இறைவனின் இதயம் | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil
இயற்கை என்பது இறைவனின் இதயம்
இறைவன் நமக்குத் தந்துள்ள மாபெரும் கொடை.
அதனைப் பயன்படுத்துவது நமது உரிமை
பாதுகாப்பது நமது மேலான கடமை.
சிறுவன் ஜானி மாம்பழம் ஒன்றை இரசித்து, ருசித்துச் சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டையைத் தன் தோட்டத்திலே வீசி எறிந்தான். மறுநாள், தன் வகுப்பில் “இயற்கையைப் பாதுகாப்போம்” என்ற பாடம் நடந்த வேளையில் அந்த மாங்கொட்டை நினைவுக்கு வந்தது. "நாம் இயற்கையை அன்பு செய்யவேண்டும். அதற்கு தீங்கிழைக்காமல் பாதுகாக்க வேண்டும்” என்று ஆசிரியர் சொல்லச் சொல்ல, அவன் மனதில், "கடவுளே நான் தூக்கி எறிந்த மாங்கொட்டை கிடைக்க வேண்டும்” என்னும் மந்திரச் சொற்கள் ஒலித்துக் கொண்டேயிருந்தன. எனவே, நாம் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் ஒரு மரக்கன்று நடுவோம் என்று ஆசிரியர் சொல்லி முடித்தவுடன், பள்ளியின் இறுதி மணியும் ஒலித்தது. ஜானி வீட்டிற்கு ஓடோடி வந்து, தன் புத்தகப்பையைத் தூக்கி எறிந்து விட்டு, தோட்டத்திற்கு விரைந்தோடி, கொட்டையைத் தேடினான். அவனுடைய இந்தப் பரபரப்பான செயலைக் கண்டு வியப்புற்ற பாட்டி, அவனுடன் சேர்ந்து தானும் தேடும் பணியில் ஈடுபட்டார். தோட்டத்தில் வேலியிலே அக்கொட்டை தென்பட ஜானிக்கு அளவில்லாத மகிழ்ச்சி. வகுப்பறையில் ஆசிரியர் கூறியதைப் பாட்டிக்கு விளக்கமாகக் கூறினான். இருவரும், 'இயற்கையை அன்பு செய்வோம், பாதுகாப்போம்' என்ற மனஉறுதியோடு தோட்டத்தில் குழி வெட்டி, கொட்டையை ஊன்றி வைத்தனர்.
ஜானி காலை, மாலை எனக் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டான். தினமும் பராமரித்தான், எட்டு நாள்கள் முடிந்தன. அழகிய தளிர் கிளம்பியது. ஜானிக்கு மகிழ்ச்சி கரை புரண்டோட அதனைத் தொட்டு இரசித்தான். தீயது எதுவும் அதனை அணுகா வண்ணம் வேலியிட்டுப் பாதுகாத்து வந்தான். தளிர் கிளம்பி, இலைகள் மேலெழுந்து செடி வளர்ந்தது. இன்னும் பாதுகாப்புக் கூடியது. சிறிது நாள்களுக்குப்பின் மரமாகியது. பாட்டியும் அவனுமாகச் சேர்ந்து, பார்த்து, பாதுகாத்து, இரசித்து வளர்த்த மரம் இன்று பூப்பூத்தது. காய் காய்த்தது, கனி தந்தது. பாதுகாத்து பராமரித்ததின் உச்சம் இதுதான்.
தான் நேசித்த அம்மரத்தின் நிழலிலேயே ஜானின் விளையாட்டுகளும் எல்லாப் பொழுதுபோக்கு நிகழ்வுகளும் அமைந்தன. ஒருநாள் அம்மரத்தின் இலைகளைத் தொட்டு, தன் பாதுகாப்பை அதற்கு உணர்த்திவிட்டு அதனுடன் பேசியபடியே அதன் நிழலில் படுத்தான். அவனது பார்வை தொலைவில் இருந்த மலையின் மேல் பதிந்தது. மரங்கள் நிறைந்த அந்த மலை அவனுக்குள் ஒரு கேள்வியை எழுப்பியது. அக்கேள்விக்குப் பதில் தேடியவனாய்த் தன் பாட்டியை அழைத்தான். “பாட்டி, நான் என் மரத்தை எவ்வளவோ அன்பு செய்கிறேன். பராமரிக்கிறேன், பாதுகாக்கிறேன். ஆனால், இந்த உலகத்தில் எவ்வளவோ மரங்கள் இருக்கின்றனவே, அவற்றையெல்லாம் யார். பாதுகாப்பார்?" என்று கேட்டான்.
பாட்டி சொன்ன பதில் “இயற்கை இயற்கையைப் பாதுகாக்கும்”. அதன் பொருள், இறைவனின் படைப்பாகிய நாம் அனைவரும் இயற்கை. இறைவனால் நமக்குக் கொடுக்கப்பட்ட அனைத்துப் படைப்புகளும், வளங்களும் இயற்கையே. இவை ஒவ்வொன்றையும் மானிடராகிய நாம் அனைவரும் கரம் கோர்த்துப் பாதுகாக்க வேண்டும். நாம் இவற்றைப் பாதுகாத்தால், இயற்கை வளங்கள் நம்மைப் பாதுகாக்கும் என்பதையும் விளக்கிக் கூறினார்.
இயற்கையின் ஒவ்வோர் அரிய காட்சியும், வளங்களும் அதிசயமே. இந்த அதிசயத்தில் மயங்கி, தன்னை இழந்து, மெய் மறந்து, அதன் வழியாக இறைவனுடன் கலந்தவர்தான் நம் தந்தை பிரான்சிஸ் அசிசியார். "இயற்கை படைப்புகளை நாம் நாள்தோறும் பயன்படுத்துகிறோம். அவை இல்லையென்றால் நாம் வாழ முடியாது. அவற்றைப் பாதுகாக்கத் தவறுகின்ற மானுடம் படைத்தவருக்கு எதிராகப் பெரிதும் குற்றம் புரிகிறது" என்று கூறிப் படைப்பனைத்தையும் சகோதர, சகோதரிகளாகப் பாவித்துப் பாடல் பாடுகிறார். அவரின் ஆன்மிகம் நமக்குச் சொல்வது, இயற்கையை, அதன் அழகை மெய்மறந்து இரசிப்போம். இதய ஆவலோடு அதனைப் பாதுகாப்போம். இயல்பாக எழும் உணர்வுகளோடு பயன்படுத்துவோம். இரக்கமின்றி பாழ்படுத்துவதைத் தவிர்ப்போம். “ஆண்டு நடத்துங்கள்” என்னும் படைத்தவரின் ஆணையை நேர்மறையாக்குவோம்.
பார்த்து, பாதுகாத்துப் பயன்படுத்தி நம்மில் படைப்பாற்றலை உருவாக்குவோம். இறைவனும் இயற்கையும் ஒன்றாகட்டும்... ஏனெனில் இறைவனின் இதயமே இயற்கைதான்.