நம்பிக்கையோடு மக்கள் இணைந்து பயணிக்கும் இடத்தில்தான் ஒன்றிணைந்த பயணம் ஆரம்பமாகிறது.– கர்தினால் கிக்குச்சி | FABC | Veritas tamil

"ஒன்றிணைந்த பயணம் (Synodality) என்பது ஒரு கோட்பாடோ அல்லது திருஅவையின் திட்டமோ அல்ல; மாறாக, ஒருவர் மற்றொருவரை அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் சமூகங்களின் வாழ்வியல் முறையாகும்" என்று ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) பொதுச் செயலாளரும் டோக்கியோ பேராயருமான கர்தினால் தார்சிசியோ இசாவோ கிக்குச்சி ஜூலை 20 அன்று நடைபெற்ற FABC-யின் 12வது நிறைவிறுதிப் பேரவையில் தெரிவித்தார்.

ஜூலை 20 முதல் 26 வரை இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில்"ஒன்றிணைந்த மாற்றத்திற்கான அழைப்பும், ஆசியாவில் பாலங்களாகவும் பாலம் கட்டுவோராகவும் செயல்படும் திருப்பணியும்"என்ற கருப்பொருளில் நடைபெறும் FABC 12வது நிறைவிறுதிப் பேரவை முதல் நாள் நிறைவையொட்டி நடைபெற்ற திருப்பலிக்கு கர்தினால் கிக்குச்சி தலைமை தாங்கினார்.

தனது மறையுரையில், இந்தோனேசியாவின் புளோரஸ் தீவிலுள்ள எண்டே என்ற சிறிய கிராமத்திற்கு அண்மையில் மேற்கொண்ட பயணத்தை கர்தினால் நினைவுகூர்ந்தார். அங்கு திருஅவையின் ஒற்றுமைப் பயணம் எவ்வாறு வாழ்வில் வெளிப்பட வேண்டும் என்பதற்கான உயிரோட்டமான எடுத்துக்காட்டைக் கண்டதாக அவர் கூறினார்.

"நம்பிக்கை என்பது வாங்கவோ, பிறருக்கு வழங்கவோ கூடிய ஒன்று அல்ல. ஒருவர் மற்றொருவர்மீது உண்மையான அக்கறை காட்டும் இடத்தில்தான் நம்பிக்கை பிறக்கிறது,"என்று கர்தினால் கிக்குச்சி கூறினார்.

அவர் பார்வையிட்ட இயற்கை வேளாண்மைத் திட்டத்தில், குறைந்த வளங்களுடனும் மகிழ்ச்சியுடனும், கண்ணியத்துடனும், பரஸ்பர ஒத்துழைப்புடனும் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை அவரை ஆழமாகத் தொட்டதாகக் குறிப்பிட்டார்.

காரித்தாஸ் அனைத்துலகத்தின் (Caritas Internationalis) தலைவராக உலகின் பல்வேறு மனிதாபிமான மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களைப் பார்வையிட்டிருந்தாலும், எண்டே கிராமத்தின் எளிமையான சமூக வாழ்வு தன்னுள் அழியாத தாக்கத்தை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

"எனக்குப் பொருத்தவரை இதுவே ஒற்றுமைப் பயணத்தின் உண்மையான வடிவம். இது ஒரு கருத்து மட்டுமல்ல; ஒன்றாக நடந்து, ஒருவருக்கொருவர் துணைநின்று, நம்பிக்கையை வளர்க்கும் சமூகத்தின் வாழ்வாகும்,"என்றார்.

திருஅவையின் பணி பெரிய நிறுவனங்களிலோ அல்லது ஏராளமான வளங்களிலோ தொடங்குவதில்லை என்றும், மாறாக, ஒருவர் மற்றொருவருடன் இணைந்து பயணிக்கவும், தேவைப்படுவோருக்குப் பணியாற்றவும் தயாராக இருக்கும் சமூகங்களிலிருந்தே தொடங்குகிறது என்றும் கர்தினால் வலியுறுத்தினார்.

அன்று மாலை 6.00 மணிக்கு நடைபெற்ற திருப்பலியில் கர்தினால் கிக்குச்சி முதன்மை திருப்பலித் தலைவராக இருந்தார். தாய்லாந்தின் பாங்காக் பேராயர் பேராயர் பிரான்சிஸ் சேவியர் வீரா மற்றும் திமோர்-லெஸ்தே நாட்டின் பௌகாவு மறைமாவட்ட ஆயர் ஆயர் லியாண்ட்ரோ மரியா ஆல்வ்ஸ் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர்.

திருப்பலியில் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். இதில் கர்தினால்கள், ஆயர்கள், அருட்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர், பேரவைப் பிரதிநிதிகள் மற்றும் ஆசியாவின் பல நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்கள் பங்கேற்றனர்.

மேலும், ஜகார்த்தா பேராயர் கர்தினால் இக்னாசியுஸ் சுஹார்யோ மற்றும் இந்தோனேசிய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் ஆயர் அந்தோனியுஸ் சுபியான்டோ புஞ்ஜாமின்,OSC ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பொதுப்பேரவையின் கருப்பொருளை எடுத்துரைத்த கர்தினால் கிக்குச்சி, ஜெபம், ஆன்மிகப் பகுத்தறிதல் மற்றும் உரையாடலுக்காக ஒதுக்கப்பட்ட இந்த நாட்கள், ஆசியா முழுவதும் உள்ள உள்ளூர் திருஅவைகளில் நிலையான புதுப்பிப்பை உருவாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

"நாம் ஒரே நேரத்தில் உலகம் முழுவதையும் மாற்ற முடியாது. ஆனால் அடிமட்ட சமூகங்களிலிருந்து, ஒருவர் மற்றொருவருக்கு உதவும் மனப்பான்மையிலிருந்து தொடங்கலாம். அங்குதான் நம்பிக்கை வளர்கிறது; அங்குதான் திருச்சபை ஒற்றுமைப் பயணத்திற்கு உண்மையான சாட்சியாக விளங்குகிறது,"என்று அவர் கூறினார்.

கர்தினால் கிக்குச்சியின் இந்தச் செய்தி, ஒன்றிப்பு, பங்கேற்பு மற்றும் திருப்பணியை மேலும் வலுப்படுத்தி, கலாச்சார,சமய மற்றும் சமூகப் பன்மைத்துவம் நிறைந்த ஆசியாவில் பாலம் கட்டும் திருச்சபையாக மாற வேண்டும் என்ற FABC பொதுப்பேரவையின் அழைப்பை வலியுறுத்துவதாக அமைந்தது.

Tamil Survey Popup Image