உழைப்பால் உயர்ந்தவள் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

காலமெல்லாம் தன்னுடன் இருப்பவர் என்று நம்பிய கணவரைத் திருமணமாகிச் சில ஆண்டுகளிலே இழந்தார் தேவி. இரண்டு குழந்தைகளுடன் இருக்க வீடில்லாத நிலையில் வாழ்க்கையே அவருக்குக் கேள்விக் குறியாகிப் போனது. அந்தக் கையறு நிலையிலும் நம்பிக்கையின் ஒளியை மட்டும் அணையாது பாதுகாத்துக் கொண்டார். அரியலூர் மாவட்டம் முடிகொண்டான் கிராமத்தில் பால் முகவர் தேவி என்றால் தெரியாதவர்கள் மிகக் குறைவு.

இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு எப்படி இந்த உலகத்தில் வாழப் போறோம்னு எதுவுமே புரியாமல் இருந்த தேவிக்குக் கணவருக்குச் சேர வேண்டிய ஒரு பகுதி வயலும் சிறிது பணமும் கிடைக்க, அதை வைத்துக்கொண்டு முதலில் குடியிருக்க ஒரு வீட்டைக் கட்டினார். அன்றாடச் செலவுகளுக்கும் குழந்தைகளின் படிப்புக்கும் என்ன செய்ய வேண்டும் எனத் தெரியாமல் பரிதவித்த தேவிக்குக் கறவை மாடுகளை வளர்க்கும் எண்ணம் ஏற்பட்டது. ஏற்கனவே தன் அம்மா வீட்டில் கறவை மாடுகளை வளர்த்த அனுபவம் தேவிக்கு உண்டு, அந்த அனுபவத்திலும் தன்மீது கொண்ட நம்பிக்கையிலும் மூன்று கறவை மாடுகளை வாங்கினார். அதிலிருந்து கிடைக்கும் பாலை அருகில் உள்ள கடைகளுக்குக் கொண்டுபோய் விற்றுத் தன் அன்றாட வாழ்வைக் கழித்தார். அப்போதுதான் ஆவின் நிறுவனத்துக்குப் பால் விநியோகம் செய்யும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. தன் எண்ணத்தின் அடிப்படையில் ஆவின் நிறுவனத்துக்குப் பால் விற்பனை செய்தார்.

மூன்று கறவை மாடுகளுடன் தொடங்கிய இவர் தற்போது 15 கறவை மாடுகளைப் பராமரித்து வருகிறார். தன் கிராமத்தில் உள்ள மற்ற பெண்களையும் ஆவின் நிறுவனத்துக்குப் பால் விநியோகம் செய்ய ஊக்கமளித்து வருகிறார். தேவியின் இந்த முயற்சியால் முடிகொண்டான் கிராமத்தில் தற்போது ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம் ஒன்றைத் தொடங்கினார்கள். தற்போது தன் இரண்டு குழந்தைகளையும் படிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் தேவி.

எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.