“வெறுங்கால் மருத்துவர்கள்” | அருட்சகோதரி ஈவா ஃபிடேலா மாமோ | Veritas Tamil
“வெறுங்கால் மருத்துவர்கள்”: அருட்சகோதரி ஈவா ஃபிடேலா மாமோவின் பாரம்பரியம்
2022 ஆம் ஆண்டில் பரான்யாகுவேயிலுள்ள தனது அலுவலகத்தில் அருட்சகோதரி ஈவா ஃபிடேலா மாமோ. அவர் வழிநடத்திய பணி ஒரு மருத்துவமனையின் சுவர்களைத் தாண்டி எண்ணற்ற மக்களின் வாழ்வைத் தொட்டது.
பிலிப்பைன்ஸைச் சேர்ந்த அருட்சகோதரி ஈவா ஃபிடேலா மாமோ, புனித பவுல் டி சார்ட்ரஸ் (St. Paul de Chartres) அருட்சகோதரிகள் சபையைச் சேர்ந்தவர். அறுவை சிகிச்சை நிபுணரான அவர், அறுவைச் சிகிச்சை அறைகளோ, குளுக்கோஸ் திரவங்களோ, பல சமயங்களில் இரண்டாவது வாய்ப்புகளோ கூட இல்லாத தொலைதூர பகுதிகளில் மருத்துவப் பணியாற்றினார்.
1970-களில் தெற்கு பிலிப்பைன்ஸிலுள்ள லேக் செபு என்ற தொலைதூர கிராமத்தில், அருகிலுள்ள மருத்துவமனைக்கு பல ஆறுகளைக் கடந்து மணிநேரங்கள் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலையில், ஒரு மூங்கில் மேசையின் மீது நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை செய்தார். அப்போது நோயாளியின் உயிரைக் காப்பாற்ற தேங்காய் நீரையே அவர் பயன்படுத்த வேண்டியிருந்தது.
ஆனால் அருட்சகோதரி ஈவாவுக்கு மிகப் பெரிய சவால் நோயாளிகளை அடைவது மட்டுமல்ல; தாம் அங்கிருந்து சென்ற பின்னரும் சிகிச்சை தொடர வேண்டும் என்பதுதான். இந்த நம்பிக்கையே அவரது பணியின் திசையை மாற்றியது. சேவை குறைவாகக் கிடைக்கும் பகுதிகளுக்கு அனுப்பப்படும் ஒரே மருத்துவராக தன்னை நிலைநிறுத்தாமல், அங்குள்ள பழங்குடியின மக்களையே பயிற்றுவித்து “வெறுங்கால் மருத்துவர்கள்” (Barefoot Doctors) என்ற புதிய முயற்சியைத் தொடங்கினார்.
“வெறுங்கால் மருத்துவர்கள் மருத்துவப் பட்டம் பெற்றவர்கள் அல்ல. ஆனால் பொதுவான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பயிற்சி பெற்றவர்கள்,” என்று அருட்சகோதரி ஈவா கூறினார்.
லேக் செபுவில் அவர் முதன்முதலாக 17 பேருக்கு பயிற்சி அளித்தார். சிறிய முயற்சியாகத் தொடங்கிய இந்தத் திட்டம் பின்னர் விரிவடைந்தது. 2005 ஆம் ஆண்டில் மணிலாவிற்கும் இந்தத் திட்டம் பரவியது. இறுதியில் நாடு முழுவதும் உள்ள 110 பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த 274 “வெறுங்கால் மருத்துவர்கள்” அவரது பணியை முன்னெடுத்துச் சென்றனர்.
அவரது பணி பிலிப்பைன்ஸின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களிடையே விரிந்தது. குறிப்பாக 1991 ஆம் ஆண்டு பினடுபோ எரிமலை வெடிப்பால் இடம்பெயர்ந்த ஏட்டா (Aeta) பழங்குடியின மக்களுடன் அவர் பணியாற்றினார். அங்கு மருத்துவச் சேவை என்பது உடல்நலத்தை மட்டுமல்ல; இடம்பெயர்வு, வறுமை மற்றும் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பும் நீண்ட பயணத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது.
அருட்சகோதரி ஈவாவின் பதில் மருத்துவ ரீதியானதோடு மனிதநேயமும் நிறைந்ததாக இருந்தது. மக்கள் மீள்குடியேறும்போது அவர்களுடன் பயணித்தார்; உள்ளூர் தலைவர்களுக்கு பயிற்சி அளித்தார்; உடல் நலத்துடன் மனித மரியாதையையும் மீட்டெடுக்க உதவினார்.
காலப்போக்கில், மீள்குடியேற்றப்பட்ட ஏட்டா சமூகமொன்று உருவானது. இன்று சுமார் 146 குடும்பங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் அங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் பல இளம் தலைமுறையினர் திருமுழுக்கு பெற்றுள்ளனர். இது வெறும் வாழ்க்கை மாற்றத்தை மட்டுமல்ல; அவர்களுடன் வாழ்ந்து பகிரப்பட்ட விசுவாசத்தின் அமைதியான சாட்சியமாகவும் திகழ்கிறது.
1984 ஆம் ஆண்டு இயேசு சபையைச் சேர்ந்த அருட்தந்தை ஜேம்ஸ் ரூட்டருடன் இணைந்து அவர் “அன்னை சமாதானத்தின் திருப்பணி அறக்கட்டளை” (Foundation of Our Lady of Peace Mission) அமைப்பைத் தொடங்கினார். சமூக அடிப்படையிலான சுகாதாரத் திட்டங்களை நிலைநிறுத்தவும், சேவை கிடைக்காத பகுதிகளுக்கு மருத்துவ உதவியை விரிவுபடுத்தவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
1990-களில் அருட்சகோதரி ஈவாவும் அருட்தந்தை ஜேம்ஸ் ரூட்டரும் அமெரிக்காவிற்கு சென்று பல நலத்திட்ட அமைப்புகளிடமும் தனிநபர்களிடமும் நிதி உதவி கோரினர். மருத்துவத் துறையில் இருந்த அவரது சகோதர, சகோதரிகளும் இந்த முயற்சிக்கு துணைநின்றனர்.
இந்த முயற்சிகளின் பலனாக, 1992 ஆம் ஆண்டு பரான்யாகுவேயில் “அன்னை சமாதான மருத்துவமனை” (Our Lady of Peace Hospital) நிறுவப்பட்டது. அதை உருவாக்குவதில் அருட்சகோதரி ஈவா முக்கிய பங்காற்றினார். இந்த மருத்துவமனை பின்னர் மேம்பட்ட மருத்துவச் சேவைகளை மக்களுக்கு வழங்கும் முக்கிய மையமாக வளர்ந்தது.
அருட்சகோதரி ஈவா ஃபிடேலா மாமோவின் வாழ்க்கை, மருத்துவம் என்பது வெறும் சிகிச்சை அளிப்பதல்ல; மக்களைத் தன்னிறைவு பெறச் செய்து, நம்பிக்கையையும் மரியாதையையும் மீட்டெடுக்கும் பணியாகும் என்பதை நினைவூட்டுகிறது.