பிலிப்பைன்ஸ் மக்களுக்காக இறைவேண்டல் செய்ய திருத்தந்தை அழைப்பு! | Veritas Tamil
பிலிப்பைன்ஸ் நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரழிவான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அழைப்பு விடுத்தார்.
ஜூன் 14, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையின் இறுதியில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, "சில நாட்களுக்கு முன்பு கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தோர் மற்றும் இத்துயரத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் தான் இறைவேண்டல் செய்வதாக உறுதியளித்தார்.
அண்மையில் திருஅவையால் அருளாளர்களாக அறிவிக்கப்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மறைசாட்சிகளையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, மொரேவியாவைச் சேர்ந்த அருள்பணி வென்செஸ்லோ டர்போலா, அருள்பணி ஜியோவானி புலா, அருள்பணி ஜியோவானி ஸ்வியர்க் மற்றும் அவரது தோழர்கள், போலந்து சலேசிய அருள்பணியாளர்கள் ஆகியோர் கிறிஸ்துவின் மீதான நம்பிக்கைக்காக சர்வாதிகார ஆட்சிகளின் துன்புறுத்தலுக்கு உள்ளாகி மறைசாட்சிகளாக உயிர்நீத்தவர்கள் என்று குறிப்பிட்டார்.
மேலும், பிரேசிலின் மாட்டோ குரோசோ மாநிலத்தில் அண்மையில் அருளாளராக அறிவிக்கப்பட்ட இத்தாலிய மறைப்பணியாளர் அருள்பணி நசரேனோ லான்சியோட்டியையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, ஏழைகள் மற்றும் வலுக்குறைந்த மக்களைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவரது சாட்சிய வாழ்வு, அருள்பணியாளர்கள் மற்றும் முழு திருஅவைக்கும் ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக விளங்குகிறது என்று திருத்தந்தை கூறினார்.
இறுதியாக, இந்த புதிய அருளாளர்களின் சாட்சியமும் பரிந்துரையும் திருஅவையின் மறைப்பணியை மேலும் வலுப்படுத்தட்டும் என்று இறைவேண்டல் செய்து தனது உரையை திருத்தந்தை நிறைவு செய்தார்.