண்டவர்களாக மாற்றவில்லை
என்றால், அவற்றின் உண்மையான பயனை நாம் இழந்துவிடுகிறோம்.
பக்கத்தில் இருக்கும் ஆலயத்திற்கு வாரந்தோறும் திருப்பலிக்குச் செல்ல
தவறும் பலர் நூறு, இருநூறு, முந்நூறு கி. மீட்டருக்கு அப்பால் இருக்கும்
ஆலயத்திற்கு திருவிழா திருப்பலிக்கு போவதுண்டு. அங்கு சென்று
கணிசமான தொகையை ஆலய உண்டியில் போடுவதில் திருப்தி
கொள்ளும் நாம் வசிக்கும் இடத்தில் அக்கம் பக்கம் வறுமையில்
துன்புறுவோரைக் கண்டுகொள்ள மாட்டோம். இந்நிலையில், இன்றைய
இறைவார்த்தை நம்மை இரண்டு கேள்விகள் கேட்க அழைக்கிறது:
என் இதயம் இறைவனுக்கு உகந்ததாக இருக்கிறதா?
என் பக்தி வெறும் வெளிப்புற சடங்கா, அல்லது என் வாழ்க்கையை
மாற்றும் உண்மையான நம்பிக்கையா?
இறைவன் நமது காயங்களை ஆற்ற விரும்புகிறார்; அவரல் உள்ளத்தில்
நடப்பாடத களைகளை அற்ற அழைக்கிறார். அதற்கு, முதலில் நமது
இதயத்தின் கதவைத் திறக்க வேண்டும். முயற்சித்து, தூய்மையான
இதயத்தோடும் உண்மையான மனமாற்றத்தோடும் அவரை அணுகில்
மட்டுமே, அவர் நம்மை புதுப்பித்து, நமக்கான ஆசீரை பொழிய கூடும்.
பக்தி கண்களை மூடுவதற்கல்ல; உண்மைக்குத் திறந்து உண்மையை
காணச் செய்வதற்கே என்பதை நாம் நினைவில் கொள்வது சிறப்பு.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, உம்மை உண்மையிலும் ஆவியிலும்
வழிபடுகின்ற மனதை எனக்குத் தாரும். வெளிப்புறச் சடங்குகளையும்
பழைய மனித மரபுகளையும் மட்டும் பற்றிக்கொண்டு, உமது
வார்த்தையை மறந்துவிடாதபடி என்னை காத்தருள்வீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா). ஜெனிசிஸ்
விவிலியக் கல்வி மையம் +6
0122285452
